December 23, 2011

பெரியார் : புரட்சி என்பது என்ன?

தலைகீழாய்க் கவிழ்ப்பதுதான் புரட்சியாகும். இதற்காக யாரும் பயப்படக்கூடாது. குழந்தைகளைப் பூச்சாண்டி பேர் சொல்லி மிரட்டுவது போல், நம்மையும் புரட்சி என்று வாயில் சொல்லாதே, மனதினாலும் நினையாதே, வாய் வெந்துபோகும் என்று பலர் சொல்லுவார்கள். இனி அந்தக் கதை பலியாது. புரட்சி செய்து வெற்றி பெற்ற தேசங்களையும் மக்களையும் பார்த்துவிட்டோம். நாமும் சில விஷயங்களில் புரட்சி செய்தும் பார்த்துவிட்டோம்...

சாதிப் புரட்சி செய்தோமே என்ன ஆகிவிட்டது? வெற்றி மார்க்கத்தில் செல்லுகிறோமா, இல்லையா? மதப் புரட்சி செய்தோமே, என்ன மூழ்கிப் போய்விட்டது? தத்துவார்த்தம் பேசி அதைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களோ ஒழிய, புரட்சி செய்தவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது?...

நம்மைப் பொறுத்தவரை, இந்தப் புரட்சிகளையெல்லாம் நாம் ஏன் செய்தோம்? ஏழை மக்கள் கஷ்டம் நீங்கவும், பாடுபடுகின்ற மக்களைச் சோம்பேறிகள் ஏய்த்து அவர்களது பலன்களை எல்லாம் அடையாமல் இருக்கவும்தான் செய்தோமே ஒழிய, செய்கின்றோமே ஒழிய மற்றபடி யாரிடமாவது குரோதமோ, வெறுப்போ, பொறாமையோ, துவேஷமோ, பலவந்தமோ மனதில் வைத்துச் செய்தோமா? என்று யோசித்துப் பாருங்கள். மனிதன் என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும் பரிதாபப்பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்துவிட்டால், அவனுக்குப் பாபமோ, நரகமோ சட்டமோ, நீதியோ, பழக்கவழக்கமோ ஒன்றும் எதிரில் இருக்கமுடியாது...

இனி மனித சமூக விடுதலைக்கும், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதற்கும், ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேறியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபட வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இது குற்றமானால், இது பாபமானால் இந்தக் குற்றத்தையும் பாபத்தையும் 'குஷாலாக' ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதுதான்.

(குடிஅரசு, 5.02.1933)

24 டிசம்பர் 2011. பெரியார் நினைவுநாள். 

2 comments:

சசிகலா said...

ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேறியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபட வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.
அருமையான பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"