October 11, 2009

ஹொண்டுராஸ் குறித்து சாவேஸ்


ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பு, பராக் ஒபாமா, பிரேஸில் நட்புறவு, வெனிசூலாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்று பல விஷயங்கள் குறித்து தி நேஷனுக்கு ஹியூகோ சாவேஸ் அளித்த போட்டி இங்கே. ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பை மிகக் கடுமையாகச் சாடிய நாடு வெனிசூலா. அமெரிக்காதான் இதற்குப் பதிலளிக்கவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார் சாவேஸ். கவிழ்ப்புக்குப் பிறகு புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டால், அது வீழ்த்தப்படும் என்று எச்சரித்தார். ஹொண்டுராஸுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திக்கொள்ளப்போவதாகவும் செய்தி வெளிவந்தது.

ஜூன் 28, 2009 அன்று ஹொண்டுராஸ் ராணுவம், அதிபர் மானுவேல் ஜெலாயாவின் ஆட்சியைக் கவிழ்த்தது. ஜெலாயா நாடு கடத்தப்பட்டு, கோஸ்டாரிகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உலகம் முழுவதிலும் இருந்து பல கண்டனங்கள் எழுந்தன. நான் கடத்தப்பட்டிருக்கிறேன் என்று பேட்டி அளித்தார் ஜெலாயா. படுக்கையில் இருந்து எழுப்பி, என் பாதுகாவலர்களைத் தாக்கி, என்னை இழுத்துச் சென்றார்கள். எனக்குப் பிறகு ஆட்சியை யார் கைப்பற்றினாலும் அவர்களை நான் ஆதரிக்கமாட்டேன். ஜெலாயாவின் ராஜிநாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அது தன்னுடையதல்ல என்று மறுத்தார் ஜெலாயா. ஒருவரும் சட்டை செய்யவில்லை. ராபர்ட்டோ மிச்சிலட்டி என்பவர் அதிபராக அமர்த்தப்பட்டார். ஐ.நா., அமெரிக்கா என்று தொடங்கி உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. ஐ.நா. ஒரு பக்க கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது நீதிக்குப் புறம்பானது என்றார் ஒபாமா. நடந்திருப்பது ஆட்சிக்கவிழ்ப்புதான் என்றார்.

செப்டம்பர் 21 அன்று ஜெலாயா, ஹொண்டுராஸின் தலைநகரமான டெகுசிகால்பாவுக்குத் தன் மனைவியுடன் திரும்பினார். அங்கிருந்த பிரேசில் தூதரகரத்தில் அவருக்கு அடைக்கலம் கிடைத்தது. ஜெலாயா இங்கே வரவில்லை என்று தொடக்கத்தில் அறிவித்த புதிய அதிபர் ராபர்ட்டோ மிச்சிலட்டி, பின்னர் அதை ஒப்புக்கொண்டார். பிரேசில் தூதரகம் ஜெலாயாவை ஒப்படைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டார். பிரேசில் மறுத்துவிட்டது. ஜெலாயாவுக்கு நாங்கள் எந்தவித உதவியும் செய்யவில்லை, எங்கள் உதவியுடன் அவர் திரும்பி வரவில்லை என்றும் அறிவித்தது. ஹொண்டுராஸ் இதனை ஏற்கவில்லை. பத்து தினங்களுக்குள் ஒப்படைக்கவேண்டும் என்று கெடு விதித்தது. சாவேஸ் அளித்த அதே பதிலைத்தான் லூலா டெசில்வாவும் அளித்தார். ஆட்சிக் கவிழ்ப்பாளர்களிடம் உட்கார்ந்து எங்களால் பேசிக்கொண்டிருக்கமுடியாது.

லூலா டெசில்வாவுடனான தன் உறவு குறித்த தி நேஷன் பேட்டியில் விவரிக்கிறார் சாவேஸ். லூலாவின் வருகைக்குப் பிறகு, பிரேசில் நல்ல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது என்று பாராட்டுகிறார். 'எங்கள் நெருக்கத்தை உடைக்கவேண்டும் என்று சமீப காலங்களில், சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால, அவை தோல்வியடைந்துவிட்டன.'

ஒபாமாவின் வருகைக்குப் பிறகு, அமெரிக்கா-வெனிசூலா உறவு முன்னேற்றம் கண்டிருக்கிறதா? மறுக்கிறார் சாவேஸ். 'இன்னமும் மோசம்தான் அடைந்திருக்கிறது.' அமெரிக்கா லத்தீதன் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து குழுப்பங்கள் விளைவித்துக்கொண்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில், ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பு ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளையும் பாதிக்கும் ஒரு செயல் என்கிறார் சாவேஸ்.

1980களில் ரொனால்ட் ரீகன், ஹொண்டுராஸை தனது அரசியல் தளமாகப் பயன்படுத்திக்கொண்டார். நிகாரகுவா, எல் சல்வடார், கவுதிமாலா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஹொண்டுராஸில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. ஹொண்டுராஸ் விவாகரத்துக்கு சாவேஸ் முக்கியத்துவம் அளிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. 2002ல் வெனிசூலாவில் சாவேஸின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்து தோற்ற Robert Carmona-Borjas, ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்றிருக்கிறார்.

புதிய ஆட்சியாளர்கள் ஹொண்டுராஸில் தற்சமயம் கடுமையான அடக்குமுறையை கொண்டுவந்திருக்கிறார்கள். செய்திகள் தணிக்கை செய்யப்படுகின்றன. போராட்டக்காரர்களையும், ஜெலாயா ஆதவாளர்களையும் ஒடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜெலாயாவின் ஆட்சி ஏன் கவிழ்க்கப்பட்டது? சாவேஸின் பதில் இது. 'ஜனநாயகத்தைப் பார்த்து பலர் பயப்படுகிறார்கள்.'

மேலதிக விவரங்களுக்கு :

1) Battle for Honduras--and the Region
2) Honduran Coup Regime in Crisis
3) Honduras coup leaders tighten curbs on media
4) Democracy Derailed in Honduras
5) Zelaya Speaks

3 comments:

Raj Gopal said...

Good article. Not many news articles on Honduras in tamil media. why?

Anonymous said...

ஒபாமா வாழ்க! சாவேஸ் ஒழிக

மருதன் said...

Raj Gopal : ஹொண்டுராஸ் குறித்து சிந்திக்கவேண்டிய அவசியமும் தேவையும் இங்குள்ள மீடியாவுக்கு இல்லை. வெட்டிச் செய்திகளும் வீண் பரபரப்புகளும்தான் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன.