January 28, 2015

ஒரு தென் ஆப்பிரிக்க எழுத்தாளரின் கதை

No comments:
சமீபத்தில் நடந்துமுடிந்த தி இந்து இலக்கிய விழாவில் (லிட் ஃபார் லைஃப்) டேமன் கால்கட் (Damon Galgut) என்னும் தென் ஆப்பிரிக்க எழுத்தாளரிடம் பிரத்தியேகமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ராஜ்தீப் சர்தேசாய், சிவபெருமான் புகழ் அமிஷ், சேத்தன் பகத் போன்றவர்களைப்  போட்டிப்போட்டுக்கொண்டு மொய்த்து,  கையெழுத்து வாங்கித் தீர்த்த பெரும்கூட்டம், அழுக்கு ஜீன்ஸ், காலர் அற்ற டிஷர்ட் அணிந்திருந்த, கூச்சத்துடன் ஒதுங்கி, ஒதுங்கி நின்ற அந்தத் தென் ஆப்பிரிக்கரைக் கண்டுகொள்ளாதது ஆச்சரியமூட்டவில்லை.

'பேசுவது சங்கடமாகவே இருக்கிறது. தனிமையில் அமர்ந்து எழுதுவதுதான் சுகமானது. ஒரு எழுத்தாளர் இப்படி இருப்பதுதானே இயல்பானதும்கூட?' என்று புன்னகைத்தார் கால்கட். ஆனால் அமர்வுகளின்போது தன் கருத்துகளை ஆணித்தரமாகவே அவர் எடுத்து வைத்தார். இந்தியா தனக்கு இன்னொரு வீடு என்றார். பலமுறை தொடர்ச்சியாக இந்தியா வந்து சென்றிருக்கிறார். கோவாவில் நீண்ட காலம்  தங்கியிருக்கிறார். 'சென்னையைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நேரம் இங்கே செலவிடுவது இதுவே முதல் முறை' என்றார்.

வாசிப்பின்மீது ஆர்வம் மட்டுமல்ல, நம்பிக்கையும் கொண்டிருக்கிறார் கால்கட். 'நாவல் வாசிப்பது உங்களை மேம்படுத்தும். புத்தகம் படிக்கும் ஒருவருக்கும் புத்தகம் படிக்காத ஒருவருக்கும் இடையிலான வேறுபாட்டை நீங்கள் சுலபமாகக் கண்டறிந்துவிடலாம். வாசிக்கும் பழக்கம் ஒருவருடைய குணாதிசயங்களை மாற்றியமைக்கிறது, அல்லது தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன்.'

நாவல் மட்டும்தானா? அரசியலோ வரலாறோ வாசித்தால் ஒருவர் மாறமாட்டாரா? 'புதினத்தின் தாக்கமும் புதினமல்லாத எழுத்து வகையின் தாக்கமும் ஒன்றல்ல. கற்பனையின் ஆற்றல் தனித்தன்மை கொண்டது.  அது உங்களை விரிவுபடுத்தும். உங்களை யோசிக்க வைக்கும்.  உங்கள் பண்புகளை மாற்றும் தன்மை அதற்கு உண்டு. ஒருவகையில் உங்களை அது பிசைந்து உருவாக்குகிறது என்றுகூடச் சொல்லலாம். வரலாறோ அரசியலோ இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை.'

ஓர் உதாரணத்தையும் சொன்னார். 'நெல்சன் மண்டேலாவுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். மண்டேலாவுக்குப் படிக்கும் வழக்கம் இருந்தது. ஜார்ஜ் புஷ் ஏதேனும் படித்திருக்கிறாரா என்ன?'

பிறகு மண்டேலா பற்றிப் பேச்சு திரும்பியது. ஆட்சியில் அமர்வதற்கு முன்னால் மண்டேலா சாதித்ததையும் பொறுப்பேற்ற பிறகு அவரால் ஏன் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யமுடியாமல் போனது என்பது பற்றியும் சிறிது நேரம் விவாதித்தோம். ட்ரூத் அண்ட் ரிகன்ஸைலேஷன் கமிஷன் எங்கே சறுக்கியது, ஏன் மண்டேலாவால் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தமுடியவில்லை என்பதைப் பற்றிய விவாதங்கள் இப்போதும் அங்கே நடைபெற்றுவருகிறது என்றார். 'தென் ஆப்பிரிக்க இளைஞர்கள் இன்று மண்டேலாவைக் கடவுளாகக் காண்பதில்லை. அவருடைய குறைபாடுகளைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள், அவர் இன்னமும் நிறைய செய்திருக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.'

பெருமாள் முருகன் எதைப் பற்றி எழுதினார், ஏன் அவரை எதிர்க்கிறார்கள் என்றார். 'ஒரு நாவலை எதற்காகத்  தடை செய்யவேண்டும் என்று கோருகிறார்கள்? ஒரு கற்பனைப் படைப்பை எதற்காகத் தடை செய்யச் சொல்கிறார்கள்? இதை என்னால் ஏற்கவே முடியாது.'

சினுவா ஆச்சிபி, கூகி வா தியாங்கோ போன்றவர்களின் படைப்புகள் தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமானவை என்று நான் சொன்னபோது ஆச்சரியமடைந்தார்.தென் ஆப்பிரிக்காவில் இடதுசாரி சிந்தனைகள் வளர்ச்சி பெற்று வருவதாகச் சொன்னார். குறிப்பாக, படித்த இளைஞர்கள் மத்தியில் மார்க்சியம் பிரபலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஈ.எம். ஃபோஸ்டர் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். புதினம்தான் அவருடைய எழுத்துகளின் மையம் என்றபோதும் அரசியலும் வரலாறும் விரிவாகவே வாசித்திருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டேன். தீர்மானமான அரசியல் பார்வையும் அவரிடம் இருந்தது.

டேமன் காமட் எழுதிய In a Strange Room என்னும் நாவல் 2010ம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. நாவல், சிறுகதைகள், நாடகம் என்று அவருடைய பல புத்தகங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

வீட்டுக்கு வந்து நிதானமாக விக்கிபீடியாவில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஆறு வயதானபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பல ஆண்டுகளை மருத்துவமனையில் கழித்திருக்கிறார். அப்போது அவருக்குப் பல கதைகள் படித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. கேட்கக் கேட்க ஆர்வம் அதிகரித்திருக்கிறது. நோயும் வலியும் மறந்துவிட புதிய கற்பனை உலகுக்குள் நுழைந்திருக்கிறார். இன்றுவரை அவர் எழுதிக்கொண்டிருப்பதற்குக் காரணம் தொடக்ககால மருத்துவனை வாழ்க்கையும் புற்றுநோயும் தீராத அந்த வலியும்தான். தான் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அவர் வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

துண்டுத் துண்டாக அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அனைத்தும் இப்போது ஒன்று சேர்ந்து ஒரு சித்திரத்தை அளிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

January 16, 2015

பெருமாள் முருகன் - கருத்துரிமை - பைரஸி

No comments:
தி இந்துவின் Lit for Life இலக்கிய விழாவில் முதல் முறையாக நேற்று கலந்துகொண்டேன். காலை 10 மணி தொடங்கி மாலை வரை நீண்ட நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் எழுதுகிறேன். இப்போதைக்கு ஒரே ஒரு அமர்வு குறித்து மட்டும் சில வார்த்தைகள்.

பெருமாள் முருகனையும் அவருடைய சர்ச்சைக்குள்ளான நாவலையும் முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு விவாதத்தில் (Free Speech in Peril : The issues at stake) இருந்து சில பகுதிகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

என். ராம், நீதிபதி சந்துரு, ஆ.இரா. வேங்கடாசலபதி, சஷி குமார் ஆகியோர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர். 
  • பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூல் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை சமீபத்திய நிகழ்வுகளின் காலவரிசையோடு ஆ.இரா. வேங்கடாசலபதி வழங்கினார்.
  • ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபிறகே நூல் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. எனவே பிரச்னையின் தொடக்கப்புள்ளி தமிழ்நாடு அல்ல, டெல்லி. அங்கு இதற்கெனவே செயல்படும் ஓர் அமைப்பு தங்களுக்குப் பிடிக்காத அனைத்தையும் தடை செய்யச்சொல்லி பத்திரிகை அலுவலகங்களையும் எழுத்தாளர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. பெருமாள் முருகனின் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் என்று அங்கிருந்தபடியே தூண்டிவிட்டவர்கள் இவர்கள்தாம் என்றார் ஆ.இரா. வேங்கடாசலபதி.
  • இப்படி பொதுவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை; அவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்தான் என்று தெளிவாக அறிவித்தார் என். ராம். பெருமாள் முருகனுக்கும் அவருடைய புத்தகத்தை எதிர்த்தவர்களுக்கும் இடையில் 'அமைதியை' ஏற்படுத்துவதற்காக அரசு அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைக் கட்டப்பஞ்சாயத்து என்றுதான் அழைக்கமுடியும்.
  • பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்னும் அறிவிப்பை உணர்ச்சிவசப்பட்டு அவர் எடுத்த முடிவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவரை மீண்டும் எழுதச்சொல்லி நாம் கூட்டாகக் கேட்டுக்கொள்ளவேண்டும். மாதொருபாகனை தொடர்ந்து பதிப்பிக்கவேண்டும் என்றார் என்.ராம். (இதற்கான முயற்சிகளை ஆ.இரா போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்).
  • இது உடனடியாகச் சாத்தியமில்லை; பெருமாள் முருகனுடனான ஒப்பந்தம் அதனை அனுமதிக்காது. தவிரவும் அவர் என் நீண்டகால நண்பர் என்றார் காலச்சுவடு பதிப்பாசிரியர், கண்ணன். ஆனால், உங்களில் யாராவது வேறு பெயரில் மாதொருபாகனை பைரேட் செய்து இணையத்தில் ஏற்றினால் அதை நான் தடுக்கமாட்டேன் என்றார். 
  • மாதொருபாகன் தவிர பெருமாள்முருகனின் பிற புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்றும் கண்ணன் அறிவித்தார். (இணையம் வழியாக மாதொருபாகன் ஆங்கில நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது.)
  • இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவது முதல் முறையல்ல; கடைசி முறையாகவும் இருக்கப்போவதிதல்லை என்றார் நீதிபதி சந்துரு. சில உதாரணங்களையும் குறிப்பிட்டார். அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாட (உண்மையில் அது பிரபாகரனின் பிறந்தநாள்) தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ நீதிமன்றத்தை நாடியபோது நீதிபதி அவரிடம் கேட்டாராம். 'உங்கள் கருத்துரிமை மீறப்படுகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் டேம் 99 படம் வெளியிடக்கூடாது என்று நீங்கள்தான் சொன்னீர்கள். அது மட்டும் கருத்துரிமை மீறல் இல்லையா?' இரண்டு நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் (இந்தியாவில்?)  கருத்துரிமை விஷயத்தில் ஒரே போக்கைத் தொடர்ந்து கடைபிடித்துவருகின்றன என்றார் சந்துரு. ஒன்று அரசாங்கம். பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று எப்போது, யார் கேட்டாலும் தொடர்ந்து மறுத்துவிடுவார்கள். அடுத்தது, நீதிமன்றம். எப்போதும் அரசாங்கத்தின் அனுமதியை மறுத்து சந்திப்புக்கு அனுமதி வழங்குவார்கள்.
  • இந்துத்துவ, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் இப்படி எழுத்தாளர்களின் கருத்துரிமையைப் பறிப்பதை வைத்துப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் தோல்வியடைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும் என்றார் சந்துரு.  (பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு என். ராம் அதனை வரவேற்று, பகிர்ந்துகொண்டார்).
  • மேடையில் பேசிய அனைவரும் ஒரே குரலில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒன்று, பெருமாள் முருகனுக்கு. தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு இந்தப் போராட்டத்தின் நாயகனாக முன்வந்து வழிநடத்துங்கள். நீங்கள் இல்லாவிட்டால் இந்தப் போராட்டம் முழுமை அடையாது. மேலும், நீங்கள் அச்சப்பட்டு எழுத்தைத் துறப்பது அறம் அல்ல. இரண்டாவது கோரிக்கை அனைவருக்குமானது. உங்களுக்கு ஒவ்வாத விஷயங்களைப் படிக்கவோ பார்க்கவோ கேட்கவோ நேர்ந்தால், உடனே அவற்றைத் தடைசெய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைத்துக் கருத்துகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். அதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. 
இதுதான் என்னுடைய கருத்தும். பிறகு, விரிவாக எழுதுகிறேன்.