December 23, 2008

ஒரு கோப்பை சூஃபி

திங்கள் அன்று இரண்டு புத்தகங்கள் கிழக்கு மொட்டை மாடியில் அறிமுகப்படுத்தப்பட்டன. பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்த வோல்ட்டேரின் கேண்டீட். அறிமுகப்படுத்தி உரையாடினார் மாலன். நாகூர் ரூமியின் சூஃபி வழி. பா. ராகவன் அறிமுகப்படுத்தினார்.

சூஃபிஸத்தை மத நோக்கில் அணுகவேண்டியதில்லை, அது எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கை முறை என்றார் பாரா. ஆனாலும், விவேகானந்தர், பரமஹம்ஸர், ஆண்டாள் என்று அவர் சொன்ன உவமைகள் அனைத்திலும் இந்து மதக்கூறுகள் இடம் பெற்றிருந்தன. இவர்கள் அனைவரும் சூஃபிகள்தான் என்றார் அவர்.

இஸ்லாம் தொடங்குவதற்கு முன்னரே சூஃபிஸம் (அப்போது இந்தப் பெயர் இல்லை) அறிமுகமாகிவிட்டது என்றும் இஸ்லாம் தழைத்தபிறகும் சூஃபி தனியே வளர்ந்துகொண்டுதான் இருந்தது என்றும் குறிப்பிட்டார் நாகூர் ரூமி. இஸ்லாத்தில் இருந்து சூஃபிஸத்தைத் தனியே பிரித்தெடுக்க எப்போதும் முயற்சிகள் நடந்துவந்திருக்கின்றன.

அன்று நடைபெற்ற விவாதங்கள் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு சூஃபியும் ஒவ்வொரு விதமாக உலகத்தை அணுகியிருக்கிறார். அவர்கள் பார்வை வேறுபடுகின்றன. அவர்கள் முன்வைக்கும் தத்துவம் வெவ்வேறானவை. பௌத்தத்தோடு ஜென் தொடர்பு கொண்டிருப்பது போல், இஸ்லாத்தோடு சூஃபி தொடர்புகொண்டிருக்கிறது. சார்ந்திருக்கிறதா என்பது கேள்விக்குரியது. சூஃபி இறை நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், பொதுவான சடங்குகளை, சம்பிரதாயங்களை, கற்பிதங்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது. பரிகசிக்கிறது. சின்ன சின்ன கதைகள் மூலம் சில எளிமையான தத்துவங்களைக் கட்டமைக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து மதங்களிலும் நாத்திகக் கூறுகள் அடங்கியிருக்கின்றன. இந்து மதத்தின் மீது பற்றுள்ளவர்களில் சிலர் சிலை வழிபாட்டை நிராகரிக்கிறார்கள். சம்பிரதாயங்களை, சடங்குகளை நிராகரிக்கிறார்கள். முருகன், ராமன் எல்லாம் சும்மா ஆனால் மேலான பரம்பொருள் ஒன்று அங்கே உண்டு என்று வானத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கோவிலுக்குப் போய்தான் வணங்கவேண்டும் என்றில்லை, எங்கும் இறைவன் வியாபித்திருக்கிறார் என்கிறார்கள்.

காந்தி, திலகர், விவேகானந்தர் ஆகியோர் இந்து மதத்தை சீர்திருத்த முயன்றவர்கள். ஓவ்வொரு மதத்திலும் இப்படிப்பட்ட தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். இஸ்லாம் உள்பட. மதம் என்னும் நிறுவனம் வளத்துடனும் பலத்துடனும் நீடித்து வாழ இதுபோன்ற சீர்திருத்தங்கள் அவ்வப்போது தேவைப்படுகின்றன. Dogmatic ஆக இருந்தால் வளர்ச்சி தடைபடும். அந்த வகையில், மதவாதிகளின் நோக்கமும் சீர்திருத்தவாதிகளின் நோக்கமும் ஒன்றேதான். மதம் தழைக்கவேண்டும். எப்படித் தழைக்கவேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு.

சீர்திருத்தப்பட்ட மதம், சீர்திருத்தப்படாத மதம். இரண்டையும் நான் நிராகரிக்கிறேன். சூஃபி வழி, கேண்டீட் இரு நூல்களையும் பற்றி பின்னர் இங்கே விரிவாக எழுதுகிறேன்.

No comments: