September 6, 2012

இலங்கையும் வெறுப்பு அரசியலும்

Courtesy : The Hindu, Sept 6, 2012
இலங்கையில் இருந்து சில பறவைகள் பறந்து வருகின்றன. தமிழகத்தின் வான்பரப்பில் நுழையும்போது கீழிருந்து கற்கள் பறந்து வருகின்றன. ஒரு பறவை சொல்கிறது. 'இதற்குத்தான் தமிழ்நாட்டின்மீது பறக்கவேண்டாம் என்று சொன்னேன்!'  தி இந்து வெளியிட்டுள்ள  கார்ட்டூன் இது. இலங்கையில் இருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்களைத் தமிழக முதல்வர் திருப்பியனுப்பியதையும் திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய இலங்கை ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலையும் கண்டிக்கும் விதத்தில் இந்தக் கார்ட்டூன் அமைந்துள்ளது.

கார்டூனின் மையக்கருத்தோடு முரண்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். 'இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!' என்னும் தி இந்து எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.

இந்த இரு சம்பவங்களில் முதலாவது தமிழக அரசின் செயல்பாட்டால் நிகழ்ந்தது. மற்றொன்று தமிழகக் கட்சிகளின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது. இரண்டுக்கும் உள்ளிருப்பது வெறுப்பு அரசியல்.  'இலங்கைத் தமிழர்கள்பால் இந்த அரசு மிகுந்த அக்கறையோடு இருப்பதைப் போல தீவிரமாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய காரணத்தால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவாகவும், கோவில்களுக்காகவும் வந்த இலங்கை பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன' என்கிறார் கலைஞர்அரசியல் ரீதியான கோரிக்கைகளைக்கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு.' என்கிறது வினவு, 'சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மிக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள்.'

உண்மையில், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திறன் வெறுப்பு அரசியலுக்கு இருக்கிறது. ஹிட்லர் வளர்த்தெடுத்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தது. வெறுப்பு அரசியலுக்குப் பலியான அதே யூதர்கள் இன்னொரு வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தை வளர்த்தெடுத்து பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தார்கள். அமெரிக்காவின் தவறுகளுக்காக அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11, 2001 அன்று தண்டிக்கப்பட்டார்கள். ஆதிக்க இந்து சாதியினராலும் தலைமையினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர வெறுப்பு அரசியலின் விளைவே குஜராத் 2002 கலவரம். அசாம் கலவரமும்கூட இந்த வகையில்தான் அடங்கும்.

பலரும் நினைப்பது போல் இந்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் அரசியல் தலைமையால் மட்டுமே தனியோரிடத்தில் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுவதில்லை. நம்மில் பலரும்கூட இதற்கு இரையாகிறோம். பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் வட மாநிலத்தவரைச் சந்திக்கும்போது, நம்மையறியாமல் முகம் சுளிக்கும்போது வெறுப்பு அரசியல் நம்மைப் பற்றிக்கொள்கிறது. என் இடத்தில் நீ என்ன செய்கிறாய்? பேருந்தில் எனக்கான இடத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய்? எனக்கான வாய்ப்புகளை நாளை நீ தட்டிப்பறித்துவிடுவாயோ? பால் தாக்கரே, ராஜ் தாக்கரே குழு மகாராஷ்டிராவில் இப்படிப்பட்ட விரோத உணர்வுகளைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானியப் பாடகர்களோடு இணைந்து ஆஷா போஸ்லே பாடக்கூடாது என்று சமீபத்தில் ராஜ் தாக்கரே உத்தரவு போட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் சிங்களர்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்த வெறுப்பு அரசியல் உணர்வுதான் முள்ளிவாய்க்காலைத் தோற்றுவித்தது. ஓர் அரசு இரு வகைகளில் இதனை செய்கிறது. 1) ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பரவியிருக்கும் அதிருப்தியை பிரயத்தனப்பட்டு ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுவதன் மூலம், ஒரு குழுவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி மோதவிடுகிறது. 2) இயல்பிலேயே மக்களிடையே ஒரு சாராருக்கு எதிராக மூண்டெழும் வெறுப்புணர்வை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன்மூலம், வன்முறையை வளர்த்தெடுக்கிறது. ஆட்சியில் உள்ள அரசுக்கும் சரி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளுக்கும்சரி, இந்த இரண்டுமே லாபமளிக்கக்கூடியதுதான். காலப்போக்கில், எது இயல்பான வெறுப்புணர்வு, எது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு என்று பிரித்து பார்க்கமுடியாதபடி சிக்கல்கள் பெரிதாகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, ஜெர்மானியர்களிடையே யூத எதிர்ப்புணர்வு வளர்ந்திருந்தது உண்மை. ஹிட்லர் அந்த உணர்வை வளர்த்தெடுத்து ஓர் அரசியல் சித்தாந்தமாக வளர்த்தெடுத்ததும் உண்மை. இரண்டும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டபோது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.

