இன்று வாங்கிய புத்தகங்கள். அயோத்தி பற்றிய கட்டுரை தொகுப்பு (Anatomy of a Confrontation, The Babri Masjid-Ram Janmabhumi Issue, Edited by S. Gopal, Penguin). இரண்டாம் உலகப் போரை மையப்படு்த்தி ஒரு நாவல் (The Boy in the Stripped Pyjamas, John Boyne, Black Swan). ஒரு மகாராஷ்டிர தலித் இளைஞரின் சுயசரிதை (அனார்யா, சரண்குமார் லிம்பாலே, விடியல்). தொழிற்சங்கங்கள் பற்றி கார்ல் மார்க்ஸ், ஏ. லாஸோவஸ்கி, அலைகள். நான்கும் சேர்ந்து எழுபது ரூபாய். நடைபாதையில் கிடைக்கும் அத்தனை நல்ல புத்தகங்களையும் அநேகமாக வாங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். ஏதாவது புதிதாக வந்தால்தான் உண்டு.
ஜீவாவை நினைவுகூர்ந்து பொன்னீலன் உரையாற்றிக்கொண்டிருந்தார். கவனம் குவிக்கமுடியவில்லை. ஒரேயொரு நிகழ்ச்சியையாவது முழுக்க கவனிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. திரையரங்கில் தினமும் ஏதேதோ படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இரானிய, ஆங்கில, தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள். ஒன்றையாவது முழுக்க பார்க்க நினைத்தேன். முடியவில்லை.
குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் பல வெளிவந்துள்ளன. இ.எம்.எஸ். (இந்தியா), ரொமிலா தாப்பர் (கட்டுரைகள்), டிடி கோசாம்பி (சில கட்டுரைகள்), தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (இந்திய தத்துவ இயல் ஓர் எளிய அறிமுகம் மற்றும் சில ஆராய்ச்சி கட்டுரைகள்), மார்க்கோ போலோ (பயணக் குறிப்புகள்), மாவோ (முரண்பாடுகள் பற்றி). இன்னமும் நிறைய. சரித்திரத்தின் மீது ஆர்வம் திரும்பியிருக்கிறது. குறிப்பாக, இந்திய சரித்திரம். பண்டைய இந்தியா, புராதன இந்தியா, இந்திய வரலாறு, இந்திய மக்கள் என்று பல நூல்கள்.
நண்பர் முத்துராமன் வந்திருந்தார். கிழக்கில் பணியாற்றியவர். தற்போது, தமிழக அரசியல் என்னும் பத்திரிகையில் இருக்கிறார். இலக்கிய ஆர்வலர். அலெக்ஸ் ஹெய்லியின் வேர்கள் வாங்கினார். பிறகு, கண்ணதாசன் வரிசை(அலுவலகத்துக்காக). பொடா பற்றி ஒரு நூல். அம்பேத்கர் தொகுதிகளில் சில. திராவிடர் கட்சி வரலாறு. மிர்தாவின் புத்தகம். காந்தியின் இந்துமதம்.
எலுமிச்சை தேநீர் நன்றாக இருக்கிறது ஆனால் சர்க்கரையை கொட்டிக்கொடுக்கிறார்கள். பாப்கார்ன் பிடித்திருக்கிறது. கூட்டம் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment