November 4, 2011

அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள்


அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம்.  ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியூ யார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கையசைக்கிறார்கள். தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள். நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது. இரவில் தரைவிரிப்பைப் போட்டு உறங்குகிறார்கள்.

‘வால் ஸ்ட்ரீட் மீட்கப்பட்டுவிட்டது. நாங்கள் விற்கப்பட்டுவிட்டோம்!’ என்னும் அட்டை வாசகத்தை இளைஞர்கள் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு சுற்றிவருகிறார்கள்.‘ஒரு சதவீத செல்வந்தர்கள், 99 சதவீத மக்களை ஆட்டிப் படைக்கிறார்கள்’ என்கிறது ஒரு பதாகை. ‘99 சதவீதத்தைக் காப்பாற்று’ என்கிறது மற்றொன்று.

தொடக்கத்தில் காவல்துறை இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. கண்டுகொண்டபோது, இரு தவறுகள் செய்தார்கள். இரண்டு நாளில் காலி செய்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினார்கள். அது நடக்காதபோது, அடித்து, உதைத்து, கீழே தள்ளி, பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டபோது, ஐ ஹேட் பாலிடிக்ஸ் ஆசாமிகள் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள்.

வால் ஸ்ட்ரீட் மீதான வெறுப்பும் கசப்புணர்வும்தான் முன்புன் அறிமுகம் இல்லாத, முன்பின் போராடாத  ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைக்கிறது. ஏன் குறிப்பாக வால் ஸ்ட்ரீட்? காரணம், இங்குள்ள நிதி, மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதாரத்தையும் அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகின்றன.

ஓர் உதாரணம். இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள டாப் 400 அமெரிக்கச் செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1.53 ட்ரில்லியன் டாலர். கடந்த ஆண்டைவிட 12 சதவீத வளர்ச்சி. பில் கேட்ஸ், வாரன் பபெட் போன்றோர் வழக்கப்படி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், குறிப்பாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் வால் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த 96 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட சீட்டாட்டம் போன்ற யூக வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.

அமெரிக்காவை உலுக்கிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் யூக வணிக அமைப்புகளும் வால் ஸ்ட்ரீட்டில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடிழந்து, வேலையிழந்து வீதிகளில் திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், அதற்குக் காரணமான நிறுவனங்கள் ஃபோர்பஸ் பட்டியலில் இடம்பெற்று ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல, திவாலானவை. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு ஒபாமா அரசு இவர்களை மீட்டெடுத்தது.

அதாவது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. வால் ஸ்ட்ரீட் பாதிக்கப்படக்கூடாது. இதுதானே அரசு கொள்கை? விரக்தியடைந்த அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வால் ஸ்ட்ரீட்டில் குவித்ததன் பின்னணி இதுவே. ஒரு சிறு குழுவாகத் தொடங்கிய போராட்டம் இன்று வாஷிங்டன், பாஸ்டன், மிச்சிகன், சிக்காகோ, அலாஸ்கா, கலிபோர்னியா என்று அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. விக்கிலீக்ஸ் அசாஞ்சே லண்டன் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். சல்மான் ருஷ்டி, மைக்கேல் கன்னிங்ஹாம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற 100 எழுத்தாளர்கள் இணைய பெட்டிஷனில் கையெழுத்திட்டு ஆதரவளித்திருக்கிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன என்பதால் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவைக் கடந்து பிற நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது. மெல்பர்னை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களைப் போலவே வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். தொடங்கிய முதல் நாளே, மெல்பர்னிலுள்ள சிட்டி ஸ்கொயரில் ஆயிரம் பேர் திரண்டுவிட்டார்கள். ‘வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் சந்திக்கும் அதே பிரச்னைதான் எங்களுக்கும். எங்களுடைய ஜனநாயகம் போலியானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.’ சிட்னியில், மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிரில் 2000 பேர் திரண்டுவிட்டார்கள். இவர்களில் பூர்வகுடிகள், தொழிற்சங்கவாதிகள், இடதுசாரி சிந்தனை போக்கு கொண்டவர்கள் என்று பலரும் அடங்குவர்.

வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவம் எடுத்துள்ளது. பங்குச்சந்தைப் பெருமுதலாளிகளை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள். டோக்கியோ, மணிலா, தாய்பே,சியோல் என்று போராட்டம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஷாப்பிங் மால், தனியார் வங்கிகள், முக்கிய வர்த்தக கட்டங்கள் ஆகியவற்றின் முன்பு பதாகைகளை உயர்த்திபிடித்தபடி நடைபோடுகிறார்கள். முழங்குகிறார்கள். நாடகம் நடத்துகிறார்கள். வித்தியாசமான ஒப்பனைகளுடன் கவனம் ஈர்க்கிறார்கள். இத்தாலியில் உள்ள யூனிகிரெடிட் என்னும் மிகப் பெரிய வங்கியின்மீது முட்டைகள் வீசியதைத் தவிர வேறு சட்ட விரோத செயல்கள் எதிலும் யாரும் இதுவரை ஈடுபடவில்லை. ரோமிலும் வேறு சில நாடுகளிலும் கடைக் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.

‘அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!’, ‘பிலிப்பைன்ஸ் விற்பனைக்கல்ல!’ ‘ஜனநாயகம் தெருக்களில்தான் வாழ்கிறது.’ போன்ற முழக்கங்கள் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. ‘லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்!’ என்னும் பெயரில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6000 பேர் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டமே உத்வேகம் அளித்திருக்கிறது.
தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதே வால் ஸ்ட்ரீட் போராட்டக்கார்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் மீடியாவிடம் இருந்தும் அரசியல் விமரிசகர்களிடம் இருந்தும் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்று இவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதவை நாடி தீவிரப் பிரசார யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அரபுலகப் போராட்டங்களுக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இணையம் மூலமே இவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த மீடியாவை மெல்ல மெல்ல தம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள். இளைஞர்களே அதிகம் காணப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பங்கேற்கிறார்கள். தலைமை என்று எதுவுமில்லை. ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு, வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் நோக்கம், தலைமை மாற்றம் அல்ல என்பதுதான். இவர்கள் எதிர்பார்ப்பது சீர்திருத்தத்தை மட்டுமே. ஆனால், அதையும்கூட அவ்வளவு சுலபத்தில் செய்துவிட மாட்டோம் என்கிறது அமெரிக்கா.

(புதிய தலைமுறையில் வெளியான கட்டுரை)

5 comments:

suryajeeva said...

எழுச்சி பெற்று போராடும் மக்களை, இந்நாள் வரை போராட்டத்தை வெறுத்த மக்கள் போராட்டத்தில் குதிப்பதை, சிலர் நையாண்டி செய்வது வருத்தம் அளிக்கிறது... இது வரை போராடாதவர்கள் ஏன் போராடவில்லை என்று ஏதொ இவர்கள் மட்டுமே போராட்டத்தின் குத்தகை தாரர் போல் பலர் பேசுவது வெறுப்பேற்றுகிறது.. உங்கள் பதிவு, இந்த போராட்டத்திற்கு கை கொடுப்பது என் போன்ற மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை

Karthikeyan Balasubramanian said...

மருதன்
உங்களை எனக்கு தெரியும்.
நேரடியாக நாம் உரையாடி உள்ளோம்.

நான் சென்னையில் வசித்த போது , மயிலையில் வேலை பார்த்த போது பறக்கும் ரெயிலில் உங்களுடன் பேசி உள்ளேன்.

இந்த கட்டுரையை படித்தேன்.

Nice write-up keeping the data and facts upfront.
It proves the fact that most People in every country
are against the politics/politicians of the country.

That makes me to trigger a another question.
Can a government satisfy all the people's needs?
If there is a majority of people who needs a change, then the government should act on that key topic.

As an Indian, we can pacify us saying that 'America also have problems among their countrymen'

Thanks
karthik

மருதன் said...

Karthikeyan Balasubramanian :

அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என்று வேறுபாடில்லாமல் பல இடங்களில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் அரசாங்கம் என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் இயஙகிக்கொண்டிருக்கிறது. ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் நலன் மட்டுமே அதற்கு முக்கியம்.

உங்களைப் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தீர்கள் என்று நினைவு. இப்போது இந்தியாவில் இல்லையா?

மருதன் said...

suryajeeva : அடித்தட்டு மக்களுக்கும் இந்தப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் ஒரு சாரார் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அமெரிக்க அரசுக்கு எதிரான போராட்டமாக இல்லாமல், நிதி சீர்திருத்தம் கோரும் போராட்டமாக சுருங்கிக்கிடப்பதாலும் இதற்குப் பரவலான ஆதரவு கிடைக்காமல் இருக்கிறது.

அடித்தட்டு மக்களை ஒருங்கிணைத்து, அவர்களுடைய பிரச்னைகளுக்காகப் போராடும்போதுதான் வர்க்க ரீதியில் மக்கள் திரள்வார்கள்.

Karthikeyan Balasubramanian said...

மருதன்:

நீங்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.மிகவும் சந்தோஷம்.

நான் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன்...நான்கு வருடங்கள் ஆகி விட்டது.சென்னையில் அன்னநூரில் வசித்து வந்தேன்.நீங்களும் அங்கே தான் வசித்தீர்கள் என்று நினைக்கிறன்.

சில நாட்களுக்கு முன்பு பத்ரி அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன்.பிறகு அவர்களின் வெப் சைட் மூலமாக உங்கள் ப்லொக்ஹ தெரிய வந்தது.மிகவும் சந்தோஷம்,

தமிழின் மீது உள்ள ஆர்வம் இன்னும் என்னை ஆட்கொண்டு உள்ளது.
உங்களிடம் தொடர்பு கொள்ளுகிறேன்.

உங்களுடைய புத்தகங்கள் வெளி வந்தடை கண்டேன்.மிக்க மகிழ்ச்சி.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.