July 13, 2012

மூன்றாம் உலகப் போர் : வைரமுத்துவின் சுவிசேஷக் கூட்டம்அரங்கம் நிரம்பி வழிந்தாலும், நேற்று மாலை காமராஜர் அரங்கில் நடைபெற்ற வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழா சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

  • முதலில், புவிச்சூடேற்றம் (புத்தக்ததின் தீம்!) பற்றிய 5 நிமிட குறும்படம் ஒளிபரப்பானது.  உலகம் அழியப்போகிறது என்று  ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் பயமுறுத்தினார்கள். அல் கோர், ஜூராசிக் பார்க் புகழ் மைக்கேல் க்ரிஷ்டன் வரை பலர் எழுதிய குளோபல் வார்மிங் புத்தகங்களின் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. வைரமுத்துவின் இன்ஸ்பிரேஷன்கள்!
  • உலக அழிவு அச்சம் நீங்குவதற்குள் லண்டனில் இருந்து ஒருவர், கண் பார்வையற்ற ஒருவர், ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு வாசகர், நீயா நானா கோபிநாத் என்று ஒவ்வொருவராக மேடையேறி மூன்றாம் உலகப் போர் பற்றி 'சாட்சியம்' அளித்தார்கள்.  ஆவி எழுப்பும் அற்புதப் பெருவிழா நினைவுக்கு வந்தது. 
  • நான் பேச நினைத்ததையெல்லாம் எனக்கு முன்பே பத்து பேர் பேசிவிட்டதால் எனக்குப் பேச அதிகம் இல்லை... என்று அரசியல் மேடைப் பேச்சாளரைப் போல் ஆரம்பித்த கமல், புத்தகத்தில் இருந்து ஒரு பக்கம் வாசித்துவிட்டு, புத்தகத்தில் இருந்து ஒரு கதை சொல்லிவிட்டு முடித்துக்கொண்டுவிட்டார். 
  • ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை யோசித்துப் பார்த்தும் எதுவும் நினைவுக்கு வரவில்லை. பயமுறுத்தக்கூடாது, எழுத்தாளர்கள் நம்பிக்கையளிக்கவேண்டும் என்று ஒரு வரி நினைவுக்கு வருகிறது. புவிச்சூடேற்ற விளைவுகளை இவர் நம்பவில்லை போலும். 
  • ஒரு 32 பக்க விரிவான நூல் மதிப்பீட்டை பக்கம் பக்கமாக வாசித்தார் கலைஞர். அரசியலை அதிகம் தொடாததால் வழக்கமான வரவேற்பும் கைத்தட்டல்களும் இல்லை. 
  • அரங்கத்தில் மொத்தம் எத்தனை இருக்கைகள், அமர்ந்திருப்பவர்கள் போக நின்றிருப்பவர்கள் எத்தனை பேர், கதவுக்கு வெளியில் கால் கடுக்க நிற்பவர்கள் எத்தனை பேர் என்பன போன்ற புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டபடியே நன்றியுரை ஆற்றினார் வைரமுத்து. அரங்கம் அதிரும் கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார். ஐ.நாவுக்குக் கொண்டு சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லி ஒரு நண்பரைக் கேட்டுககொண்டிருக்கிறாராம். ஏன் ஆங்கிலம் மட்டும், உலக மொழிகள் அனைத்திலும் இதனைப் பெயர்க்கவேண்டும் என்றார் முன்னர் சாட்சியம் அளித்த ஒருவர். கார்பன் டேட்டிங், கரிமல வாயு, ஓசோன், கொலஸ்டிரால், டிஃபாரஸ்டேஷன் என்று விரிந்து சென்றது வைரமுத்துவின் உரை.
  • விருந்தினர்களுக்கு பொக்கே அல்ல, ரோஜாப் பூத்தொட்டி வழங்கப்பட்டது. அடடா இதைவிட கவித்துவமாக இயற்கையை நேசிக்கமுடியாது என்று புல்லரித்துக்கொண்டே (புல்லும் இயற்கையே!) வெளியேறினால்.... படிக்கட்டுகளில் அழகுக்கு வைக்கப்பட்டிருந்த செடிகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே வெளியேறிக்கொண்டிருந்தது கூட்டம். 
பாடம்: புத்தகங்களை மட்டுமல்ல, புத்தக வெளியீட்டு விழாக்களையும்கூட மிகக் கவனமாகப் பரிசீலித்து தேர்ந்தெடுக்கவேண்டும்.


6 comments:

ஹரன்பிரசன்னா said...

முதலில் சுவிசேஷக் கூட்டங்கள் பற்றி உங்கள் கடுமையை கட்டுரையாக எழுதுங்கள். பின்னர் வைரமுத்துவின் கூட்டத்தை சுவிசேஷத்துடன் ஒப்பிடலாம்.

இராஜராஜேஸ்வரி said...

பாடம்: புத்தகங்களை மட்டுமல்ல, புத்தக வெளியீட்டு விழாக்களையும்கூட மிகக் கவனமாகப் பரிசீலித்து தேர்ந்தெடுக்கவேண்டும்.

சிறில் அலெக்ஸ் said...

(புல்லும் இயற்கையே!) Super.

Anonymous said...

வைரமுத்து எப்படிப்பட்டவர் என உங்களுக்கு முன்பே தெரியாதா? இந்த விழா எப்படி இருக்கும் என உங்களுக்கு முன்பே தெரியாதா? உங்களை யார் போகச் சொன்னார்கள்?

'தார்மீக கோபத்தை'(நல்ல வேளையாக சிறிய பேராவில்) காட்டியுள்ளீர்கள்.

Jawahar said...

ஜெயகாந்தன் பேசியதை விவரமாக எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்!

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

professor
a.ramasamy has written a g8 article about suvishesha kootam in his book 'bimbangal adaiyaalangal' ..uyirmai publishers...