September 18, 2008

மால்கம் எக்ஸ்

நான் எழுதிய மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு கிழக்கில் வெளிவந்துள்ளது. சில பகுதிகள்.

0

ஒரு துப்பாக்கி வைத்துக்கொண்டால் என்ன? சட்டைப் பைக்குள் ஆயுதம் ஒன்று இருக்கிறது என்னும் நினைப்பேகூட கூடுதல் துணிச்சலை கொண்டு வந்துவிடலாம். இந்தக் கூடுதல் துணிச்சல் இப்போது அத்தியாவசியம். எந்தப் பக்கத்தில் இருந்து யார் தாக்குவார்கள் என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இனியும் அமெரிக்கக் காவல்துறையை நம்பிக்கொண்டிருக்கமுடியாது. அவர்கள் கண் முன்பாக என்னைக் கொன்று போட்டால்கூட தலையைத் திருப்பிக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள்.

மிஸ்டர் மால்கம் எக்ஸ், உங்கள் எதிரிகள் அபாயகரமானவர்கள். நீங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும். யார் கேட்டார்கள்? எனக்கு அறிவுரை சொல்லவேண்டும் என்று ஏன் உனக்குத் தோன்றவேண்டும்? முடிந்தால் பாதுகாப்பு கொடு. முடியவில்லையா? வாயை மூடிக்கொண்டு நகர்ந்துவிடு. போலியான கரிசனம். போலியான பாதுகாப்பு. எதுவும் தேவையில்லை எனக்கு.

சொல், கவனமாக இருப்பது என்றால் என்ன? பொதுக்கூட்டங்களுக்குச் செல்லாமல் இருப்பதா? என்னை நாடி வருபவர்களைத் திருப்பி அனுப்புவதா? வெள்ளையர்களின் இனவெறியை அம்பலப்படுத்தாமல் விட்டுவிடுவதா? எனக்கென்ன என்று என் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதா?

இதில் எதுவொன்றை செய்தாலும் அது இறப்பதற்குச் சமமானதே. பெருச்சாளியைப் போல் பதுங்கியிருப்பதற்காகவா இத்தனைக் காலம் உயிரைக் கையில் பிடித்திருந்தேன்? கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் தேங்கி கிடப்பதற்குப் பதிலாக சிறுத்தையைப் போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுத்துவிடலாம்.

இதற்குத்தான். இந்தப் பாய்ச்சலுக்குத்தான் துப்பாக்கி தேவை. தகுந்த காரியாலகத்தைத் தொடர்பு கொண்டு முறைப்படி விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு இல்லாததா? அவசியம் செய்துவிடுகிறோம் என்று புன்னகை செய்து அனுப்பிவைப்பார்கள். அத்தோடு தீர்ந்தது.

அதற்கான காரணத்தையும் மால்கம் எக்ஸ் அறிந்திருந்தார். எனது கடந்த வாழ்க்கையை புரட்டிப் பார்க்கும் எவரொருவருக்கும் என் மீது நம்பிக்கை ஏற்படாது. முன்னாள் குற்றவாளி. முன்னாள் கைதி. தவிரவும், கறுப்பன். அவமானத்தின் அடையாளம். கறுப்பன் அருவருக்கத்தக்கவன். சேற்றில் விழுந்து புரண்ட எருமை மாட்டை நெருங்குவது போல்தான் எந்தவொரு கறுப்பனையும் வெள்ளையர்கள் நெருங்குவார்கள். எட்டி நின்று வேண்டாவெறுப்பாகப் பேசுவார்கள். கறுப்பனின் மூச்சுக்காற்றை சுவாசித்து அதனால் ஏதேனும் தீரா வியாதி வந்து தொலைத்துவிட்டால்?

கறுப்பன் நிராகரிக்கப்படவேண்டியவன். சரி, ஒரு கறுப்பனே முஸ்லீமாகவும் இருந்துவிட்டால்? அதுவும் அடாவடி முஸ்லீமாக? நிச்சயம் துப்பாக்கி கிடைக்காது.

கண்களைப் பிரிக்கலாமா அல்லது அப்படியே சிறிது நேரம் படுத்திருக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார் மால்கம் எக்ஸ். இறப்பைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கவேண்டாம் என்று தோன்றியது. இது வாழ்வைப் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம். என் சமூகத்து மக்களின் வாழ்க்கை. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம். நான் எதிர்பார்க்கும் வெளிச்சம் அவர்கள் மீது படருமா? மிருகங்களைப் போல் அல்லாமல் ரத்தமும் நகமும் சதையும் கொண்ட மனிதர்களாக அவர்கள் நடத்தப்படும் காலம் வருமா?

0

‘ஏன் நம் வீட்டை அவர்கள் கொளுத்தவேண்டும்?’

‘உன்னால் அந்தக் காரணங்களைப் புரிந்துகொள்ளமுடியாது மால்கம்.’

‘சொல்லுங்கள் புரிந்துகொள்கிறேன். அப்பா அவர்களிடம் ஏதாவது சண்டை போட்டாரா?’

‘யாருடனும் சண்டை போடாமல் அவர் இருந்திருந்தாலும் நம்மை அவர்கள் தாக்கியிருப்பார்கள். நாம் கறுப்பர்கள்.’

கறுப்பர்கள் என்றால்? அவர்கள் வீடுகளைக் கொளுத்தலாமா? மால்கம் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான். லூசியா அவன் கன்னங்களை வருடிக்கொடுத்தார்.

‘இது முதன் முறையல்ல மால்கம். இதற்கு முன்னால் நாம் ஒமாஹாவில் இருந்தபோதும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டோம். அப்போது நான் உன்னை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தேன். திடீரென்று சிலர் வீட்டை முற்றுகையிட்டார்கள். உன் அப்பாவின் பெயரை உரக்கச் சொல்லி வெளியில் வருமாறு கத்தினார்கள். அவர்களிடம் துப்பாக்கி இருந்தது. உன் அப்பா அப்போது வீட்டில் இல்லை. நான் வெளியில் போகாவிட்டால் அவர்கள் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்று தெரிந்தது. பருத்திருந்த என் வயிற்றை இரு கரங்களால் பற்றியபடி கதவைத் திறந்தேன். உன் சகோதரர்கள் எனக்குப் பின்னால் பயத்துடன் ஒளிந்துகொண்டிருந்தார்கள். என்னை எரித்துவிடுவதைப் போல் அவர்கள் பார்த்தார்கள். கணவர் ஊரில் இல்லை என்று சொன்னேன். அவர்கள் கோபத்துடன் கத்தினார்கள். உடனே இங்கிருந்து காலி செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டோம்.’

0

முதல் குண்டு மால்கம் எக்ஸைத் தாக்கியபோது அவர் தன் மார்பை பிடித்துக்கொண்டார். கால்கள் தடுமாறின. அவரது மற்றொரு கையும் மார்பை நோக்கி விரைந்த போது இரண்டாவது குண்டு பாய்ந்தது. இடதுகை நடுவிரல் சிதைந்து ரத்தம் தெரித்தது. மால்கமின் வெள்ளை தாடியில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. பொத்தென்று பின்புறம் உள்ள இருக்கைகள் மீது விழுந்தார் மால்கம் எக்ஸ். அவர் தலை தரையில் மோதியது. மொத்தம் பதினாறு குண்டுகள் அவரைத் துளைத்திருந்தன.

மேடையை நோக்கிப் பாய்ந்து ஓடினார் மால்கமின் மனைவி பெட்டி. ஐயோ என் கணவரைக் கொல்கிறார்கள். அவரை யாராவது காப்பாற்றுங்கள். அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. கடவுளே!

மால்கமின் கழுத்துப் பட்டையை சிலர் தளர்த்திக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் கத்திக்கொண்டே ஓடி வந்தார்.

‘தள்ளுங்கள் தள்ளுங்கள் முதலில் அவருக்கு சுவாசம் கொடுக்கவேண்டும்.’

மால்கமின் தலையைக் கையில் ஏந்தி அவர் வாய் மீது வாய் பதித்து செயற்கை சுவாசம் அளிக்க முயற்சி செய்தார் அவர்.

‘உன்னால் முடியவில்லை என்றால் தள்ளிப்போ. மால்கமை நான் காப்பாற்றுகிறேன்.’

மற்றொரு இளைஞரும் முயன்று பார்த்தார்.

மால்கம், மால்கம் என்று கத்தியபடியே சிலர் வெறியுடன் தாவிக்குதித்து மேடை மீது ஏற ஆரம்பித்தார்கள். ஏதேனும் சிறு அசைவு தெரிகிறதா பாருங்களேன். மூச்சுக்காற்று? இந்த ரத்தத்தையாவது கட்டுப்படுத்துங்களேன். மருத்துவமனைக்குச் சொல்லிவிட்டீர்களா? நம் கண் முன்பாகவே இவரை நாம் பலிகொடுக்கப்போகிறோமா? அல்லா!

1 comment:

Anonymous said...

hi marudhan, keep it up. i am eager to read this book. pls send one copy to me with your signature once the book is releasd. i met you at erode bookfair near kizhaku stall. venkatesan.