June 28, 2009

லால்கார் : நிறம் மாறும் சிவப்பு


மாவோயிஸ்ட் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து, சட்டப்பூர்வமாக தடை செய்துள்ளது இந்திய அரசு. இனி, முன்பை காட்டிலும் கூடுதல் வேகத்துடன், கூடுதல் செயல்திறனுடன் நக்ஸலைட்டுகளை வேட்டையாடமுடியும். தீவிரவாதத்துக்கு எதிரான போரை கூடுதல் பலத்துடன் தொடுக்கமுடியும். நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று பரவலாக வருணிக்கப்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை முடக்கமுடியும். பாதுகாப்புப் படையினருக்கு இனி விசேஷ சலுகைகள் அளிக்கப்படும். யாருக்கும் கவலைப்படாமல் சட்டப்பூர்வமாகவே இனி அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தலாம். விசாரணை இன்றி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யலாம். தண்டிக்கலாம். இவர்கள் சுட்டிக்காட்டும் அனைவரும் நக்ஸலைட்டுகள். இவர்கள் கைது செய்யப்போகும் அனைவரும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்.

மேற்கு வங்கத்தில் உள்ள லால்காரில் மக்கள் குடை பிடித்துக்கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள். கடைகள் மூடப்பட்டவிட்டன. தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. திரும்பும் திசையெங்கும் எல்லையோரப் பாதுகாப்புப் படை, ரிசர்வ் படை. கவலைவேண்டாம், அமைதியை நிலைநாட்டிவிட்டோம், லால்காரைக் கைப்பற்றிவிட்டோம் என்கிறது காவல்துறை.

அசப்பில் இலங்கையை நினைவுபடுத்துகிறது லால்கார். தீவிரவாதம், மனித கேடயம், தேடுதல் வேட்டை, உணவுத் தட்டுப்பாடு, ரத்தம், வேதனை, கண்ணீர். அங்கே விடுதலைப் புலிகள், இங்கே மாவோயிஸ்டுகள். பல லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அங்கே முகாம்களில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே எண்ணிக்கை குறைவுதான். என்றாலும், அதே தவிப்பு, அதே துயரம். அங்கே இலங்கை அரசு முகாம்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இங்குள்ள முகாம்களை உருவாக்கியவர்கள் சி.பி.எம் மற்றும் திரிணாமூல் கட்சியினர். நீ புலியா, நீ புலியா என்று கண்ணில் படுபவர்களை எல்லாம் இழுத்து வைத்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அங்கே. இங்கேயும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையைச் சொல், நீ நக்ஸலைட்தானே?

நக்ஸலைட்டுகள் தொடங்கிய போர் இது என்கிறார்கள் காவல்துறையினர். நவம்பர் மாதம் தொடங்கி லால்காரை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்கள். சட்டீஸ்கரில் 11 படையினரை கொன்றுவிட்டார்கள். இரு தினங்கள் கழித்து, 16 பேர் நக்ஸலைட்டுகளின் பொறிக்குள் சிக்கி வெடித்துச்சிதறிவிட்டார்கள். சிபிஎம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கட்சி அலுவலங்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ள. இப்படியே விட்டால் லால்கார் தொடங்கி பல பகுதிகளை இழக்கவேண்டிவரும் என்பதால்தான் விரைந்து நடவடிக்கை எடுத்தோம். இப்போது லால்காரை மீட்டுவிட்டோம். நல்ல வேளையாக, மாவோயிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டுவிட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நக்ஸலைட் இயக்கத்தை முற்றிலுமாக அழிக்கவேண்டும். இதுபோன்ற இயக்கங்களுக்கு இரக்கம் காட்டுவது ஆபத்தானது.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற ஒரு மாதத்தில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2004ல் ஒருமுறை தடை விதித்திருந்தார்கள். ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒரிஸா, சத்தீஸ்கார், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் முன்னரே தடை செய்யப்பட்டுள்ளனர். லஷ்கர் ஈ தொய்பா, சிமி, ஹிஸ்புல் முஜாஹிதின், உல்ஃபா போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இனி மாவோயிஸ்டுகளும் இடம்பெறுவார்கள்.

இந்த தடை உத்தரவை புத்ததேவ் உடனடியாக மேற்கு வங்கத்தில் நீட்டிக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், புத்ததேவால் அதை செய்யமுடியவில்லை. இத்தனைக்கும், மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை பலமாக எதிர்ப்பவர்தான் அவர். நக்ஸலைட்டுகள் வேட்டையாடப்படவேண்டும் என்பதில் அவருக்கு மாற்று கருத்து கிடையாது. என்றாலும், மத்திய அரசாங்கத்தைப் போல் வெளிப்படையாக மாவோயிஸ்டுகள் மீது தடை விதிக்க அவருக்குத் தயக்கம்.

ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கமே மற்றொரு கம்யூனிஸ்ட் பிரிவை தடைசெய்வது தீவிர விமரிசனங்களை கிளப்பும். ஏற்கெனவே தேர்தல் தோல்வி. அத்தோடு சேர்த்து இதுபோன்ற சர்ச்சைகளும் சேர்ந்துகொள்வது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதைவிடப் பெரிய ஆபத்து, மம்தா பானர்ஜி. மாவோயிஸ்டுகள் மீது இவருக்கு எந்த அபிமானமும் கிடையாது என்றாலும் சிபிஎம்மை எதிர்ப்பதற்கு இந்த தடையுத்தரவை அவர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொந்தரவு கொடுத்து வரும் மாவோயிஸ்டுகளை அவர் மறைமுகமாக ஆதரிக்கவும்கூடும். மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும் மாவோயிஸ்ட் கட்சிக்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று கிண்டலடித்துகொண்டிருக்கிறார். இடது சாரி அரசு எப்போது கவிழும் என்று காத்துக்கொண்டிருக்கும் மம்தாவுக்கு எதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கவேண்டும்?

ஆகவே கொஞ்சம் பூசி மெழுகிப் பேசியிருக்கிறார் புத்ததேவ். தடை விதிப்பது குறித்து விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அரசியல் ரீதியில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதே சரியான வழி என்று தோன்றுகிறது. சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன் இருவரின் கருத்தும் இதுவேதான். அதாவது, தடை என்று அறிவித்துவிட்டு போரிடுவதைவிட அறிவிக்காமலே அதைச் செய்துமுடிக்கலாம்.

நக்ஸலைட்டுகளுக்கு எதிரான போர் என்று பெயரளவில் அறிவித்திருந்தாலும் நிஜத்தில் இது பழங்குடி இன மக்களுக்கு எதிரான போராகவே உருவெடுத்துள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்றதும் இதுவேதான். சட்டீஸ்கரில் உள்ள பழங்குடி மக்களை ஒடுக்குவதற்காக 2005ல் சல்வா ஜுடும் என்னும் குண்டர்கள் படை உருவாக்கப்பட்டது. இந்தப் படைக்கு நிதியுதவி தொடங்கி ஆயுத உதவி வரை அனைத்தையும் சத்தீஸ்கர் அரசே செய்துகொடுத்தது. இங்குள்ள பழங்குடி மக்கள் நக்ஸலைட்டுகளை ஆதரிக்கிறார்கள் என்பதால் இந்த ஏற்பாடு. எந்தவொரு தீவிரவாத இயக்கத்தையும் மிஞ்சிவிடும் அளவுக்கு மிகக் கொடூரமான பல தாக்குதல்களை சல்வா ஜுடும் அப்பாவி பழங்குடி மக்கள் மீது நடத்தியுள்ளது. தொடர்ந்து நடத்திவருகிறது. நக்ஸலைட்டுகளைப் பற்றி பக்கம் பக்கமாக விவாதிக்கும் ஊடகங்கள் இதுபோன்ற சட்டவிரோதமான ஏற்பாடுகளை கண்டுகொள்வதில்லை.

லால்காரிலும் இதுதான் நிலைமை. நக்ஸலைட்டுகள் மீது அளவுக்கு அதிகமாக வெளிச்சத்தைப் பாய்ச்சி நிஜத்தை இருட்டில் மூழ்கடித்துவிட்டது அரசு. சமீபத்தில் லால்காரில் நடைபெற்றது நக்ஸலைட்டுகளுக்கும் காவல்துறைக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல பழங்குடி இன மக்களுக்கும் அரசுக்கும் எதிராக நடைபெற்ற மோதலும்தான். இதுவே ஆரம்பப் புள்ளி. நந்திகிராமில் நடைபெற்றதைப் போலவே லால்காரிலும் 5000 ஏக்கர் நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கும் முயற்சியில் சில காலமாகவே ஈடுபட்டுவருகிறது மேற்கு வங்க அரசு. ஜிண்டால் என்னும் நிறுவனம் தனது இரும்பு எஃகு ஆலையை அமைப்பதற்காக லால்காரின் காட்டு வளத்தை அழிக்க முடிவு செய்துவிட்டது அரசு.

இதற்கு எதிராக பழங்குடி மக்கள் அணிதிரண்டு போராட ஆரம்பித்தனர். போராட்டத்தை எதிர்க்க அரசாங்கம், கட்சி, காவல்துறை மூன்றும் கைகோர்த்துக்கொண்டபோது, மக்கள் இந்த மூன்றையும் சேர்த்தே எதிர்க்க ஆரம்பித்தனர். மாவோயிஸ்டுகளின் துணையும் அவர்களுக்கு கிடைத்தது. மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை காப்பாளர்கள் என்று பல்வேறு அணியினர் லால்கார் மக்கள் பக்கம் வந்து நின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக கல்கத்தாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பழங்குடி மக்களின் இந்த எழுச்சியை நக்ஸலைட்டுகளின் தாக்குதலாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பது பிரச்னையை திசைதிருப்பும் செயல். மாவோயிஸ்ட் அமைப்பின் மீது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தடையுத்தரவு பிரச்னையை எந்த விதத்திலும் முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை. மேற்கு வங்கப் பிரச்னைக்குக் காரணம் மாவோயிஸ்டுகள் என்று சொல்வது இலங்கை இனப் பிரச்னைக்குக் காரணம் விடுதலைப் புலிகள் என்று சொல்வதற்கு ஒப்பானது. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது பிரச்னை அல்ல. பிரச்னையின் விளைவு. மாவோயிஸ்டுகள் இயக்கத்தையும் அவ்வாறேதான் அணுகவேண்டும். விளைவுகளை அழித்துவிடுவதன் மூலம் பிரச்னை காணாமல்போவதில்லை.

(கல்கியில் இந்த வாரம் வெளிவந்துள்ள என் கட்டுரையின் முழு வடிவம் இது)

7 comments:

வண்ணத்துபூச்சியார் said...

விளைவுகளை அழித்துவிடுவதன் மூலம் பிரச்னை காணாமல்போவதில்லை....////

அருமை..

பிரதிபலிப்பான் said...

//லால்காரிலும் இதுதான் நிலைமை. நக்ஸலைட்டுகள் மீது அளவுக்கு அதிகமாக வெளிச்சத்தைப் பாய்ச்சி
நிஜத்தை இருட்டில் மூழ்கடித்துவிட்டது அரசு. சமீபத்தில் லால்காரில் நடைபெற்றது நக்ஸலைட்டுகளுக்கும்
காவல்துறைக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல பழங்குடி இன மக்களுக்கும் அரசுக்கும் எதிராக நடைபெற்ற
மோதலும்தான். இதுவே ஆரம்பப் புள்ளி. நந்திகிராமில் நடைபெற்றதைப் போலவே லால்காரிலும் 5000 ஏக்கர்
நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கும் முயற்சியில் சில காலமாகவே ஈடுபட்டுவருகிறது
மேற்கு வங்க அரசு. ஜிண்டால் என்னும் நிறுவனம் தனது இரும்பு எஃகு ஆலையை அமைப்பதற்காக லால்காரின்
காட்டு வளத்தை அழிக்க முடிவு செய்துவிட்டது அரசு.//


1.ஆயுதம் ஏந்தித்தான் போரடவேண்டும் என்று இல்லை. இங்கு நடப்பது ஜார் அரசாங்கம் இல்லை நீங்கள் ஆளும் அதாவது கம்யுனிஸ்டுகள் ஆளும் மாநிலமே.

