September 18, 2008

'நாட் நைஷ்!'

’டோண்ட் ஒர்ரி. ஆஃப்ட்டர் லஞ்ச் ஸ்ரீரங்கப்பட்டணம் போகலாம் ஷார், என்ஜாய் டிரிப் ஷார்’ என்றார் எங்கள் கைடு. காலை உணவுக்கு அரை மணி நேரம் வண்டியை ஓரங்கட்டினார்கள். உயிரியல் பூங்காவைச் சுற்றி வர முக்கால் மணி நேரம் அளிக்கப்பட்டது. (ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பேருந்து புறப்பட்டுவிடும் என்னும் மிரட்டலுடன்). சாமுண்டி மலையில் ஒரு மணி நேரம். ஷாப்பிங்குக்கு ஒரு மணி நேரம். (’ஒரிஜினல் மைசூர் சில்க் சாரீஷ், ஒரிஜினல் ஷாண்டல்வுட் ஐடம்ஷ், கிஃப்ட் ஐடம்ஷ். கவர்ண்மெண்ட் ரேட். வெரி சீப் ஷார். ஆல் கோ அண்டு பை ஷார்’).

மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் கைடை அணுகினேன். அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம்தானே? பான்பராக்கைக் கீழே துப்பிவிட்டு சிரித்தார் கைடு. ஷ்யூர் ஷார். ஃபர்ஷ்ஸ்ட் ப்ரிண்டாவன் கார்டன்ஸ். ஆஃப்டர் தட், ஸ்ரீரங்கப்பட்டணம். ப்ளீஷ் ஷிட் ஷார்.

ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குள் வண்டி நுழையும்போது மணி நான்கு. கைடு அவர் தம் இருக்கையில் இருந்து எழுந்துகொண்டார். ’ஷார், (குறிப்பாக என்னைப் பார்த்து) யுவர் ரைட் ஆண்ட் ஷைட் ஸ்ரீரங்கப்பட்டணம் ஈஸ் தேர். யூ நோ திப்பு ஷூல்டான், வெரி குட் ஃபைட்டர் ஷார். ஹி ஈஷ் டெட் ஹியர் ஷார். திப்பு ஃபோர்ட் நவ் நாட் ஹியர். கொலாப்ஷ்ட். நவ் ஃபாண்டா ஷாப் ஹியர். குட் கூல்டிரிங்க்ஸ்.’

நிறத்தாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்குப் பயம் வந்துவிட்டது. மிஸ்டர் கைட், வண்டியை நிறுத்துவீர்களா மாட்டீர்களா? ’ஹியர் நோ ப்ளேஷ் டூ ஷி ஸார். ஆல் கொலாப்ஷ்ட். ரங்கநாதர் டெம்பில் 45 மினிட்ஷ் பஷ் ஷ்டாப். யூ என்ஷாய் ஷார். ’

கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தேன். சிதிலமடைந்த சுவர்கள். தூண்கள். மண்டபங்கள். இடையிடையே பாலிதீன் கவரை விரித்து டீ, சமோசா மற்றும் குளிர்பானங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாய் பன்றியைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்தது. திஷ் ப்ளேஷ் நவ் வெரி பேட் ஷார் என்று கையை வெளியில் காட்டி பேசிக்கொண்டிருந்தார் கைடு.

கூடுதலாக, மழையும் பிடித்துக்கொண்டதால் ரங்கநாதர் கோயிலிலும் வண்டியை நிறுத்தவில்லை. ஐந்தே நிமிடங்களில் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கடந்துவிட்டோம். பேருந்து ஜன்னலையும் மூடிவிட்டார்கள். பிறகு, மைஷூர் பேலஷ். மியூஷிக் ஃபவுண்டன். எல்லாம் முடிந்து இறக்கிவிடும்போது, கைடு என்னிடம் வந்தார். ’ஷார், கைடு சார்ஷ் 25 ரூபிஸ் ப்ளீஷ்.’

No comments: