September 25, 2008

பிசாசு, அமெரிக்கா, இயேசு நாதர்

(வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸிடம் வெவ்வேறு சமயங்களில் கேட்கப்பட்ட முக்கியமான பதினெட்டு கேள்விகள் இவை. சாவேஸின் வாழ்க்கை வரலாறை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் திரட்டப்பட்ட அவர் பேட்டிகளில் இருந்து இவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன்).