February 6, 2011

அம்பேத்கர்


சென்னை ஐஐடியில் அம்பேத்கர் படம் திரையிடுதல் தொடர்பாக கருப்பு கருணா ஃபேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஐஐடி தமிழ் மன்றம், தமுஎச இணைந்து செய்திருந்த ஏற்பாடு இது. சென்னையைத் தொடர்ந்து கடலூர், பரமக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் என்று பரவலாக இந்தப் படத்தைத் திரையிடவிருக்கிறார்கள். (நேரம், இடம் குறித்து அறிவிப்பு வந்தால் இங்கே வெளியிடுகிறேன்).

இங்கே நான் சொல்ல வந்தது படத்தைப் பற்றியல்ல, படம் பார்க்க வந்தவர்கள் பற்றி. ஐஐடி திறந்தவெளி அரங்கில் வெள்ளி இரவு எட்டு மணிக்குத் திரைப்படம் தொடங்கியது. மிகப் பெரிய அரங்கம். சென்ற ஆண்டு இங்கே நடைபெற்ற சாரங் நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆள் அளவு எலெக்ட்ரிக் கிட்டர்களை நிறுத்திவைத்து இழுத்துக்கொண்டிருப்பார்கள். அரங்கம் மட்டுமல்ல, வளாகமே அதிர்ந்து துடித்துக்கொண்டிருக்கும். பல வண்ண ஒளிக்கற்றைகளுக்கு மத்தியில் மாணவர்கள் சத்தமிட்டு ஆடிக்கொண்டிருப்பார்கள்.

அம்பேத்கர் படம் திரையிடப்பட்டபோது அந்த மாணவர்களைக் காணவில்லை. 'ஆம்பேட்கார் மூவி ஈஸ் நாட் மை சாய்ஸ்' என்றார் கேண்டீனில் இருந்த ஒரு மாணவர். நல்ல படமாக இருந்தால் மட்டுமே வருவோம் என்றார் இன்னொருவர். படம் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பலானோர் ஐஐடியைச் சேராதவர்கள். தமுஎச நண்பர்கள் சிலரைச் சந்திக்கமுடிந்தது. தமிழ் மன்றம் சார்பாக வந்திருந்தவ்ர்களைக் காணமுடியவில்லை. வெளியில் இருந்து சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

சாதி ஒடுக்குமுறை பற்றிய கோட்டோவியங்களுடன் படம் தொடங்குகிறது. மம்முட்டியைத் தவிர படத்தில் யாரையும் அடையாளம் காண முடியவில்லை. படம் தொடங்கிய சில நிமிடங்களில் மம்முட்டியும்கூட மறைந்துவிடுகிறார். அமெரிக்க நூலகத்தில், திறந்திருக்கும் ஒரு புத்தகத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள அந்த மூக்குக் கண்ணாடியை காமிரா காட்டும்போதே, அரங்கில் கைத்தட்டல் ஆரம்பமாகிவிட்டது. மசாலா படத்தில் ஹீரோ ஓபனிங் காட்சியில் வெளிப்படும் அதே உற்சாகம். அம்பேத்கரின் ஒவ்வொரு முக்கிய வசனத்துக்கும் இந்த உற்சாகமான வரவேற்பு தொடர்ந்தது.

அதற்குப் பிறகுதான் நான் கூட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். எனக்கு அருகில், கணவன், மனைவி, குழந்தை கொண்ட ஒரு சிறு குடும்பம் அமர்ந்திருந்தது. அமெரிக்காவிலும் லண்டனிலும் அம்பேத்கர் தரக்குறைவாக நடத்தப்படும் சமயங்களில், அந்தப் பெண் கோபத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார். இதென்ன அநியாயம் என்று சத்தம்போட்டு குறைபட்டுக்கொண்டார். காந்தி அம்பேத்கர் சந்திப்பு நிகழும்போது அவர் உற்சாகம் கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. தீண்டத்தகாதவர்களின் மெய்யான பிரதிநிதி நான்தான் என்று வட்டமேஜை மாநாட்டில் காந்தி அறிவிக்கும்போது, ஹே இதோ பாருப்பா பிரதிநிதியை என்று சத்தம்போட்டு சிரித்தார். கூர்மையான வாதத்தால் காந்தியை அம்பேத்கர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும், இவரிடம் இருந்து உற்சாகமான சிறு அலறலும் கைத்தட்டல்களும் வெளிப்பட்டன.

இவர் மட்டுமல்ல, திரண்டிருந்த அனைவருமே கிட்டத்தட்ட இதே மனநிலையில்தான் இருந்தனர். மனு தர்மம் குறித்தும் பூனா ஒப்பந்தம் குறித்தும் காந்தி குறித்தும் பிரிட்டன் ஆட்சி குறித்தும் இவர்களிடம் தீர்மானமான அபிப்பிராயங்கள் இருந்ததை உணரமுடிந்தது. பலரும் நினைத்திருப்பதைப் போல், காந்தியை இவர்கள் தேசத்தந்தையாகப் பாவிக்கவில்லை. 'உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தை இனி அடிக்கடி பய்னபடுத்தாதீர்கள்!' என்று அம்பேத்கர் சொல்லும் இடத்தில் முழு அரங்கமும் அதிர்ந்தது.

இங்கு மட்டுமல்ல, திரையரங்குகளிலும் இதேபோன்ற வரவேற்பு அம்பேத்கருக்குக் கிடைத்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். சிறிய கூட்டம். ஆனால், ஈடுபாட்டுடன் கூடிய உற்சாக வரவேற்பு. அனைவரும் அல்ல, யாருக்குத் தேவையோ அவர்கள் மட்டுமே வந்து பார்த்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் நிலை இப்போதும் அதிகம் மாறிவிடவில்லை என்பது இந்தக் கூட்டத்துக்குத் தெரியும். ஆஸ்கர் காந்தியை இவர்கள் அறிவார்கள். காந்தியை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் என்ன என்பதையும் இவர்கள் அறிவார்கள். ஒவ்வொரு முறை காந்தி நினைவுபடுத்தப்படும்போதும் இவர்கள் அம்பேத்கரை நினைத்துக்கொள்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை பற்றிய செய்திகள் வெளிவரும் ஒவ்வொரு தருணத்திலும் இவர்கள் அம்பேத்கரிடம் இருந்தே பலத்தையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

அம்பேத்கர் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் எடுத்துச்செல்லும் தோழர்களுக்கு வாழ்த்துகள்.

9 comments:

srikrishnan said...

மீண்டும் ​சென்​னையில் இப்படம் எங்​கேனும் தி​ரையிடப்பட்டால் கண்டிப்பாக முன்கூட்டி ​தெரியப்படுத்தவீர்கள் என்றால் மிகவும் பயனு​டையதாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி

மருதன் said...

நிச்சயம் தெரியப்படுத்துகிறேன் srikrishnan.

raja said...

மீண்டும் ​சென்​னையில் இப்படம் எங்​கேனும் தி​ரையிடப்பட்டால் கண்டிப்பாக முன்கூட்டி ​தெரியப்படுத்தவீர்கள் என்றால் மிகவும் பயனு​டையதாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி ... நானும் அவரது கூற்றை வழிமொழிகிறேன்.

எஸ்.கருணா said...

நாங்களெல்லாம் படம் பார்த்தால் நீங்க படம்பார்த்தவர்களை பார்த்துகொண்டிருந்திருக்கிறீர்கள். நல்லபதிவு.படம் திரையிடும் விவரம் பேஸ்புக்கில் இருக்கு .பாருங்க.

மருதன் said...

நன்றி கருணா. உங்கள் பேஸ்புக்கில் உள்ள தகவல்களை இங்கே அனைவருக்கும் தருகிறேன்.

//அம்பேத்கர் திரையிடல் பயணம்: பிப் 4/ ஐஐடி,சென்னை...பிப் 6/ஸீவில்லிபுத்தூர்..12,13/கடலூர்...19,20/பரமக்குடி..25,26,27/ராமேஸ்வரம்...மார்ச்6,7.8.9.10,11,12/திருச்சி..எல்லா இடங்களிலும் தமுஎகச ஏற்பாடு..//

arun said...

We all know that he's not Mahatma. poor Gandhi.
Ambedkar, a genuine leader.

ஹரன்பிரசன்னா said...

இந்தப் படத்தில் காந்தி வில்லனாக நடித்திருக்கிறார் என்றும், அவருக்கும் அம்பேத்கரும் இரண்டு சண்டைக் காட்சிகள் உண்டு என்றும் கேள்விப்பட்டேனே, உண்மையா தோழர்? காந்தி படத்தில் அம்பேத்கர் வில்லனாக நடித்தால் உலகம் எப்படி இயங்கும் என்ற உங்கள் கற்பனையையும் எதிர்பார்க்கிறேன் தோழர்!

Anonymous said...

This idea of pitting Gandhi against Ambedkar is pretty stale.Both had differences in views but that did not mean that they behaved like sworn enemies against each other.Petty minds cant understand that fact.Have you read Ramachndra Guha or D.R.Nagaraj or V.Rodriguez who have written against such petty thinking and have gone beyond the idea that Gandhi and Ambedkar are poles apart with nothing in common.

Anonymous said...

காந்தியின் சாதனையே இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட வைத்தது தான். அது அம்பேத்கராலோ சுபாஷாலோ முடிந்திருக்குமா என்பது தெரியவில்லை. அது நடக்காததால் தான் காந்தி தேசத் தந்தையானார். காந்தி பெற நினைத்தது ஒன்றுபட்ட இந்தியாவை தான். ஜின்னா முஸ்லீம்களுக்கும், அம்பேத்கர் தலித்களுக்கும் தனி உரிமை கோரினார்கள். காந்தியத்தை புரிந்துக் கொள்ள உயர்ந்த மன நிலை வேண்டும்.