July 23, 2010

இவர்களை எப்படிப் புரிந்துகொள்வது?

சேரிகளிலும் வீதியோரங்களிலும் வாழ்பவர்கள் பற்றி சில பிரபலமான பொதுக்கருத்துகள் உள்ளன. நோயின் பிறப்பிடம் சேரி. சேரி மக்கள் வீதிகளை அசுத்தப்படுத்துகிறார்கள். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வேலை வாங்குகிறார்கள். இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளுக்குள் செல்வது ஆபத்தானது. சேரிகள் கிரிமினல்களின் மறைவிடமாகவும் உள்ளது. நிலத்தை வளைத்துப் போட்டு, பொது மக்களுக்கு இடைஞ்சல் விளைவிப்பவர்கள். அழுக்கானவர்கள், அசுத்தமானவர்கள், அருவருக்கத்தக்கவர்கள். நடைபாதையில் பொங்கி, உண்டு, கழுவி, குளித்து, மழித்து, அங்கேயே கால் மடக்கி அமர்ந்து... ச்சே, எப்படிச் சொல்வது? கொஞ்சமாவது டீசன்ஸி வேணாமா ஸார்?

அவர்களைக் கண்டு பொறாமைப்படுபவர்களும் இருக்கிறார்கள். பிசி ரோடில் ஒரு பகுதியை வளைத்துப்போட்டுவிட்டார்கள். இங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் பத்து நிமிஷம். இரண்டு நிமிஷம் நடந்துபோனா ரயில்வே ஸ்டேஷன். வெளியூர் போக, வர நல்ல வசதி. யார் வந்து என்ன கேட்கப்போறாங்க? இவங்களுக்கு பொலிட்டிக்கல் சப்போர்ட் இருக்கு. பார்த்தாலே தெரியலை, நல்லா உலக்கை மாதிரி இருக்காங்க. கேட்டா நம்ம கிட்டயே லா பேசுவாங்க. கம்பத்துல இருந்து கரண்ட் பைசா செலவில்லாம இழுத்துக்கலாம். பசங்களுக்கு இலவச கல்வி, சீருடை, சாப்பாடு. வாடகை கொடுக்கவேண்டாம். வேலைக்குப் போகவேண்டாம். ஃப்ரீயா, ஹாயா இருந்திடலாம்.

இரண்டு நாள் பயணமாக சென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் (Madurai Institute of Social Sciences) முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கலந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மதுரையின் வீதியோரங்களில் வசிக்கும் மனிதர்கள், சேரி மக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் குறித்து இவர்கள் மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு பேருந்து நிலையத்தைப் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்றார் பேராசிரியர் ஒருவர். இவர் பார்வையில், பேருந்து நிலையம் என்பது மிகவும் சிக்கலான, மிகவும் நுணுக்கமான பல வலைப்பின்னல்களைக் கொண்டது. தினம் தினம் புதிது புதிதாக பல வெளிச்சங்கள் கிடைப்பதாக வியப்புடன் சொன்னார். பிச்சை எடுப்பவர்கள். பூ விற்கும் பாட்டி. தின்பண்டங்கள் விற்கும் நடமாடும் வியாபாரி. கட்டணக் கழிப்பிடத்துக்கு முன்னால் சிறிய பிளாஸ்டிக் கல்லா பெட்டியுடன் வீற்றிருக்கும் நபர். பேருந்துக்குள் ஏறி, இறங்கி, வாழைப்பழம் விற்கும் முதியவர். உடையணியாத சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் சிறுமி. சிறு வளையம் ஒன்றில் தன் முழு உடலையும் செலுத்தி, ரப்பர் போல் வளைந்து வெளியில் வரும் ஒரு சிறுவன். துண்டு ஒன்று விரித்து நாணயங்களைச் சேகரிக்கும் ஒரு கிழவி.

இவர்களை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி வகைப்படுத்துவது? எப்படி மதிப்பீடு செய்வது?

கம்புகளையும் தார்பாலின் ஷீட்டுகளையும் கொண்டு சேரிப்பகுதிகளில் கூடு கட்டி வாழும் மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? பள்ளிக்குச் செல்வதை தேவையற்ற ஒரு சடங்காகக் கருதும் குழந்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது? இங்கே முதல்ல வந்து குடியேறினது நான்தாங்க என்று பெருமையுடன் சொல்லும் அந்த தலித் முதியவரை எப்படிப் புரிந்துகொள்வது?

மூட்டிய அடுப்புக்கு ஐந்தடி தள்ளி சாக்கடை சீறிப் பாய்ந்து சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நிர்வாணமாகச் சிறுவர்கள் சத்தமிட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தாத்தா சாக்குப் பையை மேலுக்குப் போர்த்தி உறங்கிக்கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நாய்களும் வீங்கிய வயிறுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இரும்புக் குப்பைகளைக் கொட்டி கணவன், மனைவி இருவரும் அமைதியாக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நட்டு, போல்டு, சிறு தகரம், சோடா பாட்டில் மூடி ஆகியவற்றை தனித்தனியே பிரித்து எடுக்கிறார் அந்தப் பெண்மணி. கணவன், பேட்டரி செல்லை உடைக்கிறார். பாட்டிலின் விளிம்பில் இருக்கும் அலுமினிய வளையத்தை அறுக்கிறார். வளைந்த கம்பிகளை நீட்டி மடக்குகிறார். காமிராவுக்கு முன்பாக நடுங்கியபடி அவர்கள் கை நீட்டும்போது, அதிர்ச்சியாக இருக்கிறது. கைகளில்கூட துரு பிடிக்குமா?

ஒரு பிராந்தி பாட்டில் ஒரு ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு ரூபாயை அளித்துவிட்டு பாட்டிலை பெற்றுக்கொள்ளும் வியாபாரி, அந்த பாட்டிலைக் கழுவி இரண்டு ரூபாய்க்கு வேறொரு வியாபாரிக்கு விற்கிறார். இரண்டாவது வியாபாரி, அரசு மருத்துவமனையின் வாயிலில் இந்த பாட்டில்களை அடுக்கி வைக்கிறார். சிரப்பு ஊத்திக்கொடுக்க புட்டி வச்சிருக்கியா என்று வெள்ளை சட்டை அணிந்த அதிகாரி கேட்கும்போது, மக்கள் வாசல் கடைக்குத்தான் ஓடுகிறார்கள். ஒரு புட்டி, மூன்று ரூபாய்.

மிதிவண்டி நிறுத்திடத்தை ஏலத்தில் எடுப்பவர்கள் ஒரே ஆண்டில் லட்சாதிபதி ஆகிவிடலாம் என்கிறார்கள். மதுரையில் குறிப்பிட்ட ஓரிடத்தில், ஒருவருக்கே பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கிறதாம். அரசியல் பின்புலம் இருந்தால்தான் இது சாத்தியமாகும். அதே போல், கழிப்பிடம் ஒரு தங்கச் சுரங்கம். தேவை ஒரு நாற்காலியும் மேஜையும். அவ்வப்போது கழுவிவிட பணியாளர்கள். உட்கார்ந்த இடத்தில் இருந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். ஒருவருக்கு பத்து கழிப்பிடங்கள் சொந்தமாகிவிட்டால் அவர் சில ஆண்டுகளில் பண்ணை வீடு வாங்கிடலாம்.

