புத்தகங்கள்

வரலாற்று ஆய்வு

ஹிட்லர் : முழுக்க முழுக்க விவாதங்களின் அடிப்படையிலும் சமீபத்தில் வெளிவந்த வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட புத்தகம். நாஜி ஜெர்மனி குறித்து ஜெர்மானிய வரலாற்றாசிரியர்கள் தற்போது விவாதித்து வரும் சில அம்சங்களையும் ஹிட்லர் குறித்து நாம் கொண்டிருக்கும் பிம்பங்கள்மீது அவர்கள் எழுப்பும் சில அடிப்படையான சந்தேகங்களையும் இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

ஹிட்லர் என்னும் தனிப்பட்ட ஆளுமையை அல்ல; ஜெர்மனியின் சமூக, அரசியல் அமைப்பைப் மையப்படுத்தி எழுதியிருக்கிறேன். குறிப்பாக, இடதுசாரிகள் ஹிட்லரை எப்படி அணுகினார்கள், எப்படி மதிப்பிட்டார்கள் (அல்லது மதிப்பிடத் தவறினார்கள்) என்பதை அறிந்துகொள்ள விரும்பி சில நூல்களை வாசித்தேன். அவற்றில் இருந்த நான் பெற்றுக்கொண்ட பாடங்களையும் இதில் பதிவு செய்துள்ளேன். 2014 நவம்பர் வெளிவந்த புத்தகம்.

***

பயண எழுத்து

குஜராத் இந்துத்துவம் மோடி : இதுவரை நான் எழுதிய புத்தகங்கள் அனைத்துக்குமான ஆய்வைப் பிரதிகளில் தொடங்கி பிரதிகளில் முடித்துக்கொள்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். உலக அரசியலையும் வரலாறையும் குறித்து எழுதும் ஒருவருக்கு அநேகமாக இது மட்டுமே சாத்தியம். பூகோள ரீதியிலும் அரசியல் ரீதியிலும் சற்றே நெருங்கி வந்து எழுத உத்தேசித்தபோது கள ஆய்வுக்காக குஜராத் செல்லும் வாய்ப்பு 2013ல் ஏற்பட்டது. நரேந்திர மோடி பிரதமர் ஆவாரா என்னும் கேள்வி பூதாகரமாக எழுந்து நின்று அச்சுறுத்திய சமயம் அது. முதல்முறையாக பல்வேறு தரப்பட்ட மக்களிடம் உரையாடி, துறை சார்ந்த நிபுணர்களைப் பேட்டி கண்டு இந்தப் புத்தகத்தை எழுதினேன். இதிலும் பிரதிகளே துணைக்கு வந்தன என்றாலும் பயண அனுபவத்தின் துணைகொண்டு வாசித்து, ஒப்பிட்டு எழுதியது ஒரு புதிய அனுபவம். எழுதுவதற்கு முன்பும், எழுதும்போதும் ஜே.எஸ். பண்டுக்வாலா, ஆனந்த் டெல்டும்டே, தோழர் மருதையன் உள்ளிட்டவர்களிடம் உரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் இந்தப் புத்தகத்தை என்னால் முழுமையாக்கியிருக்க முடியாது. (இதன் நீட்சியாக, இந்துத்துவ அரசியல் வரலாறு குறித்து இன்னொரு புத்தகம் எழுதும் திட்டம் உள்ளது).

***

இடதுசாரி அரசியலும் வரலாறும் 

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் :  இடதுசாரி அரசியல்மீதும் சிந்தனையாளர்கள்மீதும் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக 2006 தொடங்கி நான் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையும் ஓரளவுக்குப் பின்னணி வரலாறும் விவரிக்கப்பட்டிருந்தாலும்,  அவர்களுடைய வரலாற்றுப் பாத்திரம் மதிப்பிடப்படவில்லை. என்னுடைய அரசியல் பார்வை வளர்ச்சியடையாமல் இருந்தது அல்லது வெளிப்படாமல் இருந்தது ஒரு காரணம். இந்தக் குறையைப் போக்க நிறைய எழுதவும் வாசிக்கவும் வேண்டியிருந்தது.

சுவாரஸ்யமான எழுத்துமுறை, அரசியல் பார்வையற்று நிகழ்வுகளை அடுக்கிக்காட்டும் வழக்கம், புத்தகத்தின் நாயகரை ஒரு சாகசவாதியாக மட்டுமே வெளிப்படுத்தும் அணுகுமுறை ஆகியவற்றைப் படிப்படியாகக் களைந்துவிட்டு எனது தேடலையும் எழுத்தையும் கூர்மையாக்கிக்கொண்டபிறகு எழுதிய புத்தகங்களில் ஒன்று உலகை மாற்றிய புரட்சியாளர்கள். இரு பாகங்களாகத் திட்டமிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் 2013 புத்தகக் கண்காட்சியின்போது வெளிவந்தது. ஸ்பார்டகஸ் தொடங்கி அம்பேத்கரை வரையிலான புரட்சியாளர்களின் சிந்தனைகளை இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். தமிழ்பேப்பர் டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் புத்தக வடிவம் இது.

***

உலகப் போர்கள்

முதல் உலகப் போர் :  ஒரே புத்தகத்துக்குள் முதல் உலகப் போரை அடக்கிவிடுவது என்பது இந்தத் துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும்கூடச் சாத்தியமில்லை என்னும் நிலையில் எனது முயற்சியை மிக எளிமையான ஓர் அறிமுகம் என்று அழைப்பதுகூட ஒரு மிகைக்கூற்றுதான். இது இரண்டாம் உலகப் போர் பற்றிய எனது புத்தகத்துக்கும் பொருந்தும்.

போர் மூண்டதற்கான காரணங்கள், வெவ்வேறு முனைகளில் படைகளுக்கு இடையில் நடைபெற்ற மோதல்கள், வெற்றி, தோல்வியின் பின்னணி, இழப்புகள், பின்விளைவுகள் என்று பல அம்சங்களைச் சுருக்கமாக விவரித்துள்ளேன். முதல் உலகப் போர் தொடங்கி 100 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பல புதிய ஆய்வுப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ளன. 


இரண்டாம் உலகப் போர் :  உண்மையில் இரு பெரும் யுத்தங்கள் நடைபெறவில்லை; நடைபெற்றது ஒரு யுத்தம்தான். 1914ம் ஆண்டு தொடங்கி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாகி, 1945ல்தான் அந்தப் போர் முடிவடைந்தது என்று சொல்வார்கள். இது உண்மைதான். போருக்கான காரணங்கள், பின்னணி, ஹிட்லரின் எழுச்சி, ஜெர்மனியின் தோல்வி, போரில் கலந்துகொண்ட நாடுகளின் அரசியல் நோக்கங்கள் என்று ஒரு விரிவான சித்திரத்தை இதில் வழங்கியிருக்கிறேன்.
முதல் உலகப் போர் எழுதுவதற்கு முன்பே இது வெளிவந்துவிட்டது.

ராணுவ வரலாறு என்பது தனியொரு ஆய்வுத் துறை. தமிழில் இத்துறை சார் புத்தகங்கள் அபூர்வமாகத்தான் வெளிவந்துள்ளன. முதல், இரண்டாம் உலகப்போர் பற்றிய அரசியல், சமூக வரலாற்று நூல்களும்கூட தீவிர ஆய்வு நோக்கில் இன்னமும் எழுதப்படவில்லை. ஒவ்வொரு நாடும் பேரில் பங்கேற்றதற்கான அல்லது தள்ளப்பட்டதற்கான காரணங்களையும், இந்தப் போர்கள் அந்நாட்டில் செலுத்திய தாக்கத்தையும் தனித்தனியே விவரித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை நாடிச் செல்வதற்கான ஆர்வத்தை இந்த இரு புத்தகங்களும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

***

வாழ்க்கை வரலாறு : புரட்சியாளர்கள் வரிசை
 
ஃபிடல் காஸ்ட்ரோ முதல் ஹியூகோ சாவேஸ் வரை :

லத்தின் அமெரிக்கப் புரட்சியாளர்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்ட மூன்று நூல்களில் முதலாவது, ஃபிடல் காஸ்ட்ரோ : சிம்ம சொப்பனம். நான் எழுதி வெளிவந்த முதல் நூல் இது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ந்து சுரண்டப்பட்ட ஒரு நாடாக க்யூபா திகழ்ந்த பின்னணி, ஹொஸே மார்த்தியின் வரவு, காஸ்ட்ரோ அரசியலுக்கு வந்த பின்னணி, க்யூபப் புரட்சி என்று ஒரு விரிவான அறிமுகத்தை வழங்கும் இந்தப் புத்தகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக க்யூப மக்கள் மேற்கொண்ட நீண்ட, நெடியப் போராட்டங்களையும் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளது. அரசியலில் இருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்ற காலகட்டத்துடன் இது முடிவடைகிறது.

காஸ்ட்ரோவைத் தொடர்ந்து சே குவேராவின் போராட்ட வாழ்க்கை வெளியானது. லத்தின் அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் ஓர் உத்வேகமூட்டும் குறியீடாக சே மாறியது ஏன் என்பதற்கான காரணங்களையும் சுருக்கமாக அலசியிருக்கிறேன்.

மூன்றாவது புத்தகம், ஹியூகோ சாவேஸ். 'சற்று முன்னால் இங்கே ஒரு சாத்தான் வந்திருந்தது. அதன் கந்தக நெடி இன்னமும் இங்கே எஞ்சியிருக்கிறது' என்று ஐக்கிய நாடுகள் சபையில் சாவேஸ் முழங்கிய அன்று இந்தப் புத்தகத்துக்கான தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அப்போது புத்தக வடிவில் சாவேஸ் குறித்த பதிவுகள் ஆங்கிலம் உள்பட எதிலும் அதிகமில்லை. சாவேஸ் லத்தின் அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார்; அவருடைய பங்களிப்பு இனி வரும் காலங்களில் பலமடங்கு அதிகரிக்கும் என்று எனது புத்தகத்தை நிறைவு செய்திருந்தேன். சாவேஸின் வாழ்வும் இவ்வளவு சீக்கிரம் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை.

லெனின், ஸ்டாலின், மாவோ மூவருடைய பங்களிப்பையும் அறிமுகப்படுத்தும் வகையில் மூன்று நூல்கள் அடுத்ததாக வெளிவந்தன. ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இரண்டையும் நிகழ்வுகள் வாயிலாக இந்தப் புத்தகங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இவற்றைப் பற்றி தனிப் புத்தகங்கள் எழுத நேரிட்டால் அப்போது ரஷ்யாவையும் சீனாவையும் இன்னமும் செழுமையாக அறிமுகப்படுத்தமுடியும் என்று நம்புகிறேன்.

கறாரான வரையறையின்படி மால்கம் எக்ஸை ஓர் இடதுசாரி என்றோ புரட்சியாளர் என்றோ அழைக்கமுடியாது. ஆனால் 'நீக்ரோக்கள்' என்று இழிவுபடுத்தப்பட்ட கறுப்பின மக்களுக்கு அவர்களுடைய ஆப்பிரிக்க வேரைச் சுட்டிக்காட்டி போர்க்குணத்தை ஊட்டியதில் அவருடைய பங்களிப்பு மறுக்கமுடியாதது. நிறவெறி கொண்ட வெள்ளைக்கார கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக அவர் இஸ்லாத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அகிம்சை வழியில் மட்டும் மார்டின் லூதர் கிங் போராடிக்கொண்டிருந்தபோது,  அடித்தால் திருப்பி அடி என்று அறைகூவல் விடுத்தார் மால்கம் எக்ஸ். படிப்படியாக அவருடைய சிந்தனைகள் வளர்ச்சி பெற்று வந்ததையும் எனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இந்தப் புரட்சியாளர்கள் எப்படி உருவாகிறார்கள்? அவர்களை இயக்கும் சக்தி எது? இவர்களுடைய உலகப் பார்வை எப்படிப்பட்டது? இந்தப் பார்வை எப்படி வளர்ச்சியடைந்தது? சே குவேராவை முன்வைத்து இந்தக் கேள்விகளை எழுப்பியபோது உருவான புத்தகம், 'சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?' அவருடைய எழுத்துகள்மூலம் சேவின் ஆளுமை வளர்ந்த கதை இதில் விவரிக்கப்பட்டுள்ளது. லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களையும் இந்த அணுகுமுறையோடு ஆய்வு செய்தால் சில நல்ல புத்தகங்களைக் கொண்டுவரமுடியும்.

***

வாழ்க்கை வரலாறு : அரசியல் தலைவர்கள்


நெல்சன் மண்டேலா : கறுப்பின மக்கள் விடுதலைக்காக வலிமையாக ஒலித்த குரல் அவருடையது என்பதால் இந்தப் புத்தகம். பின்னணியில், நிறவெறிக்குப் பலியான தென் ஆப்பிரிக்க மக்களின் வலி மிகுந்த வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக வெளிப்படுத்திக்கொண்ட மண்டேலா நாளடைவில் தனது அரசியல் பார்வையை மாற்றிக்கொண்டு அகிம்சையைத் தழுவிக்கொண்டார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்த மண்டேலா விடுதலை பெற்றதும் தன் இன மக்களின் விடுதலைக்காகப் போராடத் தொடங்கினார். ஆனால் அவரால் நிலைமையை அதிகம் மாற்றவில்லை. மால்கம் எக்ஸைப் புறக்கணித்த வரலாறு மார்டின் லூதர் கிங், மண்டேலா போன்றவர்களை மட்டும் கொண்டாட்டத்துடன் நினைவுகூர்வதன் பின்னால் ஏதேனும் அரசியல் உள்ளதா? இந்தப் புத்தகம் அலசுகிறது.

ஹு ஜிண்டாவ்  :  சமகால சீன அரசியல்மீதான ஆர்வத்தால் எழுதப்பட்ட புத்தகம். மாவோவுக்குப் பிறகான சீனாவில் தொடங்கி ஹு ஜிண்டாவின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாய் வரையிலான காலகட்டம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு சீனத் தலைவரின் வாழ்க்கை வரலாறு என்பதைவிட நவீன சீனா உருபெற்று எழுந்த கதை என்று இந்தப் புத்தகத்தை அழைப்பது பொருத்தமாக இருக்கலாம்.

***

அரசியல் வரலாறு : விடுதலைப் போராட்டங்கள்


திபெத் : வரலாற்று காலகட்டம் தொடங்கி விடுதலை வேண்டி சீன அரசை எதிர்த்துப் போராடும் காலகட்டம் வரையிலான நிகழ்வுகளை இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளது. மாவோவுக்கு முன்னால், மாவோவின் காலகட்டம், மாவோவுக்குப் பின்னால் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து திபெத்தியர்களின் போராட்ட வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. திபெத்தியர்களின் போராட்டத்தை ஆதரிக்கவேண்டுமா என்னும் கேள்வியை எழுப்பி அதற்கான விடையைத் (அல்லது விடைகளை) தேட முயற்சி செய்திருக்கிறேன்.

விடுதலைப் புலிகள் : சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிய பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த இயக்கத்தின் கதை. இன்றைய சூழலில் இதனை எழுதவேண்டியிருந்தால் hagiography வகையில் அல்லாமல் தெளிவான அரசியல், விமரிசனப் பார்வையுடன் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளையும் சித்தாந்தத்தையும் அணுகியிருக்கமுடியும்.

***