January 8, 2011

ஆனந்தத்தின் பிரகடனம், இருபது ரூபாய்


சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த முறை ஆன்மிகம் அதிகம் தழைத்திருந்தது. இஷா அரங்கில் புன்னகையும் அன்பும் ததும்ப நின்று வரவேற்கிறார்கள். உள்ளே நுழைந்து ஐந்து நிமிடம் உலாவினால், அருகே நெருங்கி காதருகே கிசுகிசுக்கிறார்கள். அன்பரே, குருஜி சேலத்துககு இத்தனாம் தேதி வருகிறார், சென்னைக்கு இத்தனாம தேதி வருகிறார், டெல்லிக்கு இத்தனாம் மாசம் போகிறார். சென்று தரிசித்து பயன் பெறுங்கள். இன்னமும் காட்டுப்பூ குறித்தும், தியான நிலைகள் குறித்தும் லெக்சர் கொடுக்கிறார்கள். பட்டியல் கொடுத்தார்கள். கருணைக்குப் பேதமில்லை பத்து ரூபாய். பொருள்நிலை கடந்த பரிமாணம் 20. படைப்பில் இருந்து படைத்தவனுக்கு 20. செய், செய்யாதே 85. அத்தனைக்கும் ஆசைப்படு 125. ஆனந்தத்தின் பிரகடனம், 20. ஆடியோ, வீடியோ அனைத்தும உள்ளது அன்பரே. ராமா, கிருஷ்ணா அரங்கில், துளசி மாலை, விபூதி பாக்கெட், கமண்டலம் அனைத்தும் கிடைக்கிறது. கால் மணி நேரம் பர்சேஸ் செய்தால், துறவியாகிவிடலாம்.

முதல் படத்தில் ஒரு குருஜியை போட்டுவிட்டபடியால், இங்கே இது அவசியமாகிறது. வே. ஆனைமுத்து தொகுத்த ஈவேரா சிந்தனைகள் முழுமையான தொகுதி (ஆங்கிலத்தில் ரிவோல்ட் தொகுப்பு உள்பட) இங்கே கிடைக்கிறது. ஐந்தாயிரம் ரூபாய். முனபதிவு செய்தால் விலை குறையும். ஆனால், அட்டைப்பெட்டி சில மாதங்கள் கழித்தே கையில் கிடைக்கும்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தில் பத்து ரூபாய் தொடங்கி பெரியார் பிரசுரங்கள் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் கலெக்டெட் வொர்க்ஸ் கிடைக்கிறது. ரிச்சர்ட் டாக்கின்ஸ் தமிழில் கிடைக்கிறார். மொழிபெயர்ப்பு நன்றாக இருப்பதாக நண்பர் சொன்னார். பெரியார் களஞ்சியம் குடி அரசு, ஒவ்வொரு ஆண்டுககும் தனித்தனியே பெரிய அட்டையில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

புது வரவு. கவரும் வடிவமைப்பில் மாவோ பற்றி இரு பெரிய மொழிபெயர்ப்பு நூல்களை விடியல் கொண்டு வந்துள்ளது. எழுதியவர் ஹான் சூயின். எலிஸபெத் கோம்பர் என்பவரின் புனைப்பெயர் Han Suyin. முதல் புத்தகம், அதிகாலைப் பெருவெள்ளம்: மாவோவும் சீனப் புரட்சியும். 1893 தொடங்கி 1954 வரையிலான காலகட்டத்தைப் பற்றியது இது. இரண்டாவது புத்தகம், கோபுரத்தை உலுக்கிய காற்று: மாவோவும் சீனப் புரட்சியும். 1949 தொடங்கி 1965 வரை. மாவோவின் வாழ்வும், சீனப் புரட்சியின் தன்மைகள் குறித்தும் இவை விவாதிக்கின்றன. முதல் புத்தகம் 600 ரூபாய். இரண்டாவது, 400. மற்றொரு புதிய புத்தகம், ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க் கதை, எஸ்.வி. ராஜதுரை, விலை ரூ 80.
அலைகளின் பிற முக்கிய வெளியீடுகள். என் வாழ்க்கை, டிராட்ஸ்கி, ரூ 600. இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும், சுனிதி குமார் கோஷ், (இரு தொகுதிகள்) 600. மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ஒன்பது தொகுதிகளில் வரவிருக்கிறது. 2011 மே மாதம் வெளிவரும். விடியல்-அலைகள் இணைந்து வெளியிடுகிறார்கள்.

அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது பூவுலகின் நண்பர்கள் அரங்கு. சூழலியல் தொடர்பான நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூவுலகு என்றொரு மாதாந்திர இதழையும் கொண்டு வருகிறார்கள். சில இதழ்கள் வாங்கினேன். சிறு இதழ்கள் சிலவற்றை சேகரிக்க முடிந்தது. இன்னும் சிலவற்றை நண்பர்கள் அளித்தார்கள். தன்னம்பிக்கை, விடியல், சமரசம், சமநிலைச் சமுதாயம், பாடம்.

நியூ செஞ்சுரியில் புது வரவு. கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். விலை ரூ 500. பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய நீண்ட ஆய்வு. மொழிபெயர்ப்பாளர் எஸ். தோதாத்ரியைச் சென்ற ஆண்டு சந்தித்தபோது, இப்புத்தகத்தை மொழிபெயர்ப்பதில் ஏற்பட்ட சவால்களையும் சிக்கல்களையும் பற்றி பேசினார்.

அத்தனை கூட்ட நெரிசலிலும் மாக்ஸ்முல்லர் பவன் அரங்கில் அமைதியாக உறங்கும் இசை மேதைகள். வருடாந்திர உறுப்பினர் கட்டணம், 700 ரூபாய். புத்தகங்கள், இதழ்கள், சிடி, டிவிடி அனைத்தும் கிடைக்கும்.


பூவுலகின் நண்பர்களின் அறைகூவல்!இருபத்தேழு ரூபாய் கொடுத்தால் சத்திய சோதனை.


பல இஸ்லாமிய அரங்குகளில் காஷ்மீர் பற்றிய புதிய புத்தகங்கள் வந்திருந்தன. இந்தப் புத்தகம் இலக்கியச் சோலையில் கிடைக்கிறது.


கைதானால் உங்கள் உரிமைகள், 10 ரூ. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 20. மனித உரிமைகள் தொடர்பான மேலும் பல பிரசுரங்கள், நூல்கள் இங்கே.

குழந்தைகளுக்கான டிஜிடல் உலகம்.


OUP வெளியீட்டில் இரு பெரிய புத்தகங்கள்.


தமிழ் சுஜாதா!


படமெடுக்கும் பத்ரி. இவருடைய ஸ்பெக்ட்ரம் சர்ச்சை பற்றி நாளை.

வாசிக்க முயன்றாலே உதிர்ந்துவிடக்கூடிய பல புத்தகங்கள் இங்கே கிடைக்கும்.

கீழைக்காற்றில் சில புத்தகங்கள்.


2 comments:

சுதிர் said...

இன்று புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். நீங்கள் இருப்பீர்களா?

Anonymous said...

good one in lucid readable format