அதே நடைபாதையில்தான் பலூன் விற்கிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள். குரங்கு கூட்டிவந்து வித்தை காட்டுகிறார்கள். உதடுகளில் அடர்த்தியான சிவப்பு சாயம் பூசி இருளில் பெண்கள் காத்திருக்கிறார்கள். ஆட்டோக்கள் காத்திருக்கின்றன. கூடையில் இட்லி விற்கிறார் பாட்டி ஒருவர். ரூம் வாடகைக்கு வேணணுமா ஸார் என்று ஒருவர் காதில் கிசுகிசுக்கிறார். டை கட்டிய ஒருவர் ஆங்கில அகராதி விற்றுக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் யார்? நடைபாதை மனிதர்கள் என்று இவர்களை வகைப்படுத்தமுடியுமா? எனில், பிச்சை எடுப்பவரும், கழிப்பறை சுத்தம் செய்பவரும், அதே கழிப்பறையின் முன்னால் பாக்கு மென்றபடி, 'ஒண்ணுக்கு இரண்டு ரூபா, இரண்டுக்கு நாலு ரூபா' என்று பல்லிடுக்குகள் வியாபாரம் செய்பவரும், அங்கிருந்து ஐந்தடி நடந்தால் தென்படும் குடிசைகளில் வசிப்பவர்களும் ஒரே பிரிவில் வந்துவிடுவார்களா?

இவர்களில் யாரால் பொது மக்களுக்கு சிரமம்? யார் நோய் பரப்புபவர்கள்? யார் பிச்சைக்காரர்கள்? மீனாட்சியம்மன் கோயில் வாசலில் துண்டு விரித்து அமர்ந்திருக்கும் ஒருவர் இரவு நேரங்களில் குப்பையும் பொறுக்கிறார். மதியத்தில் சாராயம் குடிக்கிறார். வாய்யா என்று ஏஜெண்ட் கூப்பிட்டால், மூட்டை இறக்கி, ஏற்றுகிறார். அரிதான சமயங்களில், காசு கொடுத்து பேப்பர் வாங்கியும் படிக்கிறார். இவர் யார்? பிச்சைக்காரரா? கூலித் தொழிலாளியா? வேலையில்லாதவரா? சோம்பேறியா? இவர்களில் யார் பொது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள்? எனில், இவர்கள் பொது மக்கள் இல்லையா?

போதை மருந்து கடத்தும் தொழுநோயாளிகள் என்றொரு பத்திரிகைச் செய்தி. பாலியல் தொழில் செய்யும் பிச்சைக்காரப் பெண்கள் மற்றும் அரவாணிகள் பற்றி படங்களுடன் ஒரு ரிப்போர்ட். குழந்தைகளை வதைத்து அவர்களை வைத்து தொழில் நடத்தும் பெரிய மனிதர்கள் பற்றியும் பிச்சைக்காரர்களிடம் இருந்து கமிஷன் வாங்கும் காக்கிச்சட்டைகள் குறித்தும் ஒரு செய்திக் கட்டுரை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தீ விபத்து. இலவச பிரியாணி பொட்டலமும் பணமும் வாங்க போட்டிப்போடும் சேரி மக்கள். ரயில் நிலையத்தில் சடை முடியுடன் உறங்கும் மனநோயாளிகள். பிச்சைக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நகர மேயர் முடிவு என்றொரு அலட்டல். பத்திரிகைகளில் இருந்தும் செய்தித்தாள்களில் இருந்தும் புத்தகங்களில் இருந்தும்கூட இவர்களைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை. பிம்பங்கள் தனித்தனியே உதிர்கின்றன.

அந்தப் பேராசிரியர் சொன்னது சரி. ஒரு பேருந்து நிலையத்தை அவ்வளவு சீக்கிரம் புரிந்துகொண்டுவிடமுடியாது.

12 comments:

ஹரன்பிரசன்னா said...

இந்தப் பதிவை எப்படி புரிந்துகொள்வது.

krishnakrishna said...

//குழந்தைகளும் நாய்களும் வீங்கிய வயிறுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். //

வேதனை தரும் வரிகள்

no-nononsense said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்.

இந்தப் பதிவு என்னுடைய திருச்சி மத்திய பேருந்து நிலைய உலாவல்கள் பற்றிய நினைவை மீட்டெடுக்கிறது. சில காலம் அதற்கு நேரெதிரான ஒரு கட்டிடத்தில் தனியனாக தங்கிக்கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்ததால் தினமும் சற்றே காலாற பேருந்து நிலையத்தினுள் உலாவி வருவதுண்டு. அது ஒரு தனி உலகம். பேராசிரியர் சொன்னது போல் அதை புரிந்துகொள்வது என்பது எளிதான காரியம் அன்று. எத்தனையோ விதமான மனிதர்களும் அவர்களின் தொழில்களும் தனித்துவமான வாழ்க்கைமுறைகளும் தினமும் புதிது புதிதாக அறிமுகமாகிக் கொண்டே இருக்கும். அவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குவது எப்போதும் திறந்தே இருந்து எல்லோரையும் தன்னுள் அனுமதிக்கும் பேருந்து நிலையத்தின் கதவுகளற்ற/பேதமற்ற வாசல்கள். வேறு எந்த களமும் மனிதர்களுக்கு அளிக்காத வசதியும் சுதந்திரமும் இது.

Anonymous said...

link to get the code for total posts and total comments

http://www.blogosys.com/2008/12/how-to-display-total-number-of-posts.html

சுதிர் said...

அன்றாடம் காணும் காட்சிகள் தான் ஆனாலும் மனதை தொடும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

Anonymous said...

very good and touching writing up

மருதன் said...

வீ. புஷ்பராஜ் :
உங்கள் வலைப்பதிவை நீங்கள் பொதுவில் அறிமுகப்படுத்தலாமே! உங்கள் கருத்துகளை முன்வைப்பதற்கும் விவாதிப்பதற்கும் வசதியாக இருக்கும் அல்லவா?

Unknown said...

good way of writing and good way of conveying social nasties.. but sure, these are all usual symbols of our country and its rituals.. any chief minister or prime minister can,t vanish these kind of situations.. such an adamant country.. is our INDIA..

Anonymous said...

@வீ.புஷ்பராஜ்

hi,

this is daydasher... or just 'd'...
I remember you..once u put a reply comment to me in a post about nithyanandha... i too have thought as like marudhan while seeing you writing lot of big comments to marudhan...

Venkat said...

http://www.tn.gov.in/departments/social.html

- மேலே உள்ள உரல் தான் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில்.

நம் வரி பணத்தை சம்பளம் என்ற பெயரில் வாங்கிக்கொண்டு, நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இவர்கள் பணிக்கப பட்டிருக்கிறார்கள்

கனிமொழி - "member of committed for woman empowerment " - கவைக்குதவாத கவிதை இயற்றுவதை விட்டு(உ.தா- "சிகரங்களில் உறைகிறது காலம்" ) , கோயம்பத்தூரில் செய்த மாற்றத்தைப் போல் மற்ற இடங்களில் செய்யலாமே

Venkat said...

இந்தியாவில் சோசியல் வேல்பாரே என்பது சுத்தமாக கிடையாது.
அதற்கான இலாகாவினர் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
காப்பீடு இருந்தால் கூட , இறந்தவர் குடும்பத்துக்கு பணம் தானாக தேடி வந்து கொடுக்கப்படுவதில்லை . குடும்பத்தினர் விண்ணபித்தால் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், இதெல்லாமே, ஆட்சியில் இருப்பவர் நினைத்தால் சட்டென்று மாற கூடியதே. உ.தா. சுபெக்ட்ரும் ஊழல் பணததைக் கொண்டு , என்ன வெல்லாமோ சாதித்து காட்ட முடியும்

S.Rengasamy - cdmissmdu said...

புஷ்பராஜ் சொன்ன மாதிரி .....எல்லாவற்றையும் சாத்தியமாக்குவது எப்போதும் திறந்தே இருந்து எல்லோரையும் தன்னுள் அனுமதிக்கும் பேருந்து நிலையத்தின் கதவுகளற்ற/பேதமற்ற வாசல்கள்....பேருந்து நிலையங்களைப் புரிந்து கொள்வதென்பது கடினமான செயலல்ல..ஆனால் அது நமது அறிவுக்கும, மனிதாபிமானத்திற்கும் விடப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால்.
அந்த சவாலை ஏற்றுக் கொண்டு தொடரும்படியான உற்சாக வார்த்தைகள்.. நன்றி மருதன்