September 2, 2009

சீனா குறித்து ஒரு கம்யூனிஸ்ட்

பல்லவி அய்யர் ஆங்கிலத்தில் எழுதிய Smoke and Mirrors புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. சீனா விலகும் திரை. (மொழிபெயர்ப்பு : ராமன் ராஜா). இந்தப் புத்தகம் பற்றிய தோழர் ரமேஷின் விமரிசனத்தை கீழே பிரசுரிக்கிறேன். ரமேஷ் ஒரு கம்யூனிஸ்ட், மொழிபெயர்ப்பாளர், நல்ல வாசிப்பாளர். தனியே வலைப்பதிவு இல்லாதததால், தன் விமரிசனத்தை எழுதி என்னிடம் அளித்தார்.


இந்தப் புத்தகம் குறித்து நான் பிறகு எழுதுகிறேன்.

0

சீனா விலகும் திரை-விமர்சனம்

- ரமேஷ்

பல்லவி ஐயர் எழுதியிருக்கும் சீனா விலகும் திரை என்ற புத்தகத்தைப் படித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன். நான் ஒரு கம்யூனிச ஆதரவாளனாக இருந்தும், சீனா பற்றி பெரிதும் அறியாமலேதான் இருந்தேன். அங்கேயே சென்று தங்கியிருந்து பல்லவி ஐயர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்துள்ளது. ஆனால் எனது அடிப்படை கோட்பாட்டை அது எந்த விதத்திலும் மாற்றி விடவில்லை என்பதையும் இங்கே கூறி விட வேண்டும். புத்தகம் முழுவதிலும் என்னை ஆகர்ஷித்த ஒரு விஷயம் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நேர்த்தி. மொழிபெயர்ப்பாளருக்கும், எடிட்டருக்கும் வாழ்த்துக்கள்.

துவக்கத்திலிருந்தே ஆசிரியர் அனைவரிடமும் கேட்க விரும்பக்கூடிய, தொடர்ந்து ஏமாற்றமடைந்த கேள்வி, உங்களால் வேறு விதமாக சிந்திக்க முடியாதா என்பது. அந்தக் கேள்வி கேட்கும் போதெல்லாம் அவர் சீன அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் கோட்பாட்டுக்கும் எதிராகவும் எதாவது கூறி விடமாட்டார்களா என்ற தவிப்பு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பது ஜனநாயகம் என்று அவர்களே கூறவில்லை. அங்கு நடப்பது பாட்டாளி வர்க்க ‘சர்வாதிகார' ஆட்சி. இரண்டாவது அங்கு வரம்புக்குட்பட்ட ஜனநாயகம்தான் உண்டு. இந்தியா போன்று போலி ஜனநாயகம் அங்கு கிடையாது. ‘ஜனநாயகவாதிகள்' எப்போது பார்த்தாலும் டின்னமென் சதுக்கத்தை துணைக்கு அழைப்பார்கள். நான் எதிர்பார்த்தது போலவே இவரும் அதை துணைக்கு அழைத்துள்ளார். இவர்களிடம் கேட்பதற்கு எனக்கு ஒரே ஒரு கேள்வி உண்டு. தயவுசெய்து நீங்கள் யாராவது இந்த ஜனநாயக ஆட்சி பதவி விலக வேண்டுமென்று கோரி ஒருநாள், ஒரே ஒரு நாள் தில்லியில் செஞ்சதுக்கத்தில் அமர்ந்து காட்டுங்கள். பிறகு நான் ஒப்புக் கொள்கிறேன் இது ஜனநாயக நாடென்று. திருநெல்வேலியில் வெறும் மனு கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு 17 பேர் செத்தார்கள். சமச்சீர் கல்வி வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்து மந்திரியை பார்க்க அனுமது கேட்ட மாணவர்கள் இங்கே சென்னையில் போலீஸால் மூர்க்கத்தனமாகத் தாக்கப் பட்டார்கள். ராஜஸ்தானில் தண்ணீர் கேட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 50 பேர் பலியானார்கள். இங்கே அண்ணா சாலையில் உரிமை கேட்டு ஊர்வலம் நடத்தி விடுங்கள் பார்க்கலாம். (திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தும், அது வேறு விஷயம்).

சரி, அது போகட்டும். இங்கே மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது ஜனநாயகம் என்றால், பீகார், தமிழ்நாடு போன்ற இடங்களில் தேர்தலா நடக்கிறது? திருமங்கலம், மதுரை, கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இப்போது கம்பம் - இதுவா ஜனநாயகம்? முதலாளித்துவக் கட்சியில் போட்டியிட இடம் கேட்கவே பணம் கொடுக்க வேண்டும். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் 300க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள். இது போதாதா, யார் இங்கே போட்டியிட்டு வெல்ல முடியுமென்று அறிந்து கொள்ள?

சரி ஐயா, இதையும் விடுங்கள். அமெரிக்கா இவர்கள் பார்வையில் சிறந்த ஜனநாயக நாடுதானே? கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கு சுமார் 26,000 கோடி ரூபாய் வேட்பாளர்களால் செலவிடப்பட்டது. பணம் கொடுத்தது யார்? முதலாளிகள். பின்னர் அவர்கள் யாருக்கு கை கட்டி சேவகம் செய்வார்கள்? மக்களுக்கா?

நான் 1991ல் மும்பையில் பணி புரிந்து கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மெனியும், மேற்கு ஜெர்மெனியும் இணைந்த முதலாவது ஆண்டின் போது ஒரு செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டிருந்தது. அது கம்யூனிஸ்ட் பத்திரிகை அல்லவென்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஒரு பெண்ணிடம் நீங்கள் கேட்ட ஜனநாயகம் உங்களுக்கு கிடைத்து விட்டதல்லவா, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறினார். உண்மைதான். நாங்கள் முன்பு அவர்களை எதிர்த்து எதுவும் பேச முடியாது. குறைகளைக் களைந்து கொள்ளலாம் அவ்வளவுதான். இப்போது எங்களுக்கு எதை வேண்டுமானாலும் கூரையில் ஏறி நின்று கூவ சுதந்திரம் உண்டு. ஆனால் யாரும் கேட்க மாட்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்கள் அடுத்த தேர்தல் வரை ஏமாளிகளாக உலா வருகிறார்களே, இதுவா ஜனநாயகம்? உங்கள் ஜனநாயகம், “Far the people, buy the people, Off the people”. போங்கய்யா, நீங்களும், உங்க ஜனநாயகமும்.

அடுத்தது, மீடியா பற்றியது. மீடியாவுக்கு சுதந்திரம் இல்லை என்று ரொம்பவே வருத்தப் பட்டிருக்கிறார். சோவியத் நாடு சிதறியதற்கு மீடியாவை கட்டவிழ்த்து விட்டது ஒரு முக்கியக் காரணம். சமீபத்தில் மும்பையில் தாஜ் தாக்கப்பட்ட போது, இந்த கார்ப்பரேட் மீடியாவின் பொறுப்பை(?) நேராகவே பார்த்தோம். இவர்களே வெளியே என்ன நடக்கிறது என்று விலாவாரியாக மக்களுக்கு (தீவீரவாதிகளுக்கு) செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர முயன்றது முறியடிக்கப்பட்டது. கார்ப்பரேட் மீடியாவை கட்டவிழ்த்து விடுவது சீன அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது. மேலும் சார்ஸ் பற்றி அவர் கூறுகிறார். இங்கு H1N1 விஷயத்தில் அவர்கள் அடிக்கும் கூத்தையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஒரு இடத்தில் கம்யூனிசக் கோட்பாடு காலம் கடந்தது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அம்மா, இப்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட பிறகு சர்கோசி வரை அனைவரும் மார்க்சின் போதனைகளைத் தான் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.

சீனா முன்னேற வேண்டுமென்ற துடிப்பில் முதலாளித்துவத்தை சிறிய அளவில் அனுமதித்துள்ளது. அந்த நடவடிக்கையே பல ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கியுள்ளது என்பது அவரது எழுத்துக்களில் புலனாகிறது. மூலதனம் என்பது இலாபத்துக்காக எதையும் செய்யும். முன்னூறு சதவிகிதம் இலாபம் கிடைக்குமென்றால் மூலதனம் தன் முதலாளியைக் கொல்லக் கூடத் தயங்காது என்பது மார்க்சின் தூரதிருஷ்டி. இந்த வார்த்தைகளைத் தான் மேற்கண்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. நான் சில நாட்களுக்கு முன் ஒரு செய்தியைப் படித்தேன். சீனாவிலிருந்து வந்த கண்டயினர்களில் ‘made in India” என்ற முத்திரையுடன் சீனாவில் செய்த தரமற்ற பொருட்கள் இருந்தன. இது எப்படி சாத்தியம் என்று திகைத்துப் போயிருந்தேன். இப்போது விடை கிடைத்து விட்டது.

பழைய வாசனையை அழிப்பது என்பது எனக்கும் ஏற்புடையது இல்லைதான். ஆனால் அதைப்பற்றி நான் எந்த முடிவும் செய்ய முடியாது. ஆனால் இங்கு கூவம் நதிக்கரையில் பணக்காரர்களுக்கு வீடு கட்ட ஏற்பாடு செய்ய ஏழைகளின் வீடுகளை இடிக்க முயல்கிறார்களே, அதைவிட சீனா பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

மதம் பற்றி அவர் பல விஷயங்களைக் கூறியுள்ளார். தற்போது அங்கு நிகழ்ந்த மதக்கலவரம் குறித்து அனைவரும் அறிந்தேயிருப்பர். அதற்குக் காரணம் அரபு நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள மதத்தை அனுமதித்ததே என்பது என் கணிப்பு. ஆனால் எந்த அரசா வது கலவரத்தை அடக்காமல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா? அப்படி சீன அரசு நடவடிக்கை எடுத்தபோது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மீடியாக்கள் அலறியதையும் பார்த்தோம். என்ன இருந்தாலும் அவர்களது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இருக்கிறதே, சூப்பர்.