வெறுப்பு அரசியலை வளர்ப்பதும் ஆதரிப்பதும் மிகவும் எளிது.  உறுதியான, உடனடியான பலன்கள் சர்வநிச்சயம். எனவே, உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் இப்பணியைத் தொடர்நது செய்துவருகின்றன. பகுத்தாய்ந்து சிந்திக்கத் தெரியாத மக்கள் தொடர்ந்து இதற்குப் பலியாகின்றனர்.

மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களின் பின்னணியில் இன்னொரு உண்மையும் ஒளிந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசாலும் தமிழகக் கட்சிகளாலும் எதுவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டினால் அரசியல் பிழைப்பு பாதிக்கப்படும். ஒரே மாற்று, வெறுப்பு அரசியலும் குளிர் காய்தலும் மட்டுமே.

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது வாக்களித்திருந்தாலும், அது சாத்தியமில்லை என்பது முதல்வருக்குத் தெரியும். எனவேதான், சாத்தியமானதும் எளிதானதுமான ஒரு காரியத்தை அவர் செய்தார். ஈழத்தை முன்வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் பிற கட்சிகளும் குழுவினரும்கூட கோஷம் எழுப்பியும் கல் வீசியும் தங்களால் இயன்ற அளவுக்கு வெறுப்பை விதைத்து முடிந்தவரை ஆதாயம் அடைந்துகொண்டார்கள். இப்போதைக்கு அதிகபட்சம் இதுதான் சாத்தியம்.

முழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பான நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.

தி இந்து கார்ட்டூனுக்கு வருவோம். தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?

9 comments:

Karthi said...

Please remember ban on south african white government. It is not just ban on government, but ban on all including sports which brought down white government. So nothing wrong in current activities in Tamilnadu.

மருதன் said...

உண்மை கார்த்தி. ஆனால் அப்படியொரு முடிவையா இந்திய அரசும் தமிழக அரசும் இப்போது எடுத்திருக்கிறது? தன்னிச்சையாக அரசியல் லாபத்துக்காக அல்லவா இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

ஜோதிஜி திருப்பூர் said...

படித்துக் கொண்டே வரும் சற்று கோபம் வந்தது. ஆனால் கடைசி வரிகளை படித்து முடித்த போது மட்டுப்பட்டது. இன்று இத்தனை பேர்கள் மனித உரிமைகளைப் பற்றி, இந்த அப்பாவி சிங்கள பொதுமக்கள் என்ன செய்தார்கள் என்று கோபத்தில் சொல்லும் அறிவாளிகள் அத்தனை பேர்களும் அங்குள்ள தார்மீக பிரச்சனைகளை ஏன் இலங்கை அரசாங்கம் செய்யமாட்டேன் என்கிறது என்பதை எவரும் கேட்பதே இல்லை.

மொத்ததில் ஒன்று மட்டும் புரிகின்றது.

இந்திய அளவில் பூகம்பம், புயல், பேரிடர் என்று வசூலித்தால் தமிழ்நாடு தான் அதிகம் கொடுக்கின்றது.

ஆனால் தமிழகத்தில் ஏதாவது ஒன்று என்றால் எந்த மாநிலங்களும் வாயைத் திறப்பதில்லை.

ஆனால் தமிழர்களே அறிவார்ந்த உரையாடலுக்கு நாங்கள் சொந்தக்காரர்கள் என்பதாக மனிதாபிமானத்தைப் பேசத் தொடங்கிறார்கள்.

