பிரபாகரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு விசேஷ தகுதி தேவை. நீங்கள் ஒரு கரும்புலியாக இருக்கவேண்டும். என் உயிர் பெரிதல்ல; நான் கொண்ட கனவே பெரிது என்று மனப்பூர்வமாக உணரவேண்டும். கட்டளையை ஏற்று நிறைவேற்றும் பக்குவமும் கீழ்ப்படியும் குணமும் அவசியம். எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் இயங்க தயாராக இருக்கவேண்டும். இறக்கவும்!
கரும்புலிகள் இதற்காகவே காத்துக்கிடப்பார்கள். சிலருக்கு மட்டும் இந்த மாதம் அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. தலைவரிடம் இருந்து இனிக்கும் கட்டளை. மாவீரர்களே, தயாராக இருங்கள். நீங்கள் செல்லவேண்டியது வவுனியாவுக்கு. இரவு உணவை முடித்துக்கொண்டு அதிகாலை கிளம்பிவிடுங்கள். பணியை சீராக முடித்துவிடுங்கள். உங்களைச் சந்திக்க ஆர்வத்துடன் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். வீரவணக்கம்!
கரும்புலிகள் ஆரவாரத்துடன் தயாரானார்கள். பிரபாகரன் அவர்களை புன்னகையுடன் வரவேற்றார். சிறிது நேரம் உரையாடினார். குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இரவு உணவு முடிந்தது. அதிகாலை அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
பிறகு, அந்த செய்தி வந்தது. வவுனியாவில் உள்ள வன்னி இலங்கை படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல். செயலிழந்தது இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகளுக்கு பாரிய வெற்றி!
நிரந்தர போர் பிரதேசமாக இலங்கை மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை இலங்கை ராணுவம் தாக்கி கைப்பற்றுவதும், பதிலுக்கு மேலதிக தீவிரத்துடன் புலிகள் போர் தொடுத்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீட்டெடுப்பதும் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போரைத் தவிர வேறொன்றை அறியாமலேயே ஒரு தலைமுறை அங்கே வளர்ந்திருக்கிறது. தலைக்கு மேலே காகம், குருவி பறந்து சென்றால்கூட, ஐயோ ஷெல் அடிக்கிறாங்க என்று காதைப்பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடும் வழக்கத்தை தமிழர்கள் இன்றுவரை கைவிடவில்லை.
இந்நிலையில், சென்ற வார வவுனியா தாக்குதலுக்கு (செப்டம்பர் 8, 2008) மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இந்திய அரசாங்கமும் ஒருசேர இப்போது வவுனியா பற்றி கவலைப்பட்டுக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருப்பது ஏன்?
தாக்குதல் பற்றி இலங்கை அரசிடம் இருந்து வெளிவந்த முதல் செய்தியை கவனித்தால் காரணம் புரியும். தரை வழியாகவும், ஆகாய வழியாவும் அதிகாலையிலேயே விடுதலைப் புலிகள் குண்டு வீச ஆரம்பித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நடைபெற்ற போரில் எங்கள் தரப்பில் 13 பேர் இறந்துவிட்டனர். 29 பேருக்குக் காயம். அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ராடர் கருவிகள் நாசமாகிவிட்டன. அவற்றை பரமரித்துக்கொண்டிருந்த இரண்டு இந்தியர்கள் படுகாயம். விரைவில் சுதாரித்துக்கொண்ட இலங்கை ராணுவம், 10 புலிகளை கொன்றொழித்தது. வெகு விரைவில், ஒரு புலி பாக்கியில்லாமல் அனைவரையும் அழிப்போம். இது சத்தியம்.
சவடாலை விட்டுவிடுவோம். தன் தரப்பு அழிவை குறைத்து சொல்வதும் புலிகள் தரப்பு அழிவை அதிகப்படுத்திச் சொல்வதும் இலங்கை அரசுக்கு வாடிக்கையான ஒன்று. ஆகவே இழப்பு எண்ணிக்கையையும் விட்டுவிடுவோம். விஷயம் ராடர் கருவிகளைப் பற்றியது. காயமடைந்த இந்தியர்களைப் பற்றியது.
அடுத்த அரசாங்க செய்தி வெளிவந்தது. ராடர் கருவிகளை எங்களுக்கு வழங்கியது இந்திய அரசாங்கம். 2005ல் வழங்கப்பட்டன. பணம் கொடுத்து வாங்கியவை அல்ல. பரிசாகக் கிடைத்தவை. காயமடைந்த இரு இந்தியர்களும் பெறியியலாளர்கள். ராடரை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அவர்களை இந்தியா அன்புடன் அனுப்பி வைத்தது. ஆற்றல் குறைந்த எங்கள் முந்தைய ராடர்களை சரிசெய்து கொடுத்ததும் இந்தியாதான்.
இந்தியா மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தொடுத்துவந்த குற்றச்சாட்டு மெய்தான் என்பதை இலங்கை அரசு முதன் முறையாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. பிரச்னை பூதாகரம் ஆனது இங்கேதான். இந்தியா ஏன் இலங்கைக்கு ராடர் கருவிகளை அன்பளிக்கவேண்டும்? கருவிகளை கொடுத்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் எதற்காக இந்திய பொறியியலாளர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும்? அப்படி என்ன கரிசனம் இலங்கையின் மீது?
குறிப்பாக வவுனியா தலைமையகத்தை விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இதுதான். இந்தியா அளித்த ராடர்களின் துணையுடன்தான் இலங்கை ராணுவம் தங்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் முன்னரே கண்டுபிடித்துவிட்டனர். சிங்களர்களுக்கு ஆதரவாக இந்தியா ஆயுதம் அளித்துக்கொண்டிருக்கிறது என்று வெறுமனே சொன்னால் சேச்சே அதெல்லாம் இல்லை என்று இலங்கையும் இந்தியாவும் ஒரே சமயத்தில் உதட்டைப் பிதுக்கியிருக்கும். குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடைக்காது. ஆகவேதான், மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்.
இப்போது சந்தேகங்கள் விரிவடைகின்றன. ராடர் கருவிகளை மட்டும்தான் இந்தியா இலங்கைக்கு அளித்திருக்கிறதா? நிச்சயம் இல்லை என்கிறார்கள் புலிகள். இலங்கைக்கு ஆயுதங்கள் அளிக்கும் நான்கு முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. (மற்ற மூன்று, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல்). ஆயுதங்களை மட்டுமல்ல ஆள்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. ராணுவ ரீதியிலான உதவிகள் செய்ய. ஆலோசனைகள் வழங்க. பயிற்சிகள் அளிக்க. இத்யாதிகள். இன்றைய தேதியில் இலங்கையில் குறைந்தது 265 இந்தியர்கள் மறைமுகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.
இந்த ராடர்களை உருவாக்கிய இந்திய நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இரு பரிமாண ராடர் வகையைச் சார்ந்தவை. வேவு பார்க்கும் ஆற்றல் அதிகம். உங்களிடம் இருக்கும் ராடர் வேலைக்கு ஆகாது இவற்றை வைத்து புலிகளின் வரவை கண்காணியுங்கள் என்று தோழையுடன் இவற்றை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது இந்தியா.
வவுனியா தாக்குதலில் காயமடைந்த இருவரும் இந்தியர்கள்தாம் என்பதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஒப்புக்கொண்டுள்ளது. இருவருமே பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முயற்சிகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன என்பதை தவிர வேறு செய்திகள் எதுவும் தூதரகத்தில் இருந்து வரவில்லை.
வரப்போவதும் இல்லை என்கிறார்கள் புலிகள். ஆமாம் நாங்கள் இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்று இந்தியா பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்போவதில்லை. இது தெரிந்ததே. ஏதாவது காரணம் சொல்லி இந்தியா தப்பித்துக்கொள்ளவே பார்க்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்னும் அக்கறை இந்தியாவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, மேலும் மேலும் சிங்களர்கள் பக்கம் அவர்கள் சாய்ந்து வருவது வருத்தத்துக்குரியது.
ஈழத் தமிழர்களின் வருத்தமும் இதுவேதான். சிங்களர்களுக்கு இந்தியா அளிக்கும் எந்தவொரு சிறிய உதவியும் எங்களை அழிப்பதற்காகவே பயன்படுத்துப்படுகிறது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும். இனத்தால், மொழியால் நாங்கள் இந்தியத் தமிழர்களோடு ஒன்றுபட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய தேதி வரை இந்தியா எங்கள் போராட்டத்தை அழுத்தமாக ஆதரிக்கவில்லை. வரவேற்கவும் இல்லை. குறைந்தது, இலங்கை ராணுவத்தோடு கைகுலுக்கிக்கொள்வதையாவது இந்தியா நிறுத்திக்கொள்ளக்கூடாதா?
நிறுத்திக்கொள்ளாது என்றுதான் தோன்றுகிறது. கூடிய விரைவில், ராணுவப் பொறியியல் தொழில்நுட்ப குழு ஒன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு வவுனியா செல்ல உத்தேசித்திருக்கிறது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிடப் போகிறார்களாம். கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் வேறு ராடர் தருகிறோம் என்று இலங்கை ராணுவத்தின் தோளில் தட்டி அவர்கள் ஆறுதல் சொல்லக்கூடும்.
இதற்கிடையில், வவுனியா தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்கிவிட்டதாகப் பெருமையுடன் தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் உயர் மட்ட மீட்டிங் நடத்திக்கொண்டிருந்தபோது பறந்தபடி குண்டு வீசி பல முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டார்களாம். விடுதலைப் புலிகள் வருத்தத்துடன் இதற்கு அளித்த மறுமொழி இது. ஐயோ அவர்கள் குண்டு வீசியது பொதுமக்கள் வாழும் பகுதிகளில். இறந்துபோனவர்கள் அப்பாவிகள்.
வரும் நாள்களில் மேலும் பல மோதல்களை எதிர்பார்க்கலாம்.
3 comments:
nice article
innum niraya ezhudhunga
Post a Comment