சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கி இரு தினங்கள் முடிந்துவிட்டன. பல ஸ்டால்களில், புத்தகங்கள் அடுக்கி வைக்கும் பணி நேற்றுதான் முடிவடைந்தது. கேண்டீன் காலியாக இருக்கிறது என்பதை வைத்து கூட்டத்தை எடைபோட்டுக்கொள்ளலாம். வார இறுதியில்தான் மக்கள் கூடுவார்கள். கண்காட்சிக்கு வெளியே, நடைபாதையில் பழைய புத்தகக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டன. காமிக்ஸ் புத்தகங்கள் ஐந்து ரூபாய். ஆங்கில நாவல்கள் பத்து ரூபாய். கெட்டி அட்டையுடன் கூடிய பெரிய ஆங்கில புத்தகங்கள் 50 ரூபாய். அதிகபட்ச விலை இதுவே. பெரும்பாலானவர்கள், இங்கே குறைந்தது அரை மணி நேரம் செலவிட்ட பிறகே, அரங்குக்குள் நுழைகிறார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நடை பாதை சீராக இருக்கிறது. ஸ்டால் எண்களுடன் கூடிய பதிப்பகப் பட்டியல் இதுவரை கண்ணில் படவில்லை. இன்று வாங்கி வைத்துக்கொண்டால், உபயோகமாக இருக்கும்.
கிழக்கு, கீழைக்காற்று, விகடன் ஸ்டால்களில் கூட்டம் இருந்தது. மாவோவின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக விடியல் நண்பர்கள் தெரிவித்தார்கள். அடுத்த சில மாதங்களில் தொகுப்பு வெளிவரக்கூடும். முன்னதாக, மாவோவின் ராணுவப் படைப்புகளை விடியல் வெளியிட்டுள்ளது. சீனா தொடர்பான புத்தகங்களை விடியல், அலைகள் இரண்டும் சீராக வெளிக்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் சென்ற ஆண்டு வெளிவந்த வில்லியன் ஹிண்டனின் சீனா முடிவுறாத போர், முக்கியமானது.
சோவியத் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் அளவுக்கு சீனப் புத்தகங்கள் தமிழில் அதிகம் இல்லை. முன்னேற்றப் பதிப்பகமும் ராதுகா பதிப்பகமும் மேற்கொண்ட அசாதாரண உழைப்போடு ஒப்பிட்டால் சீனாவின் Foreign Language Press, Beijing மிகக் குறைவான நூல்களையே கொண்டு வந்துள்ளது. அதிலும், தமிழ் மொழிபெயர்ப்புகள் அரிதானவை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படைப்புகள் முழமையாகத் தமிழில் கிடைத்துள்ளதைப் போல் மாவோவின் படைப்புகள் இன்னமும் கிடைக்கவில்லை என்னும் குறை தீர்க்கப்படவேண்டும். அலைகள், விடியல் மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு முயற்சிகள் இந்தக் குறையைப் போக்கும் என்று நம்புகிறேன்.
Book World Library (அரங்கு எண் F23) இறுக்குமதி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. பாப்புலர் நாவல்கள் தொடங்கி அரசியல், வரலாறு, மானுடவியல், அறிவியல் என்று பல துறைகளைச் சேர்ந்த புததகங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. முதல் படத்தில இடம்பெறும், There's A Riot Going On என்னும் 600 பக்க கெட்டி அட்டை நூலின் விலை, 99. வித்தியாசமான ஒரு புத்தகம் இது. அறுபதுகளில் அமெரிக்காவில் செயல்பட்ட புரட்சியாளர்கள், பாப் பாடகர்கள், எதிர் கலாசாரக்காரர்கள் ஆகியோரின் வாழ்வையும் சிந்தனைகளையும் இந்தப் புத்தகம் பிரதிபலிக்கிறது.
இணையத்தளம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய உலகில், தகவல் களஞ்சியங்களின் தேவை குறைந்துவிட்டதைக் காணமுடிந்தது. Sports History என்னும் மாபெரும் ஆயிரம் பக்க புத்தகத்தை (வண்ணப் படங்களுடன் கூடியது) அனைவரும் கடந்து சென்றுகொண்டிருந்தனர். அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள், சென்று பார்க்கவேண்டிய சுற்றுலா பகுதிகள், திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பம், வழவழ தாளில் வண்ணப்படங்களுடன் கூடிய நாடுகள் வரிசை என்று பல பெரிய அளவு, கெட்டி அட்டைப் புத்தகங்கள் கொள்வார் இன்றி காத்துக்கிடக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை, 150 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.
டாக்டர் புரூனோ, கே.ஆர். அதியமான், பா. ராகவன் மூவரும் கிழக்கு அரங்குக்கு அருகில் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இயேசுவே உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்றார் புரூனோ. கம்யூனிஸ்ட் என்று யாரும் இல்லை, அனைவரும் காபிடலிஸ்ட் தான் என்றார் அதியமான். வைஷ்ணவமே உலகின் அதி உன்னத மார்க்கம் என்றார் பா. ராகவன். இதில் சரணடைபவர்களுக்கு விடுதலை நிச்சயம் என்றார். உலக, உள்ளூர் பிரபலங்களின் பிறந்த தேதி பலன் குறித்து புரூனோவும் அதியமானும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதியமான், முன்போல் அதிகம் எழுதுவதில்லை. இந்தியா, அமெரிக்காவின் வழியில் ஏகப்பட்ட ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக்கொண்டிருக்கும் அபாயம் குறித்து கவலை தெரிவித்தார். இன்னுமொரு பொருளாதார வீழ்ச்சி நேர்ந்தால், அமெரிக்காவோடு சீனாவும் சேர்ந்தே பாதிப்படையும் என்றார். இது ஆரூடமா, அபாய அறிவிப்பா என்று கண்டறியமுடியவில்லை.

3 comments:
There is a riot going on. ஹாஹா!
நல்ல அறிமுக்த்துககு நன்றி மருதன்
மருதன் நேற்று உங்களை சந்திக்க முடிந்ததில மகிழ்ச்சி. நெல்சன் மண்டேலா புத்தகம் படித்தேன். கனமான விஷய்ங்கள் கூட எளிதான நடையில் விளக்கியிருக்கிறீர்கள். நீங்கள் ப்ரீயாக இருக்கும்போது தொடர்பு கொள்கிறேன். சதீஷ் சுந்தரம்
Post a Comment