September 18, 2008

நேபாளத்தில் இன்னொரு போர்!

பிரசந்தா என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா? மிகச் சமீப காலம் வரை இந்த சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் அவரைப் பற்றி வெவ்வேறு செய்திகள் பல்வேறு ரூபங்களில் உலாவிக்கொண்டிருந்தன. பதுங்கு குழிகளில் மறைந்திருக்கிறார். ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். என்றாவது ஒரு நாள் திடீரென்று பாய்ந்து வந்து போரிட்டு மன்னரை வீழ்த்திவிட்டு மக்கள் ஆட்சியை மலரச் செய்வார்.

2000ம் ஆண்டில்தான் முதன் முறையாக பிரசந்தாவின் உருவம் வெளிவந்தது. கையால் வரையப்பட்ட ஒரு படம். தடித்த மீசை. கம்பளி அணிந்த சட்டை. கீழே அவர் பெயர். அதே ஆண்டு அவர் பேட்டி வெளிவந்தது. நேபாள மக்கள் ஆர்வத்துடன் படித்தார்கள். பிரசந்தா இப்படி கூறியிருந்தார். நேபாளம் சிறிய நாடு. எங்கள் இயக்கமும் சிறியது. ஆனால் எங்கள் கனவுகள் பெரியவை; பிரமாண்டமானவை. சிறு பொறிகளை ஏற்படுத்தவே நாங்கள் முயற்சி செய்கிறோம். பெரிய நெருப்பை ஏற்படுத்துவதற்கு சிறு பொறிகள் போதும்தானே?

போதும்தான். ஆனால் அத்தனை சுலபமான பணியாக இருக்கவில்லை அது. பத்து ஆண்டு காலம் இடைவிடாமல் போராடியது பிரசந்தாவின் மாவோயிஸ்ட் இயக்கம். மிகத் தெளிவான சித்தாந்தம் ஒன்றை வளர்த்தெடுத்துக்கொண்டார்கள். மாவோயிசம். மன்னர் ஆட்சியில் சுதந்தரம் கிடைக்காது. மன்னரை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சி நிறுவவேண்டும். ஜனநாயகம் தழைக்கவேண்டும். அதற்கு ஒரே வழி ஆயுதப் போராட்டம் மட்டுமே.

நூறு பேரில் 95 பேர் ஏழைகளாக இருந்த நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் சிரமம் அதிகம் இருக்கவில்லை பிரசந்தாவுக்கு. வருகிறீர்களா என்று கேட்டதும் பயிற்சியை எப்போது தொடங்கப்போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டார்கள் மக்கள். விவசாயிகள், பட்டதாரிகள், வேலை கிடைக்காதவர்கள், பெண்கள், முதியோர் என்று அனைவரும் திரண்டு வந்தனர். ஒரு கையில் சிவப்பு கொடி. மறு கையில் துப்பாக்கி. பிரசந்தா சொன்ன அந்த சிறு பொறி இப்படித்தான் வெடித்தது.

நேபாளத்தில் உள்ள காஸ்கி என்னும் மாவட்டத்தில் பிறந்தவர் (டிசம்பர் 11, 1954) பிரசந்தா. அவரது பெருவாரியான இளமைக்காலம் கழிந்தது சித்வான் என்னும் பகுதியில். அது ஒரு காட்டுப்பகுதி. நகரத்தில் இருந்தால் கட்டுப்படியாகாது என்பதால் ஆயிரக்கணக்கான ஏழைகள் வெளியேறி இந்தக் காட்டுப்பகுதியில் குடியேறினர். பிரசந்தாவின் தந்தை இதே காட்டுப்பகுதியில் ஒரு மூலையில் வேலை செய்துவந்தார். கொடிய மிருகங்கள். அதைவிட கொடுமையான ஏழைமை. இரண்டையும் சமாளித்து மீளவேண்டும்.

வேளாண்மை கல்லூரியில் படிக்கும்போது பிரசந்தாவுக்கு தோன்றியது. நாம் மட்டும் ஏன் இத்தனை சிரமப்படவேண்டும்? ஒரு புதிய சட்டை வாங்கவேண்டுமானால் ஆண்டுகணக்கில் கனவு காணவேண்டும். மாதக் கணக்கில் சேமிக்க வேண்டும். ஆனால், ஒரு பிரிவினருக்கு எல்லாமே சுலபத்தில் கிடைத்துவிடுகிறது. கனவு காண ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்தா என்று அலாவுதின் பூதம் தோன்றிவிடுகிறது.

அது வரம் தரும் பூதம் அல்ல ஒழிக்கப்படவேண்டிய பூதம் என்பதை பிரசந்தா விரைவிலேயே உணர்ந்துகொண்டார். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். செல்வந்தர்களுக்குப் பணம் குவிந்துகொண்டிருக்கிறது. எப்படி? ஏழைகளின் உழைப்பை சுரண்டுவது மூலம். உழைப்பை சுரண்டுவது என்றால் என்ன? உழைப்பு என்றால் என்ன? உழைப்பின் மதிப்பு என்ன?

மார்க்ஸ், லெனின், மாவோ மூவரையும் இடைவிடாமல் வாசிக்க ஆரம்பித்தார் பிரசந்தா. சில விஷயங்கள் புரிந்தன. நேபாளத்துக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல இது. ரஷ்யாவிலும், சீனாவிலும்கூட இதே நிலைமை இருந்திருக்கிறது. லெனினும் மாவோவும் அதை மாற்றியிருக்கிறார்கள். மன்னர் ஆட்சியை அவர்கள் ஒழித்திருக்கிறார்கள். புதிய ஜனநாயக அரசை அவர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். சீனாவிலும் ரஷ்யாவிலும் சாத்தியமாகக்கூடிய ஒரு மாற்றம் நேபாளத்திலும்கூட சாத்தியமாகும் அல்லவா?

படித்து முடித்ததும் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். கிராமப்புற நலத் திட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார். நேபாளத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உலகின் ஒரே இந்து தேசம் என்று ஆர்ப்பாட்டத்துடன் கொக்கரிக்கும் மன்னர்களின் வெட்டி பெருமை எரிச்சலை ஏற்படுத்தியது. வீடுகளில் குந்துமணி அரிசி இல்லை. இதில் இந்து மதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

1980ம் ஆண்டு தனது இருபத்தைந்தாவது வயதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். இதோ இன்னும் சிறிது காலத்தில் தலைவர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள். வா, பிரசந்தா வந்து இணைந்துகொள் என்று என்னை அழைக்கப்போகிறார்கள். மன்னருக்கு எதிராக போர் தொடுக்கப்போகிறோம். கனவுகளுடன் காத்திருந்தார் பிரசந்தா. ஆனால் அப்படி ஒரு அழைப்பு இயக்கத்திடம் இருந்து வரவேயில்லை. மெதுவாக சென்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பார்த்தார். ஐயா, நாம் எப்போது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறோம்? ஆகட்டும் பார்ப்போம் என்று சொல்லி அனுப்பினார்கள்.

வெறுத்து போனார் பிரசந்தா. இவர்களை நம்பி பிரயோஜனமில்லை. பயம் இவர்களைத் தடுக்கிறது. போராடும் உத்வேகம் இல்லை இவர்களிடம். நாம் எதற்கு ஒரு தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும்? தலைமை தாங்கும் தகுதி என்னிடம் இல்லையா? நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தோன்றியது இப்படித்தான். இயக்கத்தின் கொள்கை என்ன என்பதை பிரசந்தா தெளிவாக வெளிப்படுத்தினார். இந்து தேசம் என்னும் அடையாளத்தை உடைப்போம். மன்னரை விரட்டியடிப்போம். கம்யூனிச அரசை ஏற்படுத்துவோம். இனம், மொழி, வர்க்கம் சார்ந்த பிரிவினைகள் இல்லாமல் செய்வோம்.

பகிரங்கமாகப் போர் பிரகடனம் செய்தது மாவோயிஸ்ட் கட்சி. நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு மக்கள் ஆட்சி வேண்டுஎங்கள் மீது அதிகாரம் செலுத்தும் எந்தவொரு அமைப்பும் தேவையில்லை. மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்படவேண்டும். உங்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்றால் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு அரண்மனைக்குச் சென்று ஒளிந்துகொள்ளுங்கள். இந்த வாக்குறுதிகளை தராவிட்டால் நாங்கள் கலகம் செய்வோம்.

மாவோயிஸ்டுகளின் பின்னால் அணி திரண்டது தேசம். கலகம். கெரில்லா தாக்குதல். அரசியல் பிரசாரம். தேர்தல். ஒவ்வொரு கட்டமாக முன்னேறினார்கள் மாவோயிஸ்டுகள். நேபாள மக்கள் அவர்கள் பின்னால் அணிவகுத்து சென்றார்கள். பாய்ந்து வா என்று சொன்னால் பாய்ந்தார்கள். கொடி பிடி என்றால் பிடித்தார்கள். கலகம் வேண்டாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பிரசந்தா சொன்னபோது சரி என்று துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு அமைதி காத்தார்கள். நேபாளத்தை இயக்கும் உந்துசக்தியாக மாறிப்போனார் பிரசந்தா.

ஏப்ரல் 2006ல் ஞானேந்திராவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. மாவோயிஸ்டுகளின் செயல்திட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. கெரில்லா தாக்குதல்களுக்கு இனி வேலையில்லை. அடுத்து நாம் சந்திக்க வேண்டியது அரசியல் போராட்டத்தை மட்டுமே. பிரசந்தா தயாரானார். ஏப்ரல் 2008ல் நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் பிரசந்தா தெளிவாக இருந்தார். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். மலைவாசி மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போகிறோம். கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைக்கவேண்டும்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அணி திரண்டது. மூன்று பேர் கொண்ட கூட்டணி இது. நேபாள காங்கிரஸ். நேபாள ஐக்கியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிய லெனினிய) கட்சி. மாதேசி மக்கள் அதிகார அரங்கம். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளை இவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். பிரதமராக பிரசந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆஹா பிரமாதம் என்று நேபாள மக்கள் இந்த வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், போராட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது என்பதை பிரசந்தா உணர்ந்தே இருக்கிறார். எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே எங்கள் நோக்கமல்ல. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஒவ்வொன்றாக ஏற்படுத்தியாகவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் கூட்டணி கட்சிகளை சமாளித்தாகவேண்டும். இது கெரில்லா தாக்குதல்களை விடவும் ஆபத்தானது.

0

ஆனந்த விகடனுக்காக நான் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இது. இதழில் பிரசுரம் ஆகும்போது இந்தக் கட்டுரையின் வடிவம் மட்டுமல்ல மைய கருத்தும்கூட பெரிதும் சிதைந்துவிட்டது. கட்டுரைக்கு விகடன் வைத்த ஹீரோவா வில்லனா என்னும் தலைப்பே கூட ஏற்றுக்கொள்ளமுடியாததுதான். நேபாளம் பற்றிய என் உறுதியான நிலைப்பாடு இதுதான். அங்கே நடந்த மக்கள் புரட்சியை நான் ஆதரிக்கிறேன். பிரசந்தா தலைமையில் நடைபெற்று வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். இதழ்களில் அல்லாது இந்த வலைத்தளத்தில் நேபாளம் பற்றி தொடர்ந்து எழுத விருப்பம்.

No comments: