நெருங்கிய உறவினர் ஒருவர் (கே. ராமகிருஷணன், வயது 70. மனைவியின் தந்தை, எனக்கும் தந்தை போன்றவர்) பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்ததால், உடனே விரைந்து செலலவேண்டியிருந்தது. மூளையில் அடைப்பு ஏற்பட்டு, நினைவு தப்பி, நான்கு தினங்கள் இயந்திரங்கள் மூலம் உயிர் வாழ்ந்து, வியாழன் மாலை இறந்துபோனார். மயங்கி சரிவதற்கு ஒரு விநாடி முன்புவரை அவருக்கு உபாதைகள் எதுவும் இருந்ததில்லை. இருந்தாலும், வெளியில் சொல்லமாட்டார். ஒருவித முரட்டுப் பிடிவாதம். அடிபட்டு ஒழுகும் ரத்தத்தைக்கூட இடது கையால் வழித்து துடைத்துவிட்டு, அதெல்லாம் ஒன்றுமில்லை போ என்று விரட்டிவிடுவார். இரு வாரங்கள் முன்பு சென்னை வந்திருந்தார். பிறகு, குடும்பத்துடன் கல்கத்தா பயணம். நன்றாக உண்டு, உறங்கி, உல்லாசமாகப் பொழுதைக் கழித்து, சென்ற ஞாயிறு இரவு வீடு திரும்பினார். திங்கள் காலை, நடுங்கும் குளிரிலும் குளித்து முடித்து, அன்றைய பூஜைக்கான தயாரிப்புகளை முடித்துவிட்டு, காபிக்குக் காத்திருக்கும் வேளையில், சத்தமின்றி சரிந்தார். விழிக்கவேயில்லை.
நேற்று கண்காட்சிக்குத் திரும்பியபோது, மாற்றம் அதிகமில்லை. இன்னும் ஒரு நாள்தான், விட்டால் கிடைக்காது என்று நடைபாதை வியாபாரிகள் கூவிக்கூவி அழைத்துக்கொண்டிருந்தனர். கூட்டம் அலைமோதியது. 200, 300 என்று சொல்லி விற்றுவந்த குண்டு புத்தகங்களை 100, 50 என்று தள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்கள். 500 பக்கங்களுக்கு மேல் கொண்ட கெட்டி அட்டை புத்தகங்கள் இரண்டை (Introduction to Physical Anthropology, Comparitive Politics at the Crossroads) தலா 50 ரூபாய்க்கு வாங்கினேன்.
ஞாயிறு மதியப்பொழுதில்கூட அரங்கம் காலியாகவே இருந்தது. மாலையில் சிறு அலைகளாக அடித்து, ஓய்ந்துவிட்டது. பதிப்பாளர்கள் பலர் அதிருப்தியில் இருந்ததைக் காணமுடிந்தது. வெங்காயம் முதற்கொண்டு அடிப்படை உணவுப் பொருள்களே வானில் மிதக்கும்போது, புத்தகம் இப்போது அவசியமா என்று மக்கள் நினைத்திருக்கலாம். தவறில்லை.
லென்ஸ், ஸ்டெதஸ்கோப், டெலஸ்கோப் என்று பல அறிவியல் சாதனங்கள் இங்கே கிடைக்கின்றன. குழந்தைகள் ஆர்வத்துடன் அவற்றை எடுக்கும்போது, உடைச்சுடாதே என்று பெற்றோர் பிடுங்கி வைத்துவிடுகிறார்கள். சுவாரஸ்யமாக ஒருமுறை வேடிக்கை பார்த்துவிட்டு கூட்டம் நகர்ந்துவிடுகிறது.
பழைய சோவியத் புதிய அட்டையில்! மடக்கப்பட்ட பெரிய வரைபடங்களுடன்கூடிய விரிவான புத்தகம். சல்லிசாக அப்போது கிடைத்தது இப்போது யானை விலையில். கல்விச் சேவையில் இன்றுவரை சோவியத் யூனியனை எந்தவொரு முன்னேறிய நாடும் மிஞ்சவில்லை. சேவை நோக்குக்கும் லாப நோக்குக்கும் இடையில் உள்ள வேறுபாடே காரணம்.
புதிதாக முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை விடியல் இந்த ஆண்டு கொண்டுவந்துள்ளது. அவற்றுள் சில இன்னமும் அரங்குக்கு வரவில்லை. சென்னகரம்பட்டி கொலைவழககு, எஸ்.வி. ராஜதுரையின் ஷோபியன் : காஷ்மீரின் கண்ணீர் கதை, கோவை அ. அய்யாமுத்துவின் எனது நினைவுகள், தத்துவம் பேக்கன் முதல் மார்க்ஸ் வரை (தேவிபிரசாத்) ஆகியவை முக்கியமானவை. தரமான தயாரிப்பு, நல்ல வடிவமைப்பு.
விடியலில் ஈர்த்த மற்றுமொரு முக்கிய நூல்.
வரவர ராவின் முக்கியப் படைப்புகள் தமிழில். எதிர் வெளியீடு.
3 comments:
ஆழ்ந்த அனுதாபங்கள் மருதன்.
புகைப்படங்களுடன் கூடிய நல்ல பதிவு.
மிக ஆழ்ந்த அனுதாபங்கள் மருதன், தங்களுக்கும் தங்கள் மனைவிக்கும்.
நேற்று இரவு தான் என் அப்பாவுடன் ஏதோ சம்பந்தமாக சற்று கடினமாக பேசினேன்.
பேசியிருக்க கூடாது. முட்டாள் நான். பெற்றோர் மதிப்பை அவர்கள் இருக்கும் போது அவ்வளவாக உணருவதில்லை.
Post a Comment