February 1, 2009

ஈழக்குறிப்புகள் : முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்கலாமா?

சிலர் ப்ரெயின் வாஷ் என்றார்கள். மொத்தமாக முன்கூட்டியே காசு வாங்கியிருப்பார் என்றார்கள் வேறு சிலர். இன்னும் சிலருக்கு சந்தேகம். இத்தனை சுத்தமாக முத்துக்குமாருக்குத் தமிழ் எழுத வராது, நிச்சயம் யாரோ அந்த உரையை தயார் செய்து கொடுத்திருக்கவேண்டும். வேண்டப்பட்டவர்களை ஆதரித்து, வேண்டாதவர்களைச் சாடும் வண்ணம் யாரோ இதைத் தயாரித்திருக்கவேண்டும். சிலருக்கு அக்கறை.கொளுத்திக்கொண்ட இடம் தவறு, அமெரிக்கத் தூதரகத்தில் இதை நிகழ்த்தியிருந்தால் இந்நேரம் சர்வதேச பரபரப்பு கிடைத்திருக்கும். ஒன்றுக்கும் உதவாத சாஸ்திரி பவன் முன்பாகவா தன் உயிரை எரித்துக்கொண்டிருக்கவேண்டும்?

மற்றொரு பக்கம், வீர வணக்கங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. நேற்று மாலை மக்கள் தொலைக்காட்சியில் முத்துக்குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச்சென்றதை காண்பித்தார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். சிங்கள அரசு ஒழிக! இந்திய அரசு ஒழிக! பிரபாகரன், முத்துக்குமார் இருவரும் இணைந்திருக்கும் படங்களை பலர் கையில் வைத்திருந்தனர். திரும்பும் பக்கமெல்லாம் புலிக்கொடி.

கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் தமிழர்கள் வீதிகளில் இறங்கி வந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். முத்துக்குமார் எதிர்பார்த்ததைப் போலவே அவர் உடல் ஒரு குறியீடாக மாறியது. இந்தக் குறியீட்டை நம் அரசியல் போராட்டத்துக்குப் பயன்படுத்துவோம் என்று ம.க.இ.க அமைப்பினரும் வேறு சிலரும் கேட்டுக்கொண்டபோது அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. நேற்றே உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

ஏன்? ஊர்வலம் தொடர்ந்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விடும். உடல் எங்கெல்லாம் கொண்டுசெல்லப்படுகிறதோ அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிடுவார்கள். போராட்டம் தீவிரமடையும். ஏற்கெனவே சென்னையில் மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகம் முழுவதும் இது தொடர்ந்தால், நிலைமை கைமீறிப்போய்விடும். இந்தியாவில் வேறு எந்தப் பகுதியிலும் சிறு சலனமும் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன் என்று மத்திய அரசு கோபித்துக்கொள்ளக்கூடும். எனவேதான், கருணாநிதி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். முத்துக்குமாரின் மரணத்தை யாரும் அரசியலாக்கவேண்டாம்.

பிறகு எதை அரசியலாக்குவது? ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறிமாறி தொடுக்கும் அரசியல் யுத்தங்களையா? என்னை சொல்கிறாயே அங்கே மட்டும் என்ன வாழ்ந்ததாம் என்கிற ரீதியில் வெளிவரும் அறிக்கைகளையா?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள் அவகாசம் முடிந்து, கூடுதல் தீவிரத்துடன் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. இந்த ஆண்டு தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு தமிழர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். புலிகள் அல்ல பொதுமக்கள் என்று தெரிந்தேதான் கொன்றுகொண்டிருக்கிறார்கள். சந்தேகமேயில்லாமல் இது இனஒழிப்பு.

ஒன்றுமே செய்யாமல் சும்மா நேரத்தை கடத்தும் அரசாங்கத்தைக் கண்டு கொதித்துப்போய்தான் முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். அரசியல் போராட்டம் ஒன்றை என் மரணம் முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டு விரிவான மரண சாசனத்தையும் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார். இதை அரசியலாக்காமல் வேறு எதை அரசியலாக்கவேண்டும்? இதற்காக அல்லாமல் வேறு எதற்காகப் போராடவேண்டும்? இது பற்றி அல்லாமல் வேறு எதைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் முடியும்?

முத்துக்குமாரின் மரணம் பல விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழக அரசும். இலங்கை ராணுவம் தொடுக்கும் போரை இந்தியா ஆதரிக்கிறது. ஆகவே, தமிழகமும். மத்திய அரசாங்கத்தை எதிர்த்து தன்னால் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடமுடியாது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் கருணாநிதி.

தமிழகம் எங்களுக்குக் குரல் கொடுக்கும் என்று இலங்கைத் தமிழர்கள் இனி நம்பவேண்டாம். எதிர்பார்க்கவும் வேண்டாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இந்த விஷயத்தில் கைகோர்த்துக்கொண்டுவிட்டன.

மங்களூர் கிளப் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு தங்களை உடனடியாக இணைத்துக்கொள்கிற நடுத்தர, மேல்தட்டு மக்கள் இலங்கைத் தமிழர்களுக்காக அந்த அளவுக்குக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முத்துக்குமாரின் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். பெரும்பாலானவர்கள் அடித்தட்டு மக்கள்.

(தொடரும்)

5 comments:

ஆர். முத்துக்குமார் said...

உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் குடும்பத்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிதி உதவியை 'வேண்டாம்' என்று மறுத்ததைத்தான் 'அரசியல்' என்கிறார் கருணாநிதி. முத்துக்குமாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியதைத்தான் 'அரசியல்' என்கிறார் கருணாநிதி. தவிரவும், உங்களுடைய கருத்துகள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. அதேசமயம் பிரச்னைகளை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு தொடருங்கள் மருதன்.

மாலன் said...

>>புலிகள் அல்ல பொதுமக்கள் என்று தெரிந்தேதான் கொன்றுகொண்டிருக்கிறார்கள். சந்தேகமேயில்லாமல் இது இனஒழிப்பு.<<

உங்கள் வாதத்திற்கு என்ன ஆதாரம்?

>>பிறகு எதை அரசியலாக்குவது? <<
1.இலங்கையில் மூர்க்கத்தனத்திற்கும் முரட்டுத்தனத்திற்கும் இடையில் தமிழர்கள் மாட்டிக் கொண்டிருக்ககிறார்கள் என்பதை,
2.48 மணிநேர இடைக்கால போர் நிறுத்தத்தை புலிகள் ஏற்க மறுத்ததை
3. ஊட்கங்களின் உணர்ச்சி வெறியேற்றப்பட்ட பிரசாரத்தை
4.இந்தியாவிற்குள்ள Strategic பிரசினைகளை
காண்க என் பதிவு:http://jannal.blogspot.com/

Anonymous said...

நல்ல பதிவு மருதன். நுண்அரசியலை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.

Anonymous said...

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

Anonymous said...

//முத்துக்குமார் எதிர்பார்த்ததைப் போலவே அவர் உடல் ஒரு குறியீடாக மாறியது.//----> In this there is a word called kuriyeedu. what does it mean?