December 13, 2008

சே, காஸ்ட்ரோ, லெனின் - சில குறிப்புகள்

‘...ஒருபக்கம் வெடிமருந்துகள், ஆயுதங்கள். மற்றொரு பக்கம் மருந்துகள். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே நான் சுமந்துசெல்லவேண்டும். இப்படி ஒரு சங்கடமான சூழ்நிலையில் நான் மாட்டிக்கொள்வது இது தான் முதல் முறை. நான் இப்போது என்ன செய்யவேண்டும்? ஒரு மருத்துவனாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு புரட்சிக்காரனாகவா? இரண்டு பெட்டிகளுமே என் கால்களுக்கு கீழே கிடக்கின்றன. பேசாமல் கீழே குனிந்து ஆயுதங்கள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு கரும்பு தோட்டத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன். ஃபாஸ்டினோ முழுங்காலிட்டு அமர்ந்தபடி இயந்திரத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கிறான். தோழன் அல்பெண்டோஸா என்னோடு கரும்புத் தோட்டத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறான்.

திடீரென்று துப்பாக்கி வெடிக்கத்தொடங்கியது. கணநேரத்திற்கும் குறைவான ஒரு பொழுதில் அது நடந்துவிட்டது. என் நெஞ்சில் வலி. என் கழுத்தில் காயம். நான் இறந்துவிட்டேனோ என்று கூடத் தோன்றியது. அல்பெண்டோஸாவின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. இது .45 காலிபர் துப்பாக்கியின் வேலை! ’என்னே சாகடித்துவிட்டார்களே!’ என்று அல்பெண்டோஸா கத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு வலியும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தது. உடனே தனது துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்தொடங்கினான். நான் அப்படியே தரையில் படுத்துக்கொண்டேன். நூன் ஃபாஸ்டினோவிடம் கத்தினேன். ’என் கதையை முடித்துவிட்டார்கள்!’ ஃபாஸ்டினோ தொடர்ந்து சுட்டுக்கொண்டேயிருந்தான். அவன் ஒரு முறை என்னைத் திரும்பிப்பார்தான். அவனைப் பொறுத்தவரையில் நான் இறந்துவிட்டேன்....’

- சே குவேரா
Episodes of the Cuban Revolutionary War 1956-58, by Ernesto Che Guevara. In the Militant, Vol. 59, no. 48, 25 December 1995


‘ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி. ஏகாதிபத்தியம் தழைத்துவிட்டால் தனி மேலாதிக்கம் நிலைபெற்றுவிடும். சர்வதேச அமைப்புகள் உலகத்தின் பிரதேசங்களை கூறுபோடத் தொடங்கும். உலகின் வளமான பகுதிகள் அனைத்தையும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் பிரித்தெடுத்துக்கொள்ளும். சிறிய பலகீனமான நாடுகளை, பெரிய பலம்பொருந்திய நாடுகள் ஒடுக்கி ஆளும். ஒப்பீட்டளவில், மிகச்சில நாடுகளே ஏகாதிபத்தியத்தன்மையைக் கொண்டிருக்கும் என்றாலும் அவை பலம் பொருந்தியதாக இருக்கும்... ஏகாதிபத்தியம் என்பது ஒட்டுண்ணியைப் போன்றது... அது மிக விரைவாக வளரும். மிக விரைவாக தனது அழிவைச் சந்திக்கும். ஆனால் ஏகாதிபத்தியத்தியம் உதிர்ந்தால் முதலாளித்துவமும் உதிர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது. ஏகாதிபத்தியம் உயிர்ப்புடன் இருக்கும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அழிவுகள் ஏற்படுவதுண்டு. முதலாளித்துவத்தின் சில கூறுகள் சேதமடையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், முதலாளித்துவம் வளர்ந்துகெண்டேதானிருக்கிறது. முன்பை விட வேகமாக. அதிவேகமாக...’

(லெனின், ஏகாதிபத்தியம்: ’முதலாளித்துவத்தின் வளர்ச்சியடைந்த நிலை’ எனும் நூலிலிருந்து)


‘...எனது குழந்தைப் பருவத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடைய குழந்தைகளுடன் சுற்றவும் விளையாடவும் செய்தோம். அதைப் பற்றி நான் பிற்காலத்தில் நிறைய யோசித்திருக்கிறேன். நான் எனது குழந்தைப் பருவத்தில் பார்த்ததை எனது வாழ்நாள் முழுவதிலும் நினைவில் வைத்துள்ளேன். அந்தக் காட்சிகள், அந்த நினைவுகள், அதன் பதிவுகள் ஆகியவைதான் ஒருவேளை அவர்களிடம் எனது அனுதாபத்தையும், ஆதரவான போக்கையும் தோற்றுவித்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல மாணவனா? இல்லை, நான் நல்ல மாணவனில்லை. இன்றைய தலைமுறையினருக்கு நான் நல்ல மாணவனில்லை. எனது வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது எனது மனம் வேறெங்கோ சுற்றிக்கொண்டிருக்கும். ஆசிரியர் ஒரு பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது, யார் யாருக்கு என்ன தெரியும் - மலைகளைப் பற்றி, விளையாட்டு பற்றி என்ன தெரியுமென்றும் அல்லது மற்ற இளைஞர்கள் என்ன சிந்திப்பார்களோ அவை பற்றி என் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்...’

- செப்டம்பர் 4, 1995இல் ஆலா மாக்னா பெருமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையிலிருந்து.

‘... மனித சமூகத்தை, வரலாற்று நடைமுறைகளை மற்றும் நான் தினமும் கண்ட பாகுபாடுகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். வர்க்க பேதங்களை, அதாவது ஏழைகள் பட்டினியாகவும், மற்றவர்கள் தேவைக்கு மேல் வைத்திருப்பதையும் புரிந்து கொள்ள உங்களுக்கு வரைபடமோ, ஒரு தொலைநோக்கியோ தேவையில்லை. என்னைவிட யாரால் இதை நன்றாக அறியமுடியும்? நான் இந்த இரண்டு நிதர்சனங்களையும் அனுபவித்திருக்கிறேன். இன்னும் சொன்னால், அவை இரண்டின் பங்காகவும் பலிகடாவாகவும் நான் இருந்தேன். நான் எப்படி எனது அனுபவங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பேன்? ஒரு நிலச்சுவாந்தாரின் நிலை மற்றும் நிலமற்ற, வெறுங்காலுடனான விவசாயியின் நிலையை எப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பேன்?...’

- ஃபிடல் காஸ்ட்ரோ

‘...ஒரு மார்க்சிஸ்ட்டாக மாறுவதற்கு முன், எங்கள் நாட்டு வரலாற்றையும் மார்த்தியையும் அதிகம் போற்றுபவனாக இருந்தேன். நான் மார்த்தியின் சீடனாக இருந்தேன். அதேபோல் இருவரும் ஒருவரையொருவர் அதிகம் பிரதிபலித்ததாக நினைக்கிறேன். மார்த்தி ஒருவேளை மார்க்ஸின் சூழ்நிலையில் வாழ்ந்திருந்தால் மார்க்ஸ் போன்ற அதே எண்ணங்களுடன் அதே வழியிலும் வாழ்ந்திருப்பார் என முழுமையாக நான் நம்புகிறேன். மார்த்தி மார்க்ஸ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவரைப் பற்றி ஒரு முறை கூறும்போது ‘அவர் பலவீனமானவர்களுடன் சேர்ந்தார். எனவே மதிக்கப்பட வேண்டியவர்!‘ என்றார்.’

- ஃபிடல் காஸ்ட்ரோ

‘.. எனது புரட்சி வாழ்க்கையிலும், புரட்சிக் கொள்கைகளிலும் நான் மக்களை முழுமையான சுய தியாகத்தோடும் உண்மையோடும் கடுமையான நிலைகளையும், கடுமையான தேர்வுகளையும் சந்தித்தேன். அவர்கள் பரிசுபெறும் எண்ணத்துடனோ, தண்டனை பெறும் எண்ணத்துடனோ செயல்படவில்லை என்பது பாராட்டத்தக்கது. பற்றுதல்தான் தியாகிகளை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். பலன் பெற நினைப்பதாலோ, தண்டனைக்கு பயப்படுவதாலோ ஒருவர் தியாகியாகி விடுவதாக நான் நினைக்கவில்லை. இந்தக் காரணத்துக்காக ஒருவர் வீரராக மாறிவிடுவதில்லை...’

- ஃபிடல் காஸ்ட்ரோ

2 comments:

தமிழ் நாடன் said...

விடுதலைப்புலிகள் என்ற உங்கள் உங்கள் புத்தகத்தை வாசித்தேன். ஒரு அதிகம் சிக்கலான சுவாரசியமில்லாத விடயஙகளைக்கூட ஒரு துப்பறியும் நாவல் போன்று அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.ஒரே மூச்சில் வாசித்துவிட்டுத்தான் வைத்தேன். வாழ்த்துக்கள்.

Unknown said...

Marudhan's comments about Largarh has been written without knowing fully the developments there. It has been found that those who attacked CPM leader's house there were speaking Hindi. Further, CPM is not strong in Lalgarh. JMM is holding those Panchayats.It will be better if Marudhan writes his comments only after knowing fully well about the issues-Ramesh