February 16, 2009

ஹியூகோ சாவேஸின் வெற்றி


சில முக்கிய அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு ஏற்ப அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைக்கலாமா என்று கேட்டு 2007ல் வெனிசூலாவில் கருத்துக் கணிப்பு தேர்தல் நடத்தப்பட்டது. வேண்டாம் என்று மக்கள் வாக்களித்தார்கள். கடந்த ஞாயின்று மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த முறை சாவேஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.

வெனிசூலாவில் சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது ஹியூகோ சாவேஸின் கனவு. இது சாத்தியமாகவேண்டுமானால் 2013ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் சாவேஸ் மூன்றாவது முறையாகப் போட்டியிடவேண்டும். நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இதை அனுமதிக்காது. ஒருவருக்கு இரு வாய்ப்புகள் மட்டுமே.

செய்வதற்கு இன்னும் நிறைய பாக்கியுள்ளது. மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். நிலச்சீர்திருத்தம் பெரிய அளவில் வெற்றிபெறவேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகளாவது அளித்தால்தான் என்னால் இவற்றை சாதிக்கமுடியும். ஆகவே, அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும். உங்கள் அனுமதி தேவை. சாவேஸின் இந்தக் கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இனி, வெனிசூலாவில், யாரும் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆட்சியைத் தொடரலாம். இதெப்படி ஜனநாயக முறையாகும் என்கிறார்கள் சாவேஸ் எதிர்ப்பாளர்கள். சாவேஸின் சோஷலிச சீர்திருத்தங்களை அங்குள்ள தனியார் நிறுவனங்கள் தீவிராக எதிர்த்துவருகின்றன. இன்னும் பத்து ஆண்டுகள் சாவேஸா, ஐயோ தாங்காது என்று அலறுகிறார்கள். சாவேஸ் தயாராகிவிட்டார். போட்டியிடுவதற்கு. போராடுவதற்கு.

(மோதிப் பார்! : ஹியூகோ சாவேஸ் பற்றி நான் எழுதிய புத்தகம்)

7 comments:

Anonymous said...

சாவேஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் மருதன். லத்தீன் அமெரிக்காவின் அடுத்த காஸ்டிரோ அவர் தான்.

ஜெயன் தேவா said...

சாவேஸ் இல்லாவிட்டால் மிக மோசமான ராணுவ அடக்குமுறையால் மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய நாடாக வெனிசுவேலா மாறிவிட்டது, நீண்ட காலத்திற்கு முன்பே. வெனிசுவேலாவில் மட்டுமன்றி முழு லத்தின் அமெரிக்கப் பிராந்தியத்திலும் ஏழை/ சுதேசிய மக்கள் மீது அக்கறை கொண்ட ராணுவ ஜெனரல் அவர் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் தன்னால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவது மாற்றமடைய விரும்பும் ஒரு சமுகத்தின் உத்வேகத்தை குறைத்து மதிப்பிடுவதாகப படுகிறது. அவர் விரும்பும் வழியில் மட்டுமே சமுகம் மாற வேண்டும் என் எதிபார்ப்பதும் தவறானது. சிலியின் சல்வடோர் அயெந்தே இன்றுவரை தியாகியாக நினைவு கூரப்படுவது அவர் ஒரு சிறு காட்டுத் தீயை மூட்டி விட்டதால் தான்...

Anonymous said...

Hugo Chavez is an entertaining character to have on the international stage. However, his administration have been a net negative for Venezuela.

rama bahrain.

Kalaiyarasan said...

தோழர் மருதனுக்கு,
ஹியூகோ என்பது "ஊகோ" என்று உச்சரிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஸ்பானிய மொழியில் "H" இற்கு ஒலியில்லை.
பெற்றோலின் விலை குறைந்ததால் இந்த முறை சாவேசிற்கு கஷ்ட காலம் என்று மேற்கத்திய ஊடகங்கள் ஆரூடம் கூறின. அதனை முடிவுகள் நிராகரித்து விட்டன. மேலும் கடந்த பத்தாண்டு காலத்தில், வெனிசுவேலா கல்வியில், மருத்துவத்தில், வீட்டு திட்டத்தில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த சமூகப் புரட்சியை முழுமையாக்க இன்னும் பத்தாண்டு தேவைப்படலாம் என்பதாலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும் சாவேஸ் ஒரு சமூக- ஜனநாயகவாதி (Troskyst) என்பதால் மாற்றங்கள் ஆமை வேகத்தில் நகர்கின்றன.

-கலையரசன்

hariharan said...

சாவேஸ் அமெரிக்காவிற்கு மற்றொரு காஸ்ட்ரோ தான், ஏனென்றால் முன்பு போல் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசூலாவில் கொள்ளையடிக்கமுடியாது, லத்தீன் அமெரிக்க நாடுகள் தற்போது அமெரிக்க நிழலிருந்து விடுபட்டு புதிய அணியின் கீழ் திரள்கின்றனர், நிச்சயம் காஸ்ட்ரோவின் வெற்றிடத்தை சாவேஸால் தான் நிரப்பமுடியும். மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் எதிரணியின் மூலம் அமெரிக்கா முன்னரே சாவேஸை வீட்டிற்கு அனுப்பியிருக்கும்.

மருதன் said...

நன்றி கலையரசன். திருத்தத்துக்கும் உங்கள் கருத்துக்கும்.

santha said...

இவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நான் இருந்த போது, உங்கள் கண்களில் தென்பட்டது. உடனே வாங்கி படித்து முடித்து விட்டேன். அதற்கு பிறது "The Revolution Will Not Be Televised" என்ற டாக்குமென்றி படத்தை பார்க்க நேரிட்டது. அதற்கு பிறகு உங்கள் புத்தகத்தில் சிறு தவறு இருப்பதாக உணர்கிறேன்.

எதிர்க்கட்சி கலகத்தின் போது அவர் இராஜினாமா செய்துவிட்டதாக நீங்கள் எழுதி இருப்பதாய் நியாபகம். ஆனால் அவர் இராஜினாமா செய்யவில்லை. முடிந்தால் இந்த படத்தை பார்க்கவும். அடுத்த பதிப்பில் சில மாற்றங்கக்ளுக்கு உதவும்.