அனார்க்கிஸம் (Anarchism) என்னும் பதத்தை, அராஜகவாதம் என்று சிலர் மொழிபெயர்க்கிறார்கள். அரசழிவு கோட்பாடு என்றும் ஆட்சிக் குலைவு சித்தாந்தம் என்றும்கூட இதனை அழைக்கலாம். அரசாங்கம் என்னும் அமைப்பை எதிர்க்கும் அரசியல் சித்தாந்தம் இது. அரசாங்கம் தேவையற்றது, தீங்கானது என்பது இந்தச் சித்தாந்தத்தின் சாரம். தனி நபர்களை, அரசாங்கம் கட்டுப்படுத்துவது மனித உரிமைகளை மீறும் செயல் என்கிறார்கள் இந்தச் சிந்தாந்தத்தை முன்வைப்பவர்கள். அரசாங்க எதிர்ப்புச் சித்தாந்தத்தை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவலாகக் கொண்டு சென்றவர், எம்மா கோல்ட்மேன் (Emma Goldman). எம்மாவின் அரசாங்க விரோத சிந்தனைகளின் தோற்றுவாய், ஹேமார்க்கெட் படுகொலைகள்.
சிகாகோ தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலை கோரிக்கைக்கு தார்மீக ஆதரவு அளிக்கவும்தான் ஹேமார்க்கெட்டில் மக்கள் ஊர்வலம் சென்றனர். ஆனால், இங்கும் காவல்துறை வன்முறையை ஏவியிருந்தது. மேலும், அரசொழிப்பு கொள்கை பற்றாளர்களை இதில் தொடர்புபடுத்தி, அவர்களில் சிலருக்கு மரண தண்டனையும் விதித்தது. தொழிலாளர் பிரச்னையைத் திசை திருப்புவதே அரசின் நோக்கமாக இருந்துள்ளது. அரசாங்கம் என்பது தொழிலாளர்களுக்கு எதிரான அமைப்பு. அந்த வகையில், அரசாங்கம் என்பதே எதிர்க்கப்படவேண்டிய ஓர் அமைப்புதான் என்னும் முடிவுக்கு எம்மா கோல்ட்மேன் வந்து சேர்ந்தார். அதே சமயம், சிகாகோ தொழிலாளர்கள் எழுச்சியும் ஹேமார்க்கெட் சம்பவமும், முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் கலவரத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியதை அவர் கண்டுகொண்டார்.
செப்டெம்பர் 6, 1901 அன்று அமெரிக்க அதிபர், வில்லியம் மெக்கின்லே, லியோன் ஸோல்கோஸ் (Leon Czolgosz)என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எம்மாவின் சொற்பொழிவு ஒன்றை கேட்டதாகவும் அதன் மூலம் உத்வேகம் பெற்றதாகவும் லியோன் விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். எம்மாவைக் கைது செய்ய இது ஒரு காரணமாக அமைந்தது. அரசாங்க ஒழிப்பு மட்டுமின்றி, முதலாளித்துவம், பெண்ணியம், ராணுவ அரசியல், மனித உரிமைகள் என்று பல துறைகளில் எம்மா கவனம் செலுத்தினார். எழுபதுகளில் எம்மா மீண்டும் கண்டெடுக்கப்பட்டபோது, அவர் கருத்துகள் இன்னும் பரவலாகப் பலரைச் சென்றடைந்தது.
முதலாளித்துவம் குறித்த தெளிவான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது அரசொழிப்புச் சித்தாந்தம். அரசு மூர்க்கத்தனத்தைப் பிரயோகித்து மக்களை அடக்கி ஆண்டுவருகிறது. ஒரு சிலரின் நன்மைக்காக (முதலாளிகள்) பொது மக்களை அவதிக்குள்ளாக்குகிறது. வரி விதிப்பு என்னும் பெயரில் அவர்களைக் கசக்கிப் பிழிகிறது. ஏதேச்சதிகாரத்தை நிலைநாட்டுகிறது. சட்டங்கள் மூலம், தனி மனித சுதந்தரத்தையும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துகிறது. முதலாளித்துவம் என்பது அரசாங்கத்தை ஒத்த சுரண்டல் அமைப்பே ஆகும்.
No comments:
Post a Comment