November 25, 2014

கத்தி கம்யூனிசமும் கட்சி கம்யூனிசமும்

விஜய் ஒரே ஒரு புத்தகம்  படிப்பதாகக் காண்பிக்கிறார்கள். ஆனால் அது என்ன புத்தகம் என்பது காண்பிக்கப்படவில்லை.கம்யூனிசம் என்றால் என்ன என்னும் கேள்விக்கு இட்லியை வைத்து ஏதோ பதில் சொல்கிறார். அதற்கும் கம்யூனிசத்துக்கும் தொடர்பில்லை.

ஆக, கதாநாயகன் ஒரு கம்யூனிஸ்ட் என்று எங்கும் கமிட் செய்துகொள்ளவில்லை. போகட்டும், வில்லன் யார்? ஒரு பன்னாட்டு கார்பரேட் நிறுவனம். சரி, அந்த நிறுவனத்துக்காவது ஓர் அடையாளம் உண்டா என்றால் அதுவும் இல்லை. கிராமத்து மக்களின் வாழ்வை அழித்துவிட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கத் துடிக்கும் அந்தக் குளிர்பான நிறுவனத்தின் பெயர் வெறும் 'கோலா கம்பெனி' மட்டுமே.

லாபம் ஈட்டுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தில் லாபத்தின் அடிப்படையைக் கேள்விக்கு உட்படுத்தும் கம்யூனிசத்தை உயர்த்திப் பிடிக்கமுடியாது என்பதால் கதாநாயகனை ஒரு கம்யூனிஸ்ட் என்று காட்டமுடியாது என்னும் நியாயம் புரிகிறது. கத்தி படமே ஒரு கார்பரேட் தயாரிப்பு என்னும்போது இன்னொரு கார்பரேட் நிறுவனத்தைத் தவறான ஒளியில் காட்டிவிடமுடியாது என்பதால் வில்லனை இப்படித்தான் பொத்தாம்பொதுவாகக் காட்டியாகவேண்டும் என்னும் தர்க்கமும் புரிகிறது.

புரியாத ஒரே விஷயம், கத்தி திரைப்படத்துக்கு கட்சி இடதுசாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளது ஏன் என்பதுதான். புதிதாக அப்படி என்ன இதில் இருக்கிறது? பாராட்டும்படியான எந்த அம்சத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்? புரட்சிகரமான எந்தக் கருத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்? என்ன அரசியல் இருக்கிறது இந்தப் படத்தில்? வழக்கமான மசாலா திரைப்பட இலக்கணத்தின் விதிகளைக்கூட மீறமுடியாமல் தவிக்கும் ஒரு மிகச் சாதாரண படத்தை நியாயப்படி உதாசீனம் அல்லவா செய்திருக்கவேண்டும்?


மீத்தேன் வாயு, குழாய்க்குள் போராட்டம், கதநாயகனின் உணர்ச்சிபூர்வமான ஒன்றரை பக்க டயலாக் ஆகியவற்றைப் பார்வையாளர்களே பெரிதாக எடுத்துக்கொள்ளாதபோது எதற்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் உணர்ச்சிவசப்பட்டு வரவேற்கவேண்டும்? பக்கம் பக்கமாக பி. சாய்நாத் போன்றவர்கள் எழுதிவந்ததைக் காட்டிலும் அழுத்தமாக விவசாயிகள் பிரச்னை கத்தியில் காண்பிக்கப்பட்டுவிட்டதா என்ன?

எனக்குத் தெரிந்தவரை தமிழ்த் திரையுலகத்திடம் ஒரே ஒரு தோசைக்கல்தான் இருக்கிறது. எப்போதோ அரைத்து, வழித்து, எடுத்து வைத்த மாவு என்பதால் அரிதாகவும்கூட சில தோசைகள் வித்தியாசமாக வந்து விழுந்துவிடுவதில்லை. ஹீரோவையும் வில்லனையும் காலாகாலத்துக்கும் ஒரே மாதிரி காட்டிக்கொண்டிருக்கமுடியாது என்பதால் அவ்வப்போது இப்படி, அப்படி கொஞ்சம் டைவர்ட் ஆகி மக்கள் போராட்டம், கறுப்புப் பண மீட்பு, லஞ்சம், விவசாயிகள் தற்கொலை, பெண்கள் கொடுமை, பழங்குடிகள் போராட்டம் என்று கொஞ்சம்போல் மக்கள் பிரச்னைகளைத் தொட்டுக்காட்டிவிட்டு (அதுவும் மிகவும் மேலோட்டமாக) வழக்கமான ஃபார்முலாவுக்குள் புகுந்துவிடுவார்கள்.

சமுதாயத்தை மாற்றியமைப்பது குறித்து கிளைமாக்ஸுக்கு முந்தைய சீனில் ஒரு விழிப்புணர்வூட்டும் பிரசங்கம் இடம்பெற்றாலும் கட்டக்கடைசியில் கத்தி ஒரு மசாலா தோசையாகவே எஞ்சி நிற்கிறது.

ஆனால் என் கவலை கத்தி கம்யூனிசம் பற்றியதல்ல; கட்சி கம்யூனிசம் பற்றியது.

ஏதோ இந்த அளவுக்காவது சொன்னார்களே என்று திருப்தியடையவேண்டிய சூழலில்தான் கத்திப் படத்தைப் பாராட்டும் கட்சித் தோழர்கள் இருக்கிறார்களா? படம் யார் எடுத்திருந்தால் என்ன, எப்படி எடுத்திருந்தால் என்ன, நமக்காக ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் அல்லவா என்று பணிவுடன் மகிழ்ந்து பாராட்டும் மனநிலையைத்தான் அவர்கள் கொண்டிருக்கிறார்களா?

சற்றே  நீட்டித்துப் பார்த்தோமேயானால் கத்தியைப் பாராட்டிய, பாராட்டாத கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே இத்தகைய ஒரு காம்ப்ரமைஸ் மனநிலையைத்தான் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். எல்லாமே மோசம் என்றாலும் அதில் ஓரளவுக்குச் சுமாரான மோசத்தைத் தேடிக் கண்டறிந்து கூட்டணி அமைப்பது ஒரு தந்திரோபாய அரசியல் நகர்வு என்றால் மோசமான படங்களில் ஓரளவு மோசமான ஒன்றைக் கண்டறிந்து பாராட்டுவதும்கூட அதே தர்க்கரீதியில் சரியானதுதான் இல்லையா?

ஒரு முதலாளி எவ்வளவு மோசமாகத் தன் தொழிலாளர்களை நடத்தினால் என்ன? மார்ச் மாதம் சம்பளம் கொஞ்சம் போட்டுக் கொடுத்தால் பாராட்டலாம் அல்லவா என்றும்கூட இதே மனநிலை கொண்ட ஒருவரால் அப்பாவித்தனமாகத் திருப்திப்பட்டுக்கொள்ள முடியும்.

கம்யூனிசம் என்பது காம்ப்ரமைஸ் கொள்கை அல்ல. மோசமானவற்றில் இருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று அது ஒருபோதும் ஒருவருக்கும் கற்றுக்கொடுத்ததில்லை.


பின் குறிப்பு : 

இட்லி, தோசை இரண்டையும் இக்கட்டுரையில் மோசமான ஒளியில் காட்டியிருந்தாலும் தனிப்பட்டமுறையில் இரண்டுமே எனக்குப் பிடித்தமானவை.

2 comments:

Lakshmana Perumal said...

கம்யுனிசத்திலிருந்து கொண்டு படத்தை நீங்க மட்டுந்தான் விசாரிச்சிருக்கீங்க. எனக்கு தோசை தான் பிடிக்கும்.

Anonymous said...

I think he is reading the book Communism by Aravindan Neelakandan 😅 Where the facts are twisted.