இதைப் பார்த்தாலாவது அங்கே ராஜபக்ஷே வுக்கு முறைப்படி செய்து தர வேண்டிய வசதிகளை, வாய்ப்புகளை, அதிகார பகிர்வுகளை, கட்டித்தர வேண்டிய வீடுகளை, மற்ற ஏற்பாடுகளை செய்து தருவார் என்றா கருதுகிறீர்கள்? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க பார்க்கலாம்.

அதற்குப் பிறகு இங்குள்ளவர்கள் செய்த தவறுக்கு நாம் தண்டனை கொடுப்பதைப் பற்றி, இவர்களின் முட்டாள்தனத்தைப் பற்றி பேசுவோம்.

மருதன் said...

ஜோதிஜி, உங்கள் உணர்வு புரிகிறது. இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யார் குரல் கொடுத்தார்களோ அவர்கள் மட்டுமே இந்த இரு சம்பவங்களையும் கண்டிக்கத் தகுதிபெற்றவர்கள். இலங்கையைத் தூக்கிப்பிடிக்கும் தி இந்துவுக்குத் தமிழர்களைக் கண்டிக்கும் உரிமை இல்லை. ஒரு தரப்பு வன்முறையை மட்டும் விமரிசிக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்.

தமிழ் said...

மிகவும் சரியான விதத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய கட்டுரை. இங்கே தனிப்பட்ட வெறுப்பரசியல் தான் அதிகம். நீங்கள் அதிகம் பதிவுகளை எழுதவில்லையே என்கிற குறையை இதுபோன்ற பதிவுகள் மறக்கடிக்கின்றன. நன்றி

தமிழ் said...

மிகச் சரியாக புரிந்து கொள்ளவேண்டிய பதிவு. இங்கே தனிப்பட்ட வெறுப்பரசியல் தான் அதிகம். நீங்கள் அதிகம் பதிவுகளை எழுதவில்லையே என்கிற ஆதங்கத்தை இது போன்ற பதிவுகள் மறக்கடிக்கின்றன.
நன்றி.

தமிழ் said...

மிகச் சரியாக புரிந்து கொள்ளவேண்டிய பதிவு. இங்கே தனிப்பட்ட வெறுப்பரசியல் தான் அதிகம். நீங்கள் அதிகம் பதிவுகளை எழுதவில்லையே என்கிற ஆதங்கத்தை இது போன்ற பதிவுகள் மறக்கடிக்கின்றன.
நன்றி.

Anonymous said...

1. @ tamil

நான் உங்கள் பெயரை இந்த பிளாகின் முந்தைய பதிவுகளின் கமெண்ட் செக்ச‌னில் பார்த்ததாக நினைவில் இல்லை. மருதன் சார் மாதம் ஒருமுறை மட்டும் தான் பதிவு எழுதின்றார் என்பதை தான் நீங்கள் கவனித்தீர்கள் போல. கட்டுரையின் அளவையும் பாருங்கள். சிறிது சிறிதாக உள்ளதா? பிரஞ்ஞையோடு குறிப்பிட்ட அளவிற்குள் எழுதுகின்றார். மருதன் சார் நம் நேரத்தின் அருமையை நம் கோணத்தில் கண்டு செயல்படுகின்றார். நம் மீது என்ன ஒரு 'அக்கறை' பாருங்கள் இவருக்கு :)


2. @ 'அக்கறையாளர்' மருதன் அண்ணாவிற்கு

'வெறுப்பு' என்ற வார்த்தைக்கு பதில் 'கடுப்பு' என்ற இருக்க வேண்டுமோ? ஓஷோ அன்புக்கு எதிரானது வெறுப்பு அல்ல 'பயம்' தான் என்கின்றார். வெறுப்பு என்பது தலைகீழாக திருப்பப்பட்ட அன்பு என்கின்றார். எனக்கும் அதுவே உண்மை என படுகின்றது. (ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியில் வெறுப்பின் உச்சத்தில் எழுதப்பட்டுள்ள அங்கதமான வரிகளுக்கு பின் மறைந்து கிடப்பது மிகவும் நல்ல மனம் என்று தான் பட்டது.)

Anonymous said...

சொந்த நாட்டிற்குள்ளே அகதிகளாக தமிழ் மக்களை வாழ வைத்த அந்த அரசை கணடித்து ஏன் கருத்துப் படம் வரைய வில்லை ?
தமிழக மீனர்வர்கள் தாக்கப் படுவதை கண்டித்து ஏன் கார்டூன் வரையவில்லை ?