September 18, 2008

ஒபாமா பராக் பராக்!

கிட்டத்தட்ட ஒரு தேவதூதனைப் போலத்தான் ஒபாமாவை அமெரிக்கர்கள் பார்க்கிறார்கள். இறக்கைகள் இல்லாத தேவதூதன். ஒரு பெரிய ரப்பரால் எல்லா தவறுகளையும் ஒபாமா அழுத்தமாகத் துடைத்து அழித்துவிட்டு அமெரிக்காவின் தலைவிதியைப் பளிச்சென்று மாற்றி எழுதுவார் என்னும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு. கன்னாபின்னாவென்று சரிந்து கிடக்கும் பங்குச்சந்தை நிமிர்ந்து நிற்கவேண்டும். டாலரின் மதிப்பு உயரவேண்டும். அதைவிட முக்கியம் தேசத்தின் மதிப்பு. இராக் விவகாரத்தால் ஊர், உலகம் முழுவதும் வண்டி வண்டியாகக் கெட்ட பெயர். எல்லாம் மாறவேண்டும். நல்லபடியாக. அதிரடியாக. அடியோடு. ஆகவே, தேவை பராக் ஒபாமா.

பராக் ஒபாமா ஒரு மீட்பராகக் கருதப்படுவதற்கு மீடியா முன்வைக்கும் காரணங்கள் இவை. இராக்கில் இருந்து படிப்படியாக அமெரிக்க வீரர்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக வாக்களித்திருக்கிறார். புஷ் போல் அசட்டுத்தனமாக நடந்துகொள்ளமாட்டேன் என்று கட் அண்டு ரைட்டாகச் சொல்கிறார். அமெரிக்கா விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று நம்பிக்கை அளிக்கிறார். நாற்பத்தேழு வயது இளைஞர். துடிதுடிப்பும் செயல்வேகமும் விவேகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. மிக மிக எளிமையான குடும்பப் பின்னணி என்பதால் அடித்தட்டு மக்களின் அவலங்களை நன்கு உணர்ந்திருப்பார். நிச்சயம் அவர்களைக் கைவிடமாட்டார்.

ஒபாமாவின் முழுப் பெயர் தெரியும் இல்லையா? பராக் ஹுசேன் ஒபாமா. பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் இந்தச் சமயத்தில் ஒரு ஹுசேன் அதிபராவது நல்ல விஷயம். தவிரவும், ஒபாமா ஒரு கறுப்பினத்தவர். ஆகவே, அமெரிக்காவில் உள்ள கறுப்பர்களின் ஆதரவு முழுமையாக ஒபாமாவுக்குக் கிடைக்கும். கறுப்பர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் இனி பாதுகாக்கப்படும். மொத்தத்தில், அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த எண்ணங்களையும் கனவுகளையும் பிரதிபலிப்பவராக இருக்கிறார் ஒபாமா.

அப்படித்தானா? பராக் ஒபாமா உண்மையிலேயே ஒரு மீட்பர்தானா? அலசுவோம். அதற்கு முன்னால் அமெரிக்கப் பத்திரிகைகள் ஒபாமா குறித்து முன்வைக்கும் ஒர் ஆர்ப்பாட்டமான வாதத்தை எடுத்துக்கொள்வோம். வெள்ளையர்களின் தேசமாக அமெரிக்காவில் ஒரு கறுப்பர் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அமெரிக்கர்கள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதுதானே? ஐயோ அமெரிக்காவா அது இனவெறி கொண்ட நாடு அல்லவா என்று இனி யாரும் நாக்கில் பல் போட்டு பேச முடியாது அல்லவா?

அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒரு கறுப்பினத்தவர் அதிபர் பதவி தேர்தலில் இந்த அளவுக்கு முன்னேறி வந்தது இதுவே முதன் முறை. உண்மை. ஆனால், இந்த வெற்றி ஒபாமாவுக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக ஹிலாரியும் பில் கிளிண்டனும் செய்த அட்டகாசங்கள் என்னென்ன தெரியுமா? தெற்கு கரோலினாவில் முதல் கட்டத் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றபோது பில் கிளிண்டன் அடித்த கமெண்ட் இது. இந்த வெற்றியை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. காரணம், அது கறுப்பர்களின் மாநிலம்.
அதாவது, ஒபாமாவால் கறுப்பர்களை மட்டுமே கவர முடியும். அமெரிக்கா கறுப்பர்களின் தேசம் அல்ல. கறுப்பர்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு ஒரு அதிபரைத் தேர்ந்தெடுத்துவிடமுடியாது. ஆகவே, வெள்ளையர்களே கவலை வேண்டாம். இதுதான் கிளிண்டன் தெரிவிக்க விரும்பிய செய்தி. தன் மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்தபோது மேடை தவறாமல் கிளிண்டன் வலியுறுத்திய விஷயம் இது. பராக் ஒபாமா நமக்கான ஆள் கிடையாது. அவர் ஒரு கறுப்பர்.

