September 18, 2008

13ம் நம்பர் வீடு

இப்படித்தான் ஆரம்பிக்கிறது அந்தப் பு்த்தகம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த கேன்சர் வார்டின் எண் 13. பாவேலுக்கு மூடநம்பிக்கைகள் கிடையாது என்றாலும் அவனுடைய நுழைவுச் சீட்டில் 13 என்னும் எண்ணைப் பார்த்ததும் அவன் இதயம் கலங்கியது. போயும் போயும் இந்த எண்தான் கிடைத்ததா? எத்தனையோ உபாதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வார்டுகள். அவற்றில் ஏதாவது ஓர் அறைக்கு இந்த எண்ணை கொடுத்திருக்கக்கூடாதா?

தன் கழுத்தில் உள்ள கட்டியைத் தொட்டுப்பார்த்தபடியே மருத்துவரிடம் கேட்கிறான் பாவேல்.

’டாக்டர், எனக்கு கேன்சர் இல்லையே?’

’நிச்சயம் இல்லை.’ என்று ஒன்பதாவது முறையாகச் சொன்னார் அவர்.

அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் (Alexander Solzhenitsyn) முக்கிய நாவல்களாகக் கொண்டாடப்படும் One Day in the Life of Ivan Denisovich, The Gulag Archipelago, The Full Circle எதுவொன்றையும் நான் வாசித்ததில்லை. நான் படித்தது Cancer Ward மட்மே. படித்தபோது எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. தெரிந்துகொண்டபோது கேன்சர் வார்டை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து வாசிக்கவேண்டும் என்று தோன்றியது.

இரண்டாம் உலகப் போரின்போது செம்படையின் ஒரு பிரிவில் கமாண்டராகப் பணியாற்றியிருக்கிறார் சோல்ஸெனிட்ஸின். ஸ்டாலினையும் தேசத்தையும் அவதூறு செய்தார் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து பிப்ரவரி 1945ல் இவர் கைது செய்யப்பட்டார். சோவியத்துக்கு எதிராக ரகசிய அமைப்பை ஆரம்பித்தார் என்றும் சொல்லப்பட்டது.

லேபர் கேம்பில் எட்டு ஆண்டுகளைக் கழித்து முடித்தபோது கழுத்தில் ஒரு கட்டி. நாடு கடத்துவதாகத் தீர்மானம் வந்து சேர்ந்தபோது அது புற்றுநோய்தான் என்று முடிவானது. தாஷ்கண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அநேகமான இறந்துவிடுவார் என்று உடன் இருந்தவர்கள் முடிவுக்கு வந்தபோது பிழைத்துக்கொண்டார். அந்த வகையில் கேன்சர் வார்ட் கிட்டத்தட்ட அவருடைய சொந்த அனுபவம் என்று சொல்லலாம்.

மார்க்சியம் இனி வேண்டாம் என்று முடிவு செய்தார் சோல்ஸெனிட்ஸின். ஸ்டாலினையும் செம்படையையும் தீர்மானமாக வெறுக்க ஆரம்பித்தார். ரஷ்யா ஒரு தேசமே அல்ல அது ஒரு கேன்சர் வார்ட்தான் என்றார். கேன்சர் வார்ட் நாவலின் இறுதி வரி இது. அந்தக் குரங்கின் கண்களில் ஒரு தீய மனிதன் புகையிலையை வீசினான். ஏன்? சும்மாதான். தீய மனிதன், ஸ்டாலின். ஒன்றும் அறியாத குரங்கு என்பது ரஷ்யர்களைக் குறிக்கும். புகையிலை, கம்யூனிசம்.

இனி நீ வேண்டாம் என்று சோவியத் யூனியன் சோல்ஸெனிட்ஸினைப் பிடித்து வெளியே தள்ளியது. நீதான் எங்களுக்கு வேண்டும் என்று மேலை நாடுகள் அவரை ஆழத் தழுவிக்கொண்டன. அவர்களுக்கு நூறு அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் தேவையாக இருந்தது. ஸ்டாலினை விமரிசிக்கிறாயா? சோவியத் யூனியனின் நடைபெறும் கொடுமைகளை எழுதித் தருகிறாயா? லெனின்? காரல் மார்க்ஸ்? இவர்களைத் தாக்கி எழுதித்தரமுடியுமா? வா இங்கே.

1970ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இதை வாங்கிக்கொண்டு சோவியத்துக்குள் அடியெடுத்து வைக்கமுடியாது என்று அவருக்குத் தெரியும். நான்கு ஆண்டுகள் காத்திருந்தார். சோவியத் அவரை மீண்டும் நாடு கடத்தியபோது, விரைந்து சென்று பரிசைப் பெற்றுக்கொண்டார். 1994ல் ரஷ்யா திரும்பினார். கம்யூனிசத்தின் சாயல்கூட இல்லாத ரஷ்யா. சோல்ஸெனிட்ஸின் கனவு கண்ட ரஷ்யா. மீண்டும் எழுத ஆரம்பித்தார். அவர் மனைவி, மகன்கள் அனைவரும் அமெரிக்கப் பிரஜைகளாக மாறியிருந்தனர்.

இரண்டு தினங்களுக்கு முன் (ஆகஸ்ட் 3, 2008) மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் இறந்துபோனார்.

No comments: