October 25, 2011

கோரிப்பாளையம் தேவர் சிலை

இரு தினங்களுக்குமுன்பு,  கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையைச் சிலர் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு இரண்டு காவலர்கள். மதுரை அரசு மருத்துவமனையின் வெளிப்புறச் சுவர் முடிவடையும் இடத்துக்கு அருகில், நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய முனையில், நட்டநடுவே அமைந்திருக்கிறது அந்தச் சிலை. 'ஒவ்வொரு வருஷமும் தேவர் ஜெயந்தி நடக்கும்போது, கோரிப்பளையம் ராணுவக் களம் போல் மாறிவிடும். பலமான போலீஸ் காவல், தள்ளுமுள்ளு இருக்கும். கடைகளைத் திறந்தால் ரிஸ்க். டூ வீலர், லாரி, மினி பஸ், ஜீப் என்று கும்பல் கும்பலாக வந்துகொண்டிருப்பார்கள். வீட்டுக்குள்ளே கதவைப் பூட்டிக்கொண்டு அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டங்களில் இருந்து தப்பமுடியும். ஒவ்வொரு முறையும் இதை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.'

பேசியவர், தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரியும் நடுத்தர வயது நபர். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர் அல்லர். 'தேவர் ஜெயந்தி முடிகிறவரை மதுரை அவர்களுடையதுதான். யாரும் எதுவும் கேட்கமுடியாது. மூர்க்கத்தனமாக வண்டி ஓட்டிச் செல்வார்கள். ஆட்டோவில் நின்றபடி கத்துவார்கள், முழக்கமிடுவார்கள். வம்புக்கு இழுப்பார்கள். தப்பித்தவறி வாய் கொடுத்தால் தொலைந்தது.' 

தேவர் குரு பூஜைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதை பத்திரிகைகள் உறுதி செய்து வருகின்றன.மதுரைக்குச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெவ்வேறு சாதிய அமைப்புகளும், பேரவைகளும், கட்சித் தொண்டர்களும் குவிய ஆரம்பித்துவிட்டனர். தேவர் ஜெயந்தி 'இந்த முறை' பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் என்று தெரிகிறது. அக்டோபர் 30 'என்னவோ நடக்கப்போகிறது' என்று மதுரையில் உள்ள கடைக்காரர்கள் பலரும் வெளிப்படையாகவே பேசிக்கொள்கிறார்கள். பரமக்குடியிலும் இதுவேதான் பேச்சாக இருக்கிறது.

'அக்டோபர் 30 அன்று எந்தவித மோதல்களிலும் ஈடுபடக்கூடாது, வன்முறையில் இறங்கக்கூடாது என்று உங்கள் சமூகத்துக்கு நீங்கள் சொல்வீர்களா? அதை ஓர் அறிக்கையாக எழுதித் தருவீர்களா?' மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பரமக்குடி துப்பாக்கிச் சூடு பொதுவிசாரணையில் கலந்துகொண்ட ஜான் பாண்டியனிடம் நீதிபதிகள் குழு முன்வைத்த வேண்டுகோள் இது. 'நிச்சயம் செய்கிறேன், ஆனால் என் பாதுகாப்புக்கு நீங்கள் யாராவது பொறுப்பேற்பீர்களா?' என்று ஜான் பாண்டியன் திருப்பிக் கேட்டபோது, நீதிபதிகளிடம் பதிலில்லை.

'பரமக்குடியில் போலீஸ்காரர்கள் செய்த வேலையை அக்டோபர் 30 அன்று சில தேவர்மார்களே செய்து, எங்கள்மீது மீண்டும் பழிபோட்டாலும் போடுவார்கள்.' என்கிறார்கள் பரமக்குடிவாசிகள். 'தேவர் விழாவாக இருந்தாலும் சரி, இம்மானுவேல் விழாவாக இருந்தாலும் சரி, பாதிக்கப்படுபவர்கள் என்னவோ நாங்கள்தான்!'

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யலாமே என்று பொதுவிசாரணை நீதிபதிகள் யோசனை சொன்னபோது, அருகில் அமர்ந்திருந்த வெள்ளைச்சாமி (துப்பாக்கிச்சூடு வீடியோவில் இவரைப் பார்க்கலாம். காவலர்களால் வட்டமிடப்பட்டு மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட பெரியவர்) சத்தம் போட்டுச் சிரித்தார். 'பிரச்னைக்குக் காரணமே போலீஸ்காரங்கதான். இதில், கூடுதல் பாதுகாப்பு போட்டா கூடுதல் பிரச்னைதானே ஆகும்?'

குண்டடிப் பட்டவர்களும், மிருகத்தனமாகத் தாக்கப்பட்டவர்களும், தாற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் முடமாகிப்போனவர்களும் இன்னமும் புகார்கூட பதிவு செய்யவில்லை. அதற்குள் அவர்கள் கண்முன்னே கோலாகலமாக விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரே சமயத்தில் அரசு விழாவாகவும் அரசியல் விழாவாகவும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படவிருக்கிறது. புதுப்பொலிவுடன் கோரிப்பாளையம் தேவர் மின்னிக்கொண்டிருக்கிறார். 

5 comments:

SURYAJEEVA said...

கொடுமைங்க

Anonymous said...

1. paandi kovil is near to maattuthaavani bus stand. i went last mont. people who suffered by ghosts can be seen. u can get a bus even from this devar silai.

2. there is a small hotel called 'king hotel' behind the 'mughugu' of devar silai..every year i eat briyani there..it is so much good..

3.alagar kovil is half an hour from tis devar silai...

மதுரைதான் நான் பிறந்த ஊர்...நீங்கள் திருவண்ணாமலைதானே?...ஆர்குட்டில் பார்த்தேன்...

Anonymous said...

அப்படியே அந்த சிலை எப்போது திறக்கப்பட்டது, அதை திறந்தவர் யார்,
யார் அப்போதைய முதல்வர் என்பதையும் எழுதியிருக்கலாம்.
மக்கள் கண்காணிப்பகம் நடத்திய நிகழ்வில் பங்கேற்றது முன்னாள்
நீதிபதிகள், அவர்களால் யார் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க்க முடியும்.
அமைதியாக சட்டம் ஒழுங்கு கெடாமல்
எந்த நினைவு தினத்தையும் கொண்டாட
முடியும்.

Anonymous said...

தேவர் ஜெயந்தி என்பது நெடுங்காலமாக அவரை வழிபடும் விதமாக தேவரின் தெய்வமான முருகனை வழிபடுவதுபோல் மொட்டை அடித்தல் ,பால் குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகளுடன் நடந்து கொண்டிருக்கிறது.ஆனால் சுமார் 10 வருடங்களாக அரசியல் வாதிகள் ஒட்டு வங்கிக்காக பயன் படுத்தி மோதலை உருவாக்கிவிட்டனர்.இந்து மதத்தில் இறந்தவர்கள் நினைவாக குரு பூஜை நடத்துவது வழக்கமான ஒன்று.ஆனால் கிறித்துவரான இம்மானுவேல் சேகரனுக்கு குருபூஜை என்ற பெயரில் போட்டி பூஜைகள் நடத்தி ஏன் வம்பு இழுக்க வேண்டும்?

பெருமாள் தேவன் செய்திகள் said...

இது தொடர்பாக இரு தரப்பிலும் புரிதல் ஏற்பட வேண்டும்.

http://www.atheetham.com/story/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81