பஸ் இல்லை. வீட்டில் வேலை. புக் படிச்சு என்ன ஆகப்போகுது? இருக்கிற செலவையே சமாளிக்கமுடியலே, இதுல புத்தகங்களா? தேவையான புக்ஸை ஏற்கெனவே வாங்கியாச்சு. பொருளாதார வீழ்ச்சி. வாங்கும் திறன் குறைந்துவிட்டது. விடுமுறையில் வெளியூருக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரம் இல்லை. டிவி. மழை. வெயில். மந்தம்.
ஒரு பக்கம் காரணங்கள் அடுக்கப்பட்டாலும், மறு பக்கம் (கிழக்கில்) மாயவலை, நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம், துப்பறியும் சாம்பு போன்ற குண்டு புத்தகங்கள் விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் திரளவில்லை என்பது நிஜம்.
சத்யம் பிரச்னை முளைத்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது இன்னுமா புத்தகம் போடவில்லை என்று மெய்யான அக்கறையுடன் ஒருவர் கிழக்கில் வந்து கேட்டுவிட்டுப்போனதாக நண்பர் ஹரன் பிரசன்னா சொன்னார். மினி மாக்ஸில் இது சாத்தியம். பொருளாதார வீழ்ச்சி பற்றிய புத்தகம் ஒன்று வெளிவரவிருக்கிறது. இதில், மென்பொருள் துறை பற்றியும் அலசப்பட்டிருக்கிறது.
ஆழி பதிப்பகம் நம்பிக்கையளிக்கிறது. செய்நேர்த்தியுடன் சில புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பாரதியில் ஜோதி பாசுவுக்கும் பகத் சிங்குக்கும் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது. Scholastic அழைத்துச்சென்று பொம்மை புத்தகங்களைக் காட்டினார் ப்ராடிஜி சுஜாதா. ரசிக்கும்படி இருந்தன.
பழைய கடையில் வாங்கிய புத்தகங்கள். பிர்சா முண்டா, கே.எஸ். சிங், விடியல். (நான் படிக்க விரும்பிய முக்கியமான புத்தகம். பிரிட்டனுக்கு எதிராகப் போராடிய பழங்குடி இனத்தலைவர் இந்த பிர்சா முண்டா). குர்து தேசிய இன வரலாறு, ஹாசன் அர்ஃபா, தமிழோசை. முரண்பாடு பற்றி, மாசேதுங், சரவண பாலு பதிப்பகம். தேம்பி அழாதே பாப்பா, கூகி வா தியாங்கோ, தமிழில்: எஸ்.பொ. மொத்தமாக 150 ரூபாய். மாஓ தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவப் படைப்புகளை விசாரித்துவிட்டு உள்ளே போனேன். வந்து பார்த்தால் காணவில்லை. அந்த அட்டை புக்கா? நூறுக்குத் தள்ளிவிட்டுட்டேன் என்றார் கடைக்காரர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஒரு நாள் விடாமல் நீங்கள் எழுதும் புக் ஃபேர் அனுபவங்களை தொகுத்து வைத்திருக்கிறேன்.
Post a Comment