அடுத்தது திபெத். அங்கு சீனாவின் கால் இருப்பதால் அங்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பதை அவராலேயே மறுக்க முடியவில்லை. முன்பு தலாய்லாமா இருந்தபோது அங்குள்ள மக்கள் பெரும்பாலோர் புத்த மதத்தில் இருந்தனர். இல்லையென்றால் வாழக்கூட முடியாது. இப்போது சீன அரசு அவர்களுக்கு வாழ வழி செய்துள்ளது. பாகிஸ்தான் நம் நாடு காஷ்மீரத்தை அடக்கி ஆளுவதாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அதை ஒப்புக்கொண்டால், இதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆமாம், இவர்களெல்லாம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்யும் ஆக்ரமிப்பையெல்லாம் கண்டு கொள்வதே இல்லையே ஏன்?

ஆனால் ஒன்று. என்ன சொன்னாலும், சீனா முன்னேறியிருக்கிறது என்பதையும், கீழ்மட்ட மக்கள் அங்கு வாழ்வதே சிறந்தது என்பதையும் மனம் திறந்து சொன்னதற்கு நன்றி. மீண்டும் நான் வலியுறுத்த விரும்புவது ஒன்றைத்தான். மூலதனம் இலாபம் சம்பாதிப்பதை மட்டுமே செய்வதாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் அது செய்யும். உலகமே அந்த மூலதனக் குவியலிலும், வரன்முறையற்ற பாய்ச்சலிலும் விழி பிதுங்கிப் போயிருக்கிறது. அதிலிருந்து தப்பித்து ஓரளவு மக்கள் சேவை செய்பவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமே. அவை இருந்து விட்டுத்தான் போகட்டுமே.

கம்யூனிஸ்ட் அரசும், கட்சியும் மக்களை விட்டு விலகியிருப்பதாகக் கூறியுள்ளார். இந்தத் தவறை சரி செய்து கொள்ளாவிட்டால், சோவியத் போல சீனாவும் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஆசிரியரே கட்சி இதை சரி செய்து விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாடுகளை முதலாளித்துவ கட்சிகளைப் போல் Gala functionகளாக நடத்துவதில்லை. பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்கவும், புதிய பாதையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன. அதுதான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறது. எனவே சோவியத்தின் வீழ்ச்சியைப் பார்த்த பிறகு மீண்டும் சீனக் கட்சி அதே தவறுகளைச் செய்யாது என்று நம்புவோம்.

5 comments:

டவுசர் பாண்டி... said...

இன்னிக்கு ஆசியாநெட் டிவி ல அரபிக்கதா..னு ஒரு படம் பார்த்தேன்.சீனாவையும் அதன் இடதுசாரி கொள்கைகளையும் ஏதோ தேவலோகம் மாதிரியான கற்பனையில் இருக்கும் ஒரு சராசரி கம்யூனிஸ்ட் ஊழியனின் பார்வையிலான படம். படத்தின் விவரங்கள் பின்வரும் இனைப்பில் காணலாம்....முடிந்தால் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Arabikatha

கம்யூனிசம் என்பது குடிக்கிற தண்ணீர்தான், துருவேறிய பாத்திரத்தில், நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் கொசுக்களுக்கு தாரைவார்க்கப் பட்டுவிட்ட தண்ணீர்.

டவுசர் பாண்டி... said...

சீரியஸா ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன் :)

TAMILSUJATHA said...

//பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்கவும், புதிய பாதையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன. அதுதான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறது. எனவே சோவியத்தின் வீழ்ச்சியைப் பார்த்த பிறகு மீண்டும் சீனக் கட்சி அதே தவறுகளைச் செய்யாது என்று நம்புவோம்.//

நம்புவோம்!

சீனா விலகும் திரை நானும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நல்ல மொழிபெயர்ப்பு. வேகமாகச் செல்கிறது!

நீங்கள் எப்போது பிளாகில் எழுதப் போகிறீர்கள் மருதன்?

ஹரன்பிரசன்னா said...

இந்திய ஜனநாயகத்தில் தவறுகள் உள்ளதால், தோல்விகள் உள்ளதால், சீன சர்வாதிகாரம் சரி என்பதும், தின்னமென் சரி என்பதும், இப்பதிவின் ஆதார விளக்கம் என்பதை ஐயம் திரிபற புரிந்துகொண்டேன். வசந்தசேனை - வாய் பிளந்து நிற்கும் ஓணான் எனப்தற்கும் ’வரம்புக்குட்பட்ட ஜனநாயகம்’ - சர்வாதிகாரம் என்பதற்கும் ஏதேனும் தொடுப்பு உண்டுமா தோழர்?

Anonymous said...

china is not communist state now they destroy the class strugle the heart of communism