March 6, 2009

அரசியலின் கதை : ஆறு


மீடியா முன்வைக்கும் அரசியல் இதுதான். உங்களை மகிழ்விப்பதுதான் எங்கள் பணி. உங்களது ரசனைதான் எங்கள் முதலீடு. இருபத்து நான்கு மணி நேரமும் எங்கள் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. கண்டுகளியுங்கள். வேறு எதிலும் உங்கள் கவனம் சிதறிப்போகக்கூடாது. என்ன வேண்டும் உங்களுக்கு? அரசியலா? இதோ. சுடச்சுட விவாதங்கள். சுடச்சுட செய்திகள். சர்ச்சைகளா? இதோ. சினிமாவா? எத்தனை வேண்டும்? திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன படம்? நடிகையின் பேட்டி வேண்டுமா? உங்களுக்குப் பிடித்த நடிகருடன் தொலைபேசியில் பேசவேண்டுமா? வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்லவேண்டுமா? நிகழ்ச்சியின் முடிவில் கொடுக்கப்படும் கேள்விக்கு விடையளியுங்கள். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பரிசு நிச்சயம்.

காஷ்மீரை மறந்துவிடுங்கள். அங்கே நிறைந்திருப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள். பாகிஸ்தானைப் பார்த்தீர்களா? நம் எதிரி தேசம்? நக்ஸலைட்டுகள் தெரியுமா? பொல்லாதவர்கள். படு பயங்கரமானவர்கள். கொஞ்சம் அசந்தாலும் தலையைக் கொய்துவிடுவார்கள். இந்தியா முழுவதும் இவர்களைப் போல் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் கவலை வேண்டாம். அவர்களை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.

நீங்கள் டிவி பாருங்கள். இந்திய வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்னைகளைப் பற்றி ஏன் நீங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்? உங்களுக்குத் தெரிந்து என்ன ஆகப்போகிறது? ஏன் அலட்டிக்கொள்கிறீர்கள்? உங்கள் அபிமான அரசியல் தலைவர் பற்றிய புதிய சர்ச்சையை நீங்கள் அறிவீர்களா? எதிர்கட்சித் தலைவர் உங்கள் தலைவரைத் தரக்குறைவாகத் திட்டிவிட்டதை நீங்கள் அறிவீர்களா? 123 ஒப்பந்தம் பற்றி ஏன் விவாதிக்கிறீர்கள்? ஏன் மண்டையை உடைத்துக்கொள்கிறீர்கள்? அமெரிக்காவின் நோக்கத்தை ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த ஒரு புதிய படத்தில் இருந்து ஒரு பாடலை இப்போது ஒலிபரப்பப்போகிறோம். குஜராத் கலவரங்கள் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படவேண்டம் நண்பர்களே. எல்லாம் சரியாகிவிடும். சரியாகிவிட்து. நீங்கள் பாடலைத் தொடர்ந்து கேளுங்கள். இணையத்தளத்தில் அதே பாடல் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் கணிப்பொறியில் இறக்கிவைத்துக்கொள்ளுங்கள்.

என்னது? உங்களிடம் கணிப்பொறியே இல்லையா? டூ வீலர்? ஏஸி? அடப்பாவமே. இவற்றைப் பற்றியல்லவா நீங்கள் கவலைப்படவேண்டும்? உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டாமா? சரி சரி. உங்கள் மாதச் சம்பளம் என்னவென்று சொல்லுங்கள். தனியார் வங்கியில் இருந்து ஓர் இளம்பெண் உங்களைத் தொடர்பு கொள்வார். உடனடிக் கடன். சுலபத்தவணைகள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். ஒரு லட்ச ரூபாய்க்கு நேநோ கார் வந்துவிட்டதை உங்களுக்கு ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறோம்.

இளைஞர்களே, கம்யூனிஸம் போன்ற புரட்சிகரச் சிந்தாந்தங்களில் உங்களை கரைத்துக்கொண்டுவிடாதீர்கள். உங்கள் பொன்னான நேரத்தை, உங்கள் இளமையை வீணாக்கிக்கொள்ளாதீர்கள். கிரிக்கெட் பாருங்கள். சினிமா பாருங்கள். உல்லாசமாக ஊர் சுற்றுங்கள். காதலியுங்கள். உங்களுக்குத் தோதான இணையைத் தேடவும் தனித்தனியே இணையத்தளங்கள் இருக்கின்றன.

அரசியல் உங்களுக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

(தொடரும்)

2 comments:

ILA (a) இளா said...

என்ன பாஸ் இப்படிச் சொல்றீங்க? அரசியல்ல கலந்து வரும்போது எந்த ஒரு இளைஞனும் இப்போ இருக்கிற அரசியல்வாதிமாதிரிதான் வருவாங்க. அங்கே ப்ராக்டிஸ் அப்படி இருக்கும்

hariharan said...

மீடியா ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கவேண்டும் ஆனால் பெரும்பாலான சமயத்தில் அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறது, அரசு செய்யவேண்டிய கடமையை சுட்டிக்காட்ட தவறுகிறது.மக்களுக்கு அரசியல் கல்வியை அளிக்கவேண்டிய பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இன்று கவர்ச்சி கர நிகழ்ச்சிகளையும் பரிசுப்போட்டிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனுக்கு அரசியல் சட்டத்தைப்பற்றியும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இளைஞர்கள் அரசியல் இயக்கத்திற்கு பின்னால் செல்லாமலிருக்க மீடியா பெரிதும் அரசுக்கு உதவியாக இருக்கிறது.

இடதுசாரி, வலதுசாரி அரசியல் என்றால் என்ன? அது குறித்து எழுதுமாறு வேண்டுகிறேன்.