2.அதனால் ஆயுதம் தாங்கிப் போரடுவதென்பது ஒரு இயக்கத்தின் வேலை. அந்த இயக்கத்தார் தங்களின் நெட்வொர்க்கை பலபடுத்துவதற்காக மக்களை தூண்டி
அவர்களின் நியாமான கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்படுகிற அளவு நடந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை.

அகிம்சை நாட்டில் ஆயுதம் தாங்கிப் போரடத் தேவையில்லை. நிறைய வழிகள் இருக்கிறது போராட அவர்களின் எதிர்ப்பை காட்ட.

அரப்போரட்டம் செய்தால் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை என்று கூறுகிறீர்களா அப்படி என்றால் உங்களுடைய அரசாங்கத்தை தான் குறை சொல்லவேண்டும்.

அரபோராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.அதேபோல் தொடர் போராட்டமும் வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ் நாட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் துணை நகரம் அமைக்கும் பணி வண்டலூருக்கும் கேளம்பாக்கத்திற்கும் இடையில் நடக்கும் என அரசு அறிவித்த்து.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பா.ம.க தலைவர் தலைமையில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள்.
(அந்தப் போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை)

அது போல் ஏன் அவர்கள் செய்ய முன்வருவதில்லை. படிக்காத மக்களை மூளைச்சலவை செய்து மாவோஸ்டுகள் அரசுக்கு எதிராக போராட தூண்டுகிறார்கள். அந்த படிக்காத மக்களுக்கு
எது சரி எது தப்பு என்று தெரியாமல் திண்டாடுகிற்கள்.

அவர்கள் மக்கள் இயக்கங்களாக போராடினால் அவர்களுக்கு நிச்சயம் வெற்றிகிடைக்கும்.

இன்னுமொரு உதாரணத்தை தரவிரும்புகிறேன்.

கடந்த வருடம் ராஜஸ்தானில் நடைபெற்ற குஜார் இனப்போராட்டம் வெற்றிபெறவில்லையா? அவர்கள் என்ன ஆயுதமா எடுத்தார்கள்.

பழங்குயின மக்களின் கோபம் நியாயமானதாவே இருந்தாலும் அவர்கள் கூட்டு சேர்ந்தவர்களும் போரடியவிதமே அவர்களை தோற்கடித்தது.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆயுதம் தாங்கி போராடினால் அது கண்டிக்கபடவேண்டிய மற்றும் தண்டிக்கப்படவேண்டிய ஒன்றும் கூட.

இந்த போராட்டத்தையும் ஈழத்தமிழர்கள் பிரச்னையும் ஒன்று படுத்தி பேசுவது அர்த்தமில்லை.

ஹரிகரன் said...

“மம்தா பானர்ஜி மாவோயிஸ்டு களை மறைமுகமாக ஆதரிக்கக்கூடும்”

பத்திரிக்கையாளரான நீங்கள் ஐயப்பட்டு எழுதவேண்டாம். அந்தக்கூட்டு ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இடதுசாரி முண்ணனியை ஒழிப்பதற்க்காக மம்தா மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல யாருடன் வேண்டுமாலும் கூட்டணி வைத்துக்கொள்வார்.

Anonymous said...

A real communist should oppose CPI-M policies. Disgusting!

சுடர் said...

லால்கர் குறித்து முரணான செய்திகளே வ்ந்துக் கொண்டிருக்கின்றன. பழங்குடி மக்களை ஒரு கம்யூனிச அரசாங்கம் எதிர்ப்பது அநியாயம். இதையா காரல் மார்கஸ் சொல்லி கொடுத்தார்?

Joe said...

அருமையான கட்டுரை.

பதிவுலகில் சமீப காலமாய் அதிகம் வெளியிடுவதில்லையோ?

மருதன் said...

Joe : நன்றி. முடிந்தவரை நிறைய எழுத முயற்சி செய்கிறேன்.