September 18, 2008

அண்ணாவின் சறுக்கல்

பெரியாருக்கு அரசியலில் நம்பிக்கை இருந்ததில்லை. ஆட்சி, அதிகாரம், அரசாங்கம் எல்லாமே வெங்காயம்தான் அவருக்கு. தேசியம், மொழி, கற்பு, புனிதம் எதன் மீதும் அவருக்கு மயக்கம் இருந்ததில்லை. போராட்டம். அது மட்டும்தான் தெரியும். மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு முஷ்டியை உயர்த்தியபடி தெருவில் இறங்கிவிடுவார்.

உங்கள் வாரிசு யார் என்று கேட்கப்பட்டபோது பெரியார் அளித்த பதில் இது. என் சிந்தனைகள். பெரியாரின் சிந்தனைகள் விலைமதிப்பற்றவை என்று கீ. வீரமணிக்குத் தெரியும். ஆகவேதான் அவற்றை விட்டுக்கொடுக்க இந்த நிமிடம் வரை அவர் தயாராக இல்லை.

அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன. பெரியார் படைப்புகளையும் பொதுவில் வைக்கலாமே என்று கோரிக்கை எழுந்தபோது, அவசரம் அவசரமாகக் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டுவிட்டார் வீரமணி. இது குறித்து யார் பேசினாலும் சீறுகிறார். சண்டை போடுகிறார். பெரியார் அவருடையவராம்.

பயம்தான் காரணம். யாராவது அவருக்குப் புரியவைக்கவேண்டும். பெரியாரின் சொத்துக்கள் வேண்டாம். அவர் படைப்புகள் மட்டும் போதும்.

0

முன்னெப்போதையும்விட பெரியாரின் தேவை இப்போது அதிகரித்திருக்கிறது. அவருக்குப் பிறகு, நாத்திகவாதத்தை சீற்றத்துடன் பிரசாரம் செய்த இன்னொரு தலைவர் இங்கே தோன்றவே இல்லை. இந்த நிமிடம் வரை.

எல்லோரிடமும் சமரசமம் செய்துகொண்டால்தான் அதிகாரம் என்பதால் எல்லோரும் சமரசம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஒன்றே குலம்; ஒருவனே தேவன். இது அண்ணாவின் சறுக்கல். தனிப்பட்ட முறையில் அண்ணாவுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்றாலும் பட்டவர்த்தனமாக நாத்திகவாதத்தை முன்னெடுத்துச்செல்ல அவரால் இயலவில்லை. காரணம், அவர் எல்லோருக்கும் முதல்வர்!

இங்கிருந்துதான் சரிவு ஆரம்பித்தது. இதைத்தான் சமரசம் என்றார் பெரியார். இதனால்தான் அதிகாரத்தை அவர் வெங்காயம் என்றார். இதனால்தான் முஷ்டியை உயர்த்திக்கொண்டு தெருவில் நின்றார். இதுவே அவருக்குத் தோதாக இருந்தது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி என்று பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு துணிச்சலாகப் பிரசங்கம் செய்யலாம்.

நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, இது சரிப்பட்டு வராது என்று ஒதுங்கிக்கொண்டார் பெரியார். அவரைப் பொறுத்தவரை ஜாதியும் இறைநம்பிக்கையும்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் ஆணி வேர்.

போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுபெற்றுவிட்டது. ஜாதிக் கட்சிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. முத்துராமலிங்க தேவர் போன்ற பிம்பங்கள் மீள்உருவாக்கம் செய்யப்படுகின்றன. புதுப் புது கடவுள்களும் புதிய கார்ப்பரேட் சாமியார்களும் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாவுக்குப் பிறகு தலைமையேற்றுக்கொண்ட மு. கருணாநிதி மேலும் சில படிகள் கீழே இறங்கினார். மூலைக்கு மூலை பெருகிவரும் கோவில்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. கோவில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக மாறிவிடக்கூடாது என்பது மட்டுமே அவர் கவலை.

சமரசத்தின் அடுத்த வடிவம் இது. மதம் இருக்கட்டும். ஜாதி இருக்கட்டும். இறைநம்பிக்கை பெருகினால் பரவாயில்லை. கோவில்கள் கட்டிக்கொள்கிறார்களா? போகட்டும். கொடியவர்கள் அல்லாது நல்லவர்கள் கையில் கோவில் நிர்வாகம் போனால் போதும்.

துணிச்சலான நாத்திகவாதப் பிரசாரத்தை இனி திமுகவிடம் இருந்து எதிர்பார்க்கமுடியாது. வீரமணியிடம் இருந்தும் எதிர்பார்க்கமுடியாது. ஆகவே, பெரியார் தேவை. பெரியாரின் சிந்தனைகள் தேவை.

2 comments:

ARIVUMANI, LISBON said...

you are absolutely right!! nice article..

RAJKUMAR said...

GOOD WORK ,. ATPUTHAMAANA ALASAL ., UNGAL PANI THODARATTUM