March 28, 2009

அரசியலின் கதை : 12

சாக்ரடீஸ் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்பும் அரசியல் சிந்தனைகள் இவை. தனிநபர் என்று ஒருவரும் இல்லை இங்கே. அரசாங்கம் நம்மைவிட பெரியது. நம்மை ஆளக்கூடியது. நாம் நம் அரசாங்கத்தோடு நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். நல்லதோ தீயதோ நம் மீது எது விதிக்கப்படுகிறதோ அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அரசாங்கம் என்றால் அவர் காலத்தில் நகரங்கள். City States.

ஆனால், இதே சாக்ரடீஸ்தான் எதையும் அப்படியே நம்பிவிடாதே கேள்வி கேள், அடங்க மறு என்று கர்ஜித்தவர். எனில், அரசாங்கம் சொன்னால் மட்டும் ஏன் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்? மக்களிடம் சென்று நீ உரையாடியிருக்கிறாய். கண்டதைச் சொல்லி இளைஞர்களைக் கெடுத்திருக்கிறாய். ஏதென்ஸ் அரசுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக, கடவுளுக்கு எதிராக மக்களைத் தூண்டிக்கொண்டிருக்கிறாய். உனக்கு மரணத் தண்டை விதிக்கிறோம். இதுதான் சரியான தீர்ப்பா? இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? ஏன்? அரசாங்கம் என்பதாலா? இது தவறான தீர்ப்பு என்று சாக்ரடீஸுக்குத் தெரியாதா? பிறகு ஏன் தப்பிச்செல்ல மறுக்கவேண்டும் அவர்? அரசாங்கத்தின் முடிவு தவறு என்று தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் தர்மமா?

சாக்ரடீஸ் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பிரச்னை இது. அரசியல் என்னும் அமைப்பு உருவாக ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். ஒன்று இந்தியாவில் இருந்து.

0

முதல் சமிக்ஞை நரேந்திர மோடியிடம் இருந்துதான் வந்திருக்கிறது. அதை சமிக்ஞை என்றுகூட சொல்லமுடியாது. உத்தரவு. உங்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான்காவது நாள் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். கூடியிருந்தவர்கள் கவலையுடன் கேட்டிருக்கிறார்கள். மோடிஜி, போலீஸ்? நான் இருக்கிறேன். பார்த்துக்கொள்கிறேன். உறுமியிருக்கிறார் மோடி. மோடி ஓர் அபூர்வமான அரசியல்வாதி. தான் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் அவர்.

எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் (பிப்ரவரி 27, 2002). அது ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என்று ஒருவருக்கும் தோன்றவில்லை. ஏன் தோன்றவேண்டும்? இறந்து போன 58 பேரும் அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த கரசேவகர்கள். இந்துக்களுக்கு யார் விரோதி? முஸ்லீம்கள். தீர்ந்தது கதை.

’ஒரு நாள் விளையாட்டுப் போடடியில் முஸ்லீம்கள் விளையாடி 60 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அடுத்து நாம் ஆடவேண்டும். நம்முடைய டார்கெட் 60. ஆனால் 600 ரன்கள் அடிக்கும்வரை நாம் சோர்ந்துபோகக்கூடாது.’ வி.ஹெச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ் நிர்ணயித்த டார்கெட் இது.

அவர்கள் திரண்டார்கள். அவர்கள் என்றால் பஜ்ரங் தள், வி.ஹெச்.பி., கட்சிப் பிரமுகர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், அவர்களுக்குக் கீழே பணிபுரியும் தாதாக்கள், பேட்டைக் கிரிமினல்கள், ரௌடிகள் மற்றும் பாக்கெட் கத்தி அடிப்பொடிகள். அத்தனை பேரையும் ஒரே அணியில் கொண்டு வந்து இணைத்த சக்தி இந்துத்துவா.

தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார்கள். காட்டுத்தனமான ஆட்டம் அது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் மூர்க்கமும் மிருகத்தனமும் கொலை வெறியும் கலந்திருந்தால் மட்டுமே அப்படி ஒரு ஆட்டம் சாத்தியம். மூன்று நாள்கள் முடிவுக்கு வந்தபோது மொத்தம் 2000 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. குஜராத் முழுவதும் ரத்தச் சகதி. எல்லாம் முடிந்ததா என்று கேட்டுத் தெரிந்துகொண்டபின் மோடி தன் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தினார். அவுட். ஆட்டம் முடிந்தது. எல்லோரும் அவரவர் வீட்டுக்குப் போகலாம். சிறப்பாக விளையாடிய அத்தனை பேருக்கும் வெகுமதி. தலைமை தாங்கிய மோடிக்குத் தேர்தலில் வெற்றிக்கோப்பை. ஆனால் என்ன? கோப்பையில் நிறைய ரத்தக்கறை. அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? உயிரைக் கொடுத்து விளையாடும்போது ரத்தம் தெறிக்கத்தானே செய்யும்.

எல்லாம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக குஜராத் ஃபைலை தெஹல்கா திறந்தது. மோடியின் ஆட்டக்காரர்களைச் சந்தித்து நயமாகப் பேசியிருக்கிறது தெஹல்கா குழு. பெருமிதமும் பூரிப்பும் பொங்க அவர்கள் விவரித்த ரத்த அத்தியாயங்களை அப்படியே பதிவு செய்து வெளியிட்டது.

நெஞ்சு பதைபதைக்க வைக்கும் கதைகள் அவை. முஸ்லீம்கள் வாழும் வீடுகளா? அப்படியே கொளுத்து. என்ன வேண்டும்? பெட்ரோலா? டீஸலா? இப்பொழுதே அனுப்புகிறோம். குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவேண்டும். முஸ்லீம்கள். அதுதான் அவர்களது அடையாளம். துடைத்து அழித்து ஒழிக்கப்படவேண்டிய அடையாளம்.

சிலர் மொத்தமாக வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். அந்தந்த வீட்டு காஸ் சிலிண்டரே அவர்களைக் கொளுத்தப் போதுமானதாக இருந்தது. இன்னும் சிலர் வீட்டுக்குள் புகுந்து ஆள்களை வெளியில் இழுத்து வந்து வெட்டினார்கள். பயந்து அலறி பாதாளச் சாக்கடையில் ஏபுழுட்டுப் பேர் புகுந்திருக்கிறார்கள். சத்தம் போடாமல் அந்தச் சாக்கடையை அடைத்து மூடிவிட்டார்கள். அங்கேயே சமாதி. இளம்பெண்களை கண்டவுடன் கொளுத்த மனம் ஒப்பவில்லை. எப்படியும் கருகி அழியப்போகும் உடல். அதற்கு முன் ஒரேயொருமுறை? பாதகமில்லை.

நரோதா பாடியாவில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அந்தக் காவல் நிலையம். முஸ்லீம்கள் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டபோதும் சரி. துரத்தித் துரத்தி வெட்டப்பட்டபோதும் சரி. துடித்துக் கதறியபோதும் சரி. ஒரு கான்ஸ்டபிள் கூட வந்து எட்டிப்பார்க்கவில்லை. தப்பித்தவறி எட்டிப் பார்த்தவர்களும் நகம் கடித்தபடி வேடிக்கைதான் பார்த்தார்கள். வேலை முடிந்தபோது, நரோதயாவில் மட்டும் இருநூறு உடல்கள். என்ன செய்வது? தூக்கு. பக்கத்துப் பக்கத்து தெருக்களில் கொண்டு போய் வீசு. ஒரு கிணற்றைக் கண்டுபிடித்து அதற்குள் சில உடல்களை வைத்து திணித்திருக்கிறார்கள்.

சாட்சியம் சொல்ல வந்தவர்களை காவல்துறை ச்சீப்போ என்று விரட்டியடித்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு மருத்துவச் சாட்சியமும் இல்லை. பெரும் புள்ளிகளின் பெயர்கள் விடுபட்டுபோயிருக்கின்றன. ஒரு முக்கியஸ்தரின் பட்டாசு கம்பெனியில் சுடச்சுட வெடிகுண்டு தயாரித்து எடுத்து வந்து கலகக்காரர்களுக்குச் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, துப்பாக்கிகள், கத்திகள், திரிசூலங்கள். ஆனால் காவல்துறை இது வரை கைப்பற்றியுள்ள ஆயுதம், ஒரே ஒரு வீச்சுக்கத்தி மட்டுமே.

ஆரவாரத்துடன் தெஹல்காவுக்குப் பேட்டிக்கொடுத்த கொலைகாரர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இது. மோடியின் உதவி இல்லாமல் இது நடந்திருக்கமுடியாது. மோடிஜிக்கு நன்றி. இது தேசத்தின் அவமானம். நம் எல்லோர் மீதும் குஜராத் ரத்தக்கறை அழுத்தந்திருத்தமாகப் படிந்திருக்கிறது.

நரேந்திர மோடி சாமானியர் அல்லர். குஜராத்தின் முதலமைச்சர். ஏதென்ஸ் நகர அரசு செய்ததைவிட பல நூறு மடங்கு அதிகமாகத் தவறு இழைக்கிறார். இப்போது என்ன செய்யவேண்டும் நாம்? சாக்ரடீஸ் பாணியில் அணுகினால் இதற்கு நமக்குக் கிடைக்கும் பதில் என்ன? கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்கள்தாம். இல்லையா? பிறகு, ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள்? இதை நாம் எப்படி விளங்கிக்கொள்ளவேண்டும்? இந்துக்களைக் காக்கத்தான் இந்த அழித்தொழிப்பு நடந்தது என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளவேண்டுமா? அரசாங்கத்தின் முடிவு என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு டீ சாப்பிடவேண்டுமா?

(தொடரும்)

3 comments:

hariharan said...

மோடி தான் இந்த “எதிர்”வினைக்கு முக்கிய காரணம் என்று தெரிந்தும் நமது சட்டம் ஒன்றும் செய்யமுடியவில்லை, மாறாக இந்துத்துவா வாதிகள் அப்சல் குருவின் தூக்கு பற்றி கதையளக்கிறார்கள். இந்திய சமூகம் இப்படி மத உணர்வாலும் பிராந்திய சாதீய உணர்வாலும் பிளவுற்று கிடப்பது கவலைகுரியதாக உள்ளது.

திலீபன் said...

இவர்களின் காட்டுமிராண்டிதனமான செயல்களை அப்பாவி இந்தியமுஸ்லிம்கள் மீது செலுத்துவது கொழை தனம்,முஸ்லிம்கள்தான் இவர்களது இலக்கு என்றால் பாகிஸ்தான் செ‌ன்று நீங்களும் ஒரு தீவிரவாதியை போல் செயல்படுங்கள், அவர்கள் இந்தியர்கள், இந்தியாவை நேசிப்பவர்கள். அதுசரி காட்டுமிராண்டிகளுக்கு இது எப்படி தெரியும்.

உங்களிடமிருந்து இந்திய அரசியலின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

Venkatesh Kumaravel said...

இவ்வளவு அறிந்தும், அகமதாபாத்தின் பழைய நகரப்பகுதிய ஒட்டுமொத்தமாய் தீக்கிரையாக்கிய மோதியே இம்முறையும் வெல்ல குஜராத் மக்கள் வாக்களிப்பது ஏன்? அவ்வளவு மனிதாபிமானமற்ற மாநிலமா குஜராத்? இஸ்லாமிய சிறுபான்மையினர் வாக்குவங்கி என்ன ஆகிறது? இரண்டாம் பகுதியில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். மேலும், 'எ வெட்னஸ்டே' திரைப்படத்தை கமலஹாசனும், மோகன்லாலும் மொழிமாற்றம் செய்யப்போவதாக கேள்வியுற்றேன். தங்களது கருத்துக்கள்?