ஹிலாரி இவருக்குச் சற்றும் சளைத்தவர் கிடையாது. அமெரிக்க மக்களின் ஆதரவை ஒபாமா பெறுவது சாத்தியமே இல்லை என்று அடித்துப் பேசினார். ஏனென்றார் அவர் ஒரு கறுப்பராம். போயும் போயும் ஒரு கறுப்பரிடம் நாட்டை எப்படி ஒப்படைப்பது என்று ஹிலாரியின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். ஹிலாரி அவர்களைத் தடுக்கவில்லை.

இதனையெல்லாம் கடந்துதான் பராக் ஒபாமா வெற்றிபெற்றிருக்கிறார். இனி ஜெயிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிந்தபிறகுதான் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார் ஹிலாரி. தேர்தல் பிரசாரத்திலேயே தோலின் நிறத்தை இழுத்து வந்தவர்களை இனவெறி கொண்டவர்கள் என்று விமரிசிப்பதில் என்ன தவறு? ஆக, அமெரிக்கா இதுவரை மாறவில்லை என்பதுதான் நிஜம். சரி, போகட்டும். இனியாவது பராக் ஒபாமா அந்த மாற்றத்தை ஏற்படுத்துவாரா?

முதலில் ஒபாமாவின் பின்னணி. செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்லர் அவர். உண்மைதான். ஒபாமாவின் தந்தை கறுப்பினத்தவர். தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர். வெள்ளையினத்தவர். ஒபாமா ஆரம்பக் கல்வி பயின்றது இந்தோனேஷியா என்னும் ஏழை தேசத்தில். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஒபாமா ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி போல் காட்சியளிக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஒபாமாவை வளர்த்தது அவர் தாயார் மற்றும் பாட்டி. இந்தோனேஷியாவில் இருந்தாலும் அவர் படித்தது மேட்டுக்குடிப் பள்ளியில். உயர்படிப்பு அமெரிக்காவில். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில். பழகியது மேல்தட்டு வர்க்கத்தினருடன். ஒபாமாவின் தோற்றம், சிந்தனை, பழக்க வழக்கம் அனைத்துமே மேட்டுக்குடியினரின் இயல்புகளை ஒட்டியே அமைந்திருக்கின்றன. நிறத்தால் அவர் கறுப்பாக இருந்தாலும் உணர்வுகளால் அவர் கறுப்பர் கிடையாது.

ஒபாமாவின் தேர்தல் பிரசார உரையே இதற்குச் சாட்சி. கறுப்பர்களின் வாழ்க்கை பின்தங்கியிருப்பதன் காரணம் என்ன? அவர்கள் வறுமை. கறுப்பர்கள் வசிக்கும் தெருக்கள் அசுத்தமாக இருக்கின்றன. கறுப்பினக் குழந்தைகள் விளையாட பூங்காக்கள் இல்லை. கறுப்பர்களுக்குக் கல்வி இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லை. எதிலும் முன்னுரிமை இல்லை. ஆகவே அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் பரிதாப நிலைக்குக் காரணம் அவர்கள்தாம்.

அதாவது, கறுப்பர்கள் தாமாகவே தேய்ந்து சுருங்கி இரண்டாம்தரக் குடிமக்களாக õறிவிட்டார்களாம். ஒரு அடிமை தானாகவே அடிமையாக மாறிவிட்டான் என்கிறார் ஒபாமா. கறுப்பர்கள் அடிமைகள் என்றால் அவர்கள் எஜமானர்கள் யார் என்பதை ஒபாமா தெரிவிக்கவில்லை. தெரிவிக்க விருப்பமில்லை அவருக்கு. கறுப்பர்களைத் திருப்திப்படுத்தவேண்டியது எத்தனை அவசியமோ அதைவிட பல மடங்கு அவசியமானது வெள்ளையர்களைத் திருப்திப்படுத்துவது. கறுப்பர்கள் தாழ்ந்துபோயிருப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்வதற்கு ஒரு நிமிடம் பிடிக்காது. ஆனால், அப்படிச் சொல்லிவிட்ட பிறகு, தேர்தலில் ஜெயிக்க முடியுமா?

ஹுசேன் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். பராக்குக்கும் ஒபாமாவுக்கும் இடையே வந்து விழுந்துவிட்ட பெயர் ஹுசேன். இஸ்லாத்துக்கும் ஒபாமாவுக்கும் துளி தொடர்பும் இல்லை. கிறிஸ்தவ ஐக்கிய தேவாலயம் என்ற கிறிஸ்தவ மதப் பிரிவைச் சேர்ந்தவர் ஒபாமா. வாரம் தவறாமல் தேவாலயம் செல்பவர். இஸ்லாமியர்களோடு இவர் கைகுலுக்கிக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. இதோ ஒபாமாவின் சமீபத்திய இரு வாக்குறுதிகள். தேவைப்பட்டால் குண்டு போட்டு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளை அழித்தொழிப்பேன். ஆப்கனிஸ்தானுக்குக் கூடுதல் அமெரிக்கப் படைகளை அனுப்பி வைப்பேன்.

இராக்? ஆரம்பத்தில் இருந்தே நான் இந்தப் போரை வெறுக்கிறேன் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படத்தியிருக்கிறார் ஒபாமா. இராக் போரைத் தொடர்வதற்கு கூடுதல் தளவாடங்கள் தேவை ஆகவே ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கவேண்டும் என்று புஷ் ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது ஜனநாயகக் கட்சி அதை எதிர்க்கவில்லை. அதாவது, பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி. பராக் ஒபாமாவின் பங்கு இதில் என்ன? இது தவறு என்று தன் கட்சியோடு இவர் சண்டை போட்டாரா? போர் எதிர்ப்பாளரான ஒபாமாவால் எப்படி போருக்கு ஆதரவு அளிக்கும் கட்சியின் சார்பாக போட்டியிட முடிகிறது?

இங்கே இருப்பது போல் அமெரிக்காவிலும் கறுப்பர்களுக்கு சில இட ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. இந்த இட ஒதுக்கீடு கூடாது என்று சில வெள்ளையின அமைப்புகள் அங்கே போராடிக்கொண்டிருக்கின்றன. இது பற்றி பராக் ஒபாமா என்ன சொல்கிறார்? கறுப்பர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறாரா? கிடையாது. ஏன்? ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் சமரசம். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு தன் பாதையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருப்பவர் பராக் ஒபாமா. எப்போது தேவையோ அப்போது மட்டும் ஒரு கறுப்பராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத்தெரிந்தவர் அவர். கறுப்பர் என்னும் அடையாளம் அவருக்கு ஒரு கவர்ச்சி அம்சம் மட்டுமே.

இருப்பதிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனர்கள்தாம் என்று ஒரு முறை பேட்டி கொடுத்தார். எனில், இஸ்ரேலின் தரப்பில்தான் தவறு என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று பின்னர் கேட்டபோது பதிலளிக்காமல் நழுகிக்கொண்டார். காரணம், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள சிறப்புத் தொடர்பு. இஸ்ரேலியர்கள் வன்முறையைக் கைவிட்டால்தான் அவர்களுக்கு நல்லது என்று அறிவுரை வேறு சொன்னார்.

க்யூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோவைச் சந்தீப்பீர்களா என்று கேட்டபோது ஒபாமா அளித்த பதில் இது. ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தவரை க்யூபாவில் சுதந்தரம் இருந்ததில்லை. நல்ல வேளையாக இப்போது அங்கே ஆட்சி மாறியிருக்கிறது. இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், க்யூபா மீது அமெரிக்கா முன்வைத்த பொருளாதாரத் தடைகள் அப்படியே நீடிக்கும். நான் அதை மாற்றமாட்டேன்.

புரிகிறது அல்லவா? ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது. அமெரிக்காவின் நிறம் மாறாது. அமெரிக்காவின் கொள்கைகள் மாறாது. தனிநபர்களால் ஆளப்படும் தேசம் அல்ல அது.

பராக் ஒபாமாவுக்கும் இது தெரியும். ஆனாலும் மூலைக்கு மூலை சென்று மைக் முன்னால் உணர்ச்சிகரமாக உரைகள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அமெரிக்கா நிச்சயம் மாறும். நான் மாற்றுவேன். அமெரிக்கா விரும்பும், அமெரிக்கர்கள் விரும்பும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன். ஒபாமாவை நம்பத் தயாராக இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். ஒபாமாவை நம்பத் தயாராக இருக்கிறது உலகம். எனக்கு உன்னைப் பற்றித் தெரியும் கண்ணா என்று ஒபாமாவைப் பார்த்து கண் சிமிட்டிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.

No comments: