March 24, 2009

அரசியலின் கதை : 11

சமுதாயத்தின் அங்கமாக இருக்கக் கடவாய், அரசியல் கற்கக் கடவாய் என்றெல்லாம் கிரேக்கர்களுக்கு யாரும் உபதேசிக்கவில்லை. அவர்களாகவே அப்படி புரிந்துவைத்திருந்தார்கள். என்னுடைய polis எதிரிகளால் ஆக்கிரிமிக்கப்படக்கூடாது என்பதில் ஒவ்வொரு கிரேக்கரும் உறுதியுடன் இருந்தனர். தன்னுடைய polis-ஐ பாதுகாக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டனர். என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன் என்று ஆயுதத்துடன் முன்னால் வந்து நின்று போரிட்டார்கள்.

வரி கட்டுவதில் கிரேக்கர்கள் தயக்கம் காட்டியதே இல்லை. எதற்குத் தயங்கவேண்டும்? என் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகத்தானே இந்த நிதி பயன்படப்போகிறது? என்னுடைய பங்களிப்பு அதில் இடம்பெறவேண்டாமா? வரி கட்டுங்கள், தயவு செய்து வரி கட்டுங்கள், ஒழுங்கு மரியாதையாக வரி கட்டு என்றெல்லாம் யாரும் அவர்களை நச்சரிக்கத் தேவையில்லை. கொண்டு போய் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்கள். வசதி படைத்த பெரிய ஆள்கள் வரி கட்டுவதில்லை. அதற்குப் பதிலாக, தம்முடைய polis-க்குச் சொந்தமான படைக்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் வாங்கித் தந்தார்கள். அல்லது முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு நாடகம் நடத்தினார்கள். முந்தைய முறை polis-ஐ பாதுகாப்பதற்காக. இரண்டாவது, polis-ஐ சேர்ந்த மக்களின் கேளிக்கைக்காக.

நல்ல மொழி. தெளிவான சிந்தனை. புதிதாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வம். ஆராய்ச்சி குணம். சமூகச் சிந்தனை. அறிவை, உண்மையைத் தேடுவதில் தீராக் காதல். தத்துவத்தை வளர்த்தெடுப்பதில் ஆர்வம். கலை, இலக்கியம், நாடகம் போன்றவற்றில் அக்கறை. நல்ல கற்பனை வளம். இத்தனையும் செழித்து வளர்ந்த கிரேக்கத்தில்தான் புதிய அரசியல் சித்தாந்தங்கள் பலவும் வளர்ச்சி பெற்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறோம். முதலில், சாக்ரடீஸ்.

கிரேக்க தத்துவவியல் சாக்ரடீஸிடம் இருந்து தொடங்குகிறது. சாக்ரடீஸ் என்றால் அறிவுச் சுரங்கம். எதையும் ஆராயச் சொன்ன தத்துவஞானி. பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற சீடர்களை உருவாக்கியவர். சதா சர்வ காலமும் தத்துவத்தின் புதிரான கேள்விகளுக்கு விடை தேடி அலைந்தவர். குள்ளமான உருவம். அங்கி போன்ற ஏதோ ஒன்றை அணிந்திருப்பார். அவர் மனைவி மிகவும் கொடுமைக்காரி. அவர் முன்வைத்த சில புரட்சிகரக் கருத்துகளால் கலவரமடைந்த ஏதென்ஸ் அரசு, அவருக்கு விஷம் (ஹெம்லாக்) கொடுத்துச் சாகடித்துவிட்டது.

சாக்ரடீஸின் வாழ்க்கையை இப்படிச் சுருக்கமாக ஒரு பத்தியில் அறிமுகப்படுத்திவிட முடியும். இதில் எது நிஜம் எது கதை என்று தெரியாது. அவருடைய தத்துவங்கள் பற்றியோ அரசியல் சித்தாந்தம் பற்றியோ ஆராயப் புகுந்தால் தெளிவற்ற ஒரு சித்திரமே காணக்கிடைக்கிறது. சில அசட்டுத்தனமான பொன்மொழிகளுக்குச் சொந்தக்காரராக சாக்ரடீஸ் இன்று அறியப்பட்டிருக்கிறார். ஒன்று மட்டும் இங்கே. திருமணம் செய்துக்கொள். உனக்கு நல்ல மனைவி கிடைத்தால் நீ மகிழ்ச்சியாக இருப்பாய். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவஞானி ஆகிவிடுவாய். இதையெல்லாம் சாக்ரடீஸ் எங்கே சொன்னார்? யாரிடம்?

எவ்வளவு பெரிய ஞானி, நீங்கள் போய் சிறைச்சாலையில் அடைந்துகிடக்கலாமா? நீங்கள் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்கிறேன், கவலைவேண்டாம் என்று அவர் சீடர் க்ரிட்டோ விண்ணப்பித்துக்கொண்டபோது திட்டவட்டமாக மறுத்துவிட்டார் சாக்ரடீஸ். மறுத்தற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்று. நான் தப்பிச்சென்றால் இறப்பதைக் கண்டு அஞ்சுபன் ஆகிவிடுவேன். எனக்கு மரண பயம் கிடையாது. ஒருவேளை உங்களுக்காக நான் ஓடிவந்துவிட்டால், பிறகு, என் தத்துவங்களுக்கு நானே எதிரானவராக ஆகிவிடுவேன். இரண்டு. சரி, நான் தப்பிச் செல்ல சம்மதிக்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். எங்கே கொண்டு போய் விடப்போகிறீர்கள் என்னை? தொலைவில், கண்காணாத இடத்திலா? நான்தான் எங்கே சென்றாலும் என் தத்துவங்களைக் கொண்டு செல்கிறேனே? பிறகு எப்படி என்னால் அமைதியாக ஓரிடத்தில் வசிக்க முடியும்? புதிய பகுதிக்குச் சென்றாலும் அங்கேயும் நான் பேசிக்கொண்டுதான் இருப்பேன். தர்க்கம் செய்துகொண்டுதான் இருப்பேன்.

மூன்று. நான் என் நகரத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளேன். இங்குள்ள சட்டத்திட்டங்களுக்கு நான் கட்டுப்பட்டவன் ஆகிறேன். ஒருவேளை நான் தப்பி வந்துவிட்டால், சட்டதிட்டங்களை மதிக்காதவனாக நான் சித்தரிக்கப்படுவேன். என் நகரத்துக்கு எதிராகக் குற்றம் செய்தவனாகிவிடுவேன். என் தத்துவங்களுக்கு எதிரானது இது. சரி இனி மேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று பிளேட்டோ உள்ளிட்ட சீடர்கள் வெளியேறிவிட்டார்கள். பிறகு, சாக்ரடீஸ் ஹெம்லாக் அருந்தினார்.

(தொடரும்)

1 comment:

thilipan said...

உங்கள் கூற்று சரியானது விவாதங்கள் அவசியம் வேண்டும்,இன்னும் விவாதியுங்கள்.