March 20, 2009

அரசியலின் கதை : பத்து

கருத்துகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோத வேண்டும் என்பதில் கிரேக்கர்கள் தெளிவாக இருந்தார்கள். உன்னுடைய கருத்து உயர்ந்ததா? கடவுள் உண்டு என்று சொல்கிறாயா? அழகுக்கு நீ கொடுக்கும் விளக்கம் இதுவா? சரி வா. வந்து என்னோடு வாதச்சண்டை போடு. என்னிடம் சில அற்புதமான கருத்துகள் உள்ளன. கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். இருவரும் மோதுவோம். யாருடைய கருத்து வெல்கிறது என்று பார்ப்போம்.

வாதம். பிரதிவாதம். இரண்டுமே மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. மல்யுத்தம் போல் கருத்து யுத்தம் நடத்தப்பட்டது. சிறு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டார்கள். இளைஞர்கள், வயதானவர்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. யுத்தம் மிகவும் கடினமாக இருக்கும். கேள்விக் கணைகள் சரமாரியாக வந்து விழும். எல்லாவற்றையும் சமாளித்தாகவேண்டும். முறியடித்தாகவேண்டும்.

இந்திய தத்துவ இயலையும் ஐரோப்பிய தத்துவ இயலையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா முன்வைக்கும் வாதம் இது. ஐரோப்பிய தத்துவ இயல் வளர்ச்சி அடைந்ததற்குப் பிரதானமாக காரணம் வெவ்வேறு கருத்துகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சமர் புரிந்ததுதான். ஒரு கருத்து நிலைபெறவேண்டுமானால், பிரகாசிக்கவேண்டுமானால் அது எதிர் கருத்துகளைச் சந்தித்தாகவேண்டும். அதைவிட்டுவிட்டு, இதுவே நிதர்சனம், இதுவே இறுதி என்னும் நிலையை ஒரு தத்துவம் எட்டிவிடக்கூடாது. இந்திய தத்துவ இயல் வளர்ச்சி அடையாமல் போனதற்கு இதுவே காரணம். வேதங்களும் உபநிஷத்துகளும் மாற்று கருத்துகளைச் சந்திக்கவில்லை. இந்து மத ஆதரவாளர்கள் அவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இதுவே இறுதி இதற்கு மிஞ்சி எதுவும் இல்லை என்று அவர்கள் கருத ஆரம்பித்துவிட்டனர். ஆகவே தேடல் முற்றுப்பெற்றுவிட்டது.

அதே சமயம், ஐரோப்பிய தத்துவ இயல் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. வெவ்வேறு தத்துவ அறிஞர்கள் தங்கள் சிந்தனைகளால் தத்துவத்தை செழுமைப்படுத்தினர். வாதிப் பிரதிவாதங்கள் மிக அதிக அளவில் ஆரோக்கியப் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பியத் தத்துவம் கிரேக்கத்திடம் இருந்தே ஆரம்பமாகிறது.

கிரேக்க மொழியின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. Polis என்னும் கிரேக்க சொல்லை நாம் City State என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறோம். இதை சரியான மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நகரம், மாநிலம் போன்ற பிரிவுகளையும் தாண்டியது சிட்டி ஸ்டேட்.

நீ யார் என்று ஒரு கிரேக்கரைக் கேட்டால் அவர் தன் பெயரையோ தன் தந்தையின் பெயரையோ சொல்ல மாட்டார். நான் குறிப்பிட்ட Polis-ல் இருந்து வருகிறேன் என்று சொல்வார். அதுவும் பெருமிதத்துடன். இது என்னுடைய Polis என்னும் பெருமை அவரிடம் இருக்கும். எந்தவித Polis-லும் இணையாமல் இருப்பவர்கள் Idiotes என்று அழைக்கப்பட்டனர். தற்போது நாம் பயன்படுத்தும் முட்டாள் என்னும் பொருள் தரும் ஆங்கிலப் பதம் இது.

மொழி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அரசியலுக்கான அடிப்படை கலைச் சொற்கள் பலவும் கிரேக்கத்தில் இருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. அரசியலின் பல்வேறு அம்சங்களைக் குறித்தும் மிகத் தெளிவான வரையறைகளை கிரேக்கர்கள் வடிவமைத்திருந்தார்கள். கிரேக்க மொழியில், வாழ்தல் என்றால் சமுதாயத்தில் ஓர் அங்கமாக இருத்தல் என்று பொருள்.

(தொடரும்)

1 comment:

ஹரிகரன் said...

இந்தியாவில் தோன்றிய மாற்றுத்தத்துவமான சமணம், பவுத்தம் போன்றவைகளை முற்கால சைவம்/வைணவம் அழித்துவிட்டதாக கூறப்படுவடுவது உண்மையா, ஏன் அந்த வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. மன்னராட்சி காலத்தில் மன்னர் தான் சார்ந்திருந்த மதத்தை தவிர மற்ற மதத்தினரை அழித்தது உண்மையா?