June 17, 2011

'அமெரிக்கப் புரட்சிக்கு நானே காரணம்!' : தாமஸ் பெய்ன்


தாமஸ் பெய்னின் Common Sense புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தின் முழு வடிவம் இங்கே கிடைக்கிறது. அமெரிக்கப் புரட்சி ஏற்பட்டதற்கு என் புத்தகமே காரணம் என்னும் தாமஸ் பெய்னின் முழக்கம் அகந்தை போல் தோன்றினாலும், புரட்சி உணர்வை அமெரிக்கர்களிடம் ஏற்படுத்தியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

தாமஸ் பெய்னின் (1737-1809) ஆரம்ப வாழ்க்கை இங்கிலாந்தில் தொடங்கியது. வறுமை காரணமாக மிகவும் சிரமப்பட்டே பெய்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார் அவர் தந்தை. இருபத்தி ஐந்தாவது வயதில் பெய்ன் உள்நாட்டு வரி வசூல் இலாகாவில் இணைந்தார். மூன்று ஆண்டுகளில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1768ல் மீண்டும் வரி வசூல் இலாகா. ஊழியர்களுக்கு அரசு குறைவான சம்பளமே அளிக்கிறது என்பதை உணர்ந்த பெய்ன் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு ஒரு வேண்டுகோள் பிரதி அனுப்பி வைத்தார். துண்டு பிரசுரமாகவும் இது மாறியது. அதன் காரணமாக தொல்லை விளைவிப்பவர் என்று பெயர் பெற்று பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து அவருக்கு மிகுந்த மனக்கஷ்டத்தையும் பணக்கஷ்டத்தையும் ஏற்படுத்தவே, அவர் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபுகுந்தார்.

அமெரிக்கா வந்ததும் பெய்ன் முதலில் எழுதிய கட்டுரை, 'அமெரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை முறை'. மனித உரிமைகள் குறித்து பெய்ன் கவனம் செலுத்த ஆரம்பித்ததன் தொடக்கப்புள்ளியாக இந்தக் கட்டுரை விளங்குகிறது. இங்கிலாந்து அமெரிக்காவை அடிமைப்படுத்தியிருந்த காலகட்டம் அது. 1765ம் ஆண்டு இயற்றப்பட்ட ஸ்டாம்ப் சட்டம் குடியேற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அமெரிக்கர்களையும் இங்கிலாந்தின் பிரஜைகளாகக் கருதி அவர்களைச் சட்டப்படி கட்டுப்படுத்தி, அடிமைப்படுத்தியது. அதுவரை இங்கிலாந்தைத் தாய் நாடாகக் கருதி வந்த பலரும்கூட கோபமுன்று இங்கிலாந்தை எதிர்க்கத் துணிந்தனர். 1770ம் ஆண்டு பாஸ்டன் தேநீர் விருந்து இதன் எதிரொலியே.

அமெரிக்காவில் பரவிக்கொண்டிருந்த எதிர்ப்பலைகளைப் புரிந்துகொண்ட பெய்ன் சாமானிய அறிவு (Common Sense) என்னும் நூலை (உண்மையில் அது ஒரு பிரசுரம்) எழுதினார். மனிதர்களின் இயற்கை உரிமைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் தொடங்கினார். சாமானிய அறிவு அமெரிக்கர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பேதும் இல்லை. மிக எளிமையான முறையில் அமெரிக்கர்களின் அடிமை நிலையைச் சுட்டிக்காட்டி இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் திரள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது பெய்னின் நூல்.

புரட்சி பொங்கி, எழுச்சி பெற்று வெற்றி பெறும் வரை பெய்ன் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். அமெரிக்கர்களின் பிரச்னைகள், இங்கிலாந்தின் ஒடுக்குமுறை, புரட்சிக்கான தேவை, புரட்சிக்குப் பிறகு அமையப்போகும் அரசின் கடமைகள் உள்ளிட்ட பல விஷயங்களை பெய்ன் விவரித்தார்.

பெய்ன் இறை நம்பிக்கையாளர். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பையும், மனிதர்கள் சக மனிதர்களோடு கொண்டிருக்கவேண்டிய தொடர்பையும் பெய்ன் குறிப்பிடுகிறார். அதே சமயம், The Age of Reason என்னும் நூலில், கறாரான கிறிஸ்தவ நியதிகளைத் தாக்கி, சுதந்தரச் சிந்தனையை ஆதரித்தார். இந்த உலகைப் படைத்தவர் கடவுள். ஆனால், மத நிறுவனங்கள் மூலமாக அல்ல இயற்கையை ஊன்றி வாசிப்பதால் மட்டுமே இறைவனை அடையமுடியும் என்று வாதிட்டார். இதன் காரணமாக அவர் மதவிரோதி என்று தூற்றப்பட்டார்.

அமெரிக்கப் புரட்சி சாதித்த முக்கிய விஷயங்களுள் ஒன்று அரசாங்க அமைப்புக் கொள்கைகளை யாவரும் அறியும்படிச் செய்ததும், அரசாங்கங்கள் செலுத்திவந்த ஆதிக்கத்தை அம்பலப்படுத்தியதும்தான். அரசு என்பது கேள்வி கேட்க முடியாத புனித வடிவம் என்னும் பிற்போக்குத்தனமான எண்ணம் மாற்றியமைக்கப்பட்டது. துணிந்தால் அரசை எதிர்த்து, கலைத்துப் போடலாம் என்னும் மனஉறுதியை அமெரிக்கப் புரட்சி மக்களுக்கு வழங்கியது.

அமெரிக்கப் புரட்சி நடந்து முடிந்ததும், தன் கடமை முடிந்துவிட்டது என்று பெய்ன் கருதினார். அமெரிக்கப் புரட்சியைத் தொடர்ந்து பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டபோது, பெய்ன் அதனை ஆதரித்தார். எட்மண்ட் பர்க் பிரெஞ்சுப் புரட்சியைச் சிறுமைப்படுத்தி எழுதிய ஒரே காரணத்துக்காக அவருடனான நட்பை முறித்துக்கொண்டு, பர்க்கின் தீவிர எதிர்ப்பாளராக மாறினார்.

தன் காலம் முழுவதும் முடியாட்சிக்கும் பரம்பரை ஆட்சிக்கும் எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார் பெய்ன். சாமானிய அறிவு, அற்புதமான பல வாதங்களை முடியாட்சிக்கு எதிராக முன்வைக்கிறது.  பிரதிநிதித்துவ மக்கள் அரசாங்கத்தை அவர் முடியாட்சிக்கு மாற்றாக ஆதரித்தார். அதே சமயம், பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் குறைபாடுகளை அவர் உணர்ந்திருக்கவில்லை. மனிதர்களுக்குத் தேவைப்படும் சுதந்தரத்தையும் உரிமைகளையும் புதிய அரசு வழங்கும் என்று அவர் நம்பினார்.

1793ல் பெய்ன் கைது செய்யப்பட்டு லக்ஸம்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார். ராபஸ்பியரும் ஜேகோபின்களும் அதிகாரத்துக்கு வந்ததையடுத்து இந்தக் கைது நடைபெற்றது. பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் உடல் நிலை பாதிப்படைந்தது. ஜெஃபர்சனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்து சேர்ந்தார்.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடம் சுதந்தர எண்ணத்தை விதைத்த பெய்ன் பல்வேறு காரணங்களால் இந்த மூன்று நாடுகளின் விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டார்.அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை ஆறு பேர்.

பெய்னின் சாமானிய அறிவு பற்றி சிறிது எழுதுகிறேன்.

1 comment:

Anonymous said...

முதன் முதலாய் அறிகிறேன், தகவலுக்கு நன்றி பாஸ் ...