சென்னை புத்தகக் கண்காட்சி நாள் : 6

நடைபாதையில் கீழ்கண்ட நூல்களை அள்ளினேன். மொத்தமாக, ரூ.550.

1) எதிர்ப்பும் எழுத்தும், துணைத்தளபதி மார்க்கோஸ், விடியல்
2) பெரியார்: ஆகஸ்ட் 15, எஸ்.வி. ராஜதுரை, விடியல்.
3) பெரியார் மரபும் திரிபும், எஸ்.வி. ராஜதுரை, தமிழ் முழக்கம்.
4) இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாஸ், விடியல், சூலூர் பதிப்பகம்.
5) பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சல பாரதி, வல்லினம்.
6) கிறித்தவமும் சாதியும், ஆ. சிவசுப்பிரமணியன், காலச்சுவடு.

எங்கிருந்து இந்தப் புத்தகங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றன என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அனைத்தும் புதியவை. இவற்றில் மூன்று, தலையணை புத்தகங்கள். பெரும்பாலானவை விடியலைச் சேர்ந்தவை. ஆறில் ஐந்து புத்தகங்களில், விலை உள்ள பக்கம் அச்சிடப்படவில்லை. ஒருவேளை, பதிப்பகத்தாரின் அனுமதியின்றி அச்சகத்தில் இருந்து வந்திருக்குமோ?

பயன்படுத்தப்பட்ட நூல் ஒன்றையும் வாங்கினேன். நீரத் சவுத்திரி எழுதியது. Scholar Extraordinary. The Life of Friedrich Max Muller. முத்துக்குமாரும் பாலு சத்யாவும் உடன் இருந்தனர். முத்து ஓர் அரசியல் புத்தகத்தை எடுத்தார். அம்பேத்கரின் முழுத் தொகுதிகளையும் வாங்கிவிடவேண்டும் என்றார். பாலு, அழகிய பெரியவனின் தகப்பன் கொடியை வாங்கினார். புத்தகங்களுக்குக் குறைவில்லை, வாசிப்பதற்குத்தான் நேரம் கிடைப்பதில்லை என்றார் பாலு. உண்மை. வாங்கிவைத்திருக்கும் புத்தகங்களை முடித்துவிட்டு பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று இருக்கமுடியவில்லை. ஒரு நல்ல புத்தகத்தை, எந்த வித சலனமும் இல்லாமல் சும்மா பார்த்தபடி கடந்து சென்றுவிடமுடியவில்லை. வாங்கிவந்து வீட்டில் போட்டுவிட்டால்தான் குறுகுறுப்பு அடங்குகிறது. எப்போதாவது படிக்கமாட்டோமா? குறைந்தது, புரட்டவாவது மாட்டோமா? புரட்டவும்கூட முடியவில்லை என்றால்தான் என்ன? நல்ல புத்தகங்கள் நிரம்பிய வீடு என்னும் மனநிம்மதியாவது கிடைக்கட்டுமே.

அரங்கத்தில், கவிஞர்கள் பலர் கவிதை வாசித்துக்கொண்டிருந்தார்கள். நகைச்சுவை பேச்சுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. கவிதைகளை அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. கண்காட்சியிலும் கவி்தைப் புத்தகங்கள் அதிகம் தட்டுப்படவில்லை. நாவல்களும் சிறு கதைகளும்கூட குறைவாகவே வந்திருப்பதாகச் சொன்னார் பாலு சத்யா.

வீ.பா. கணேசன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் துப்பறியும் கதைகளை (The Adventures of Feluda) மொழிபெயர்த்தவர். இதுவரை கிழக்கில் வெளிவந்துள்ள சத்யஜித் ரேயின் படைப்புகள் இங்கே. அடுத்தடுத்து இன்னும் பல நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

விஜயபாரதம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், நித்யானந்த திவ்ய பீடம், இஸ்கான் என்று ஆன்மிகப் பெருங்கடலுக்கு நடுவே கிழக்கு அரங்கம் அமைந்திருப்பதைக் கண்டறிந்து சிலாகித்தார் ஹரன் பிரசன்னா. பெரியார் புத்தகம் இத்தனைக் குறைவான விலையில் கிடைக்கிறதா என்று அதிசயித்தவர், எல்லாம் கிருஷ்ணன் செயல் என்று மேலே காட்டினார்.

அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி, பவா செல்லதுரை, அவர் மனைவி மூவரையும் சந்தித்தேன். கடந்த முறை திருவண்ணாமலை சென்றிருந்தபோது பவாவின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். விருந்தினர்களை உபசரிப்பதற்காகவே பிரத்தியேகமாக, மாடியில் ஓர் அறை அமைத்திருக்கிறார்கள். பஞ்சு மெத்தை, கட்டில். வாசிப்பதற்குப் புத்தகங்கள், இதழ்கள். சுடச்சுட உணவு. திலகவதியுடன் இருந்த இன்னொருவர் (திருவண்ணாமலையில் காவல்துறையில் பணிபுரிகிறார்) தன் மகனை அறிமுகம் செய்துவைத்தார். அவர் என் தீவிர வாசகராம். காஸ்ட்ரோ தொடங்கி விடுதலைப் புலிகள் வரை அனைத்தையும் வாசித்திருந்தார். பேசிக்கொண்டிருந்தோம். திருவண்ணாமலை நினைவுகளை நன்றாகவே கிளறிவிட்டார். நான் வளர்ந்தது திருவண்ணாமலையில். தொடக்கக் கல்வியும் அங்கேதான். அது ஒரு பெரிய கதை. தனியே எழுதுகிறேன். கிரிவலம், விசிறி சாமியார், பெரிய கோவில், சித்த புருஷர்கள், ரமணாஸ்ரமம் என்று சுகம் பிரம்மாஸ்மி வகை ஆன்மிக அனுபவங்களை அடுக்கப்போகிறேன் என்று ஹரன் பிரசன்னா நினைக்கவேண்டாம்.

பெண் ஏன் அடிமையானாள் பாதி வாசித்து முடித்திருக்கிறார் அனுஷா. அவர் கருத்து. ஒரு கறுப்பினத்தவரின் வலியை இன்னொரு கறுப்பினத்தவரால் மட்டுமே அழுத்தமாகப் பதிவு செய்யமுடியும் என்று நினைத்திருந்தேன். பெரியாரால் எப்படி பெண்களின் பிரச்னைகளை இத்தனை ஆழமாக அலச முடிகிறது? நிச்சயம் அவர் ஒரு பெரிய சிந்தனையாளர்தான். ஆனால், ஆயிரம் சொன்னாலும் இறைநம்பிக்கையை அவர் இத்தனை கடுமையாக விமரிசித்திருக்கக்கூடாது. என்ன சொல்கிறாய்? இதை முடி, நிறைய பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன்.

3 comments:

பாலா said...

அருமை. உங்கள் தினசரி புத்தக கண்காட்சி ரிப்போர்ட் ரசிக்கு்ம்படி உள்ளது.

Krishnan said...

"வாங்கிவைத்திருக்கும் புத்தகங்களை முடித்துவிட்டு பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று இருக்கமுடியவில்லை. ஒரு நல்ல புத்தகத்தை, எந்த வித சலனமும் இல்லாமல் சும்மா பார்த்தபடி கடந்து சென்றுவிடமுடியவில்லை. வாங்கிவந்து வீட்டில் போட்டுவிட்டால்தான் குறுகுறுப்பு அடங்குகிறது. எப்போதாவது படிக்கமாட்டோமா? குறைந்தது, புரட்டவாவது மாட்டோமா? புரட்டவும்கூட முடியவில்லை என்றால்தான் என்ன? நல்ல புத்தகங்கள் நிரம்பிய வீடு என்னும் மனநிம்மதியாவது கிடைக்கட்டுமே." 100% உண்மையான வார்த்தைகள், நான் 20 புத்தகங்கள் வாங்கினேன், சந்தர்பம் கிடைத்தால் இன்னும் 10-15 புத்தகங்கள் வாங்கலாம்னு ஆசை.

ஹரன்பிரசன்னா said...

//பெரியாரால் எப்படி பெண்களின் பிரச்னைகளை இத்தனை ஆழமாக அலச முடிகிறது? நிச்சயம் அவர் ஒரு பெரிய சிந்தனையாளர்தான். //

தோழர், உங்கள் கருத்து அனுஷாவின் கருத்தாக வெளியாகியிருக்கிறது. திருத்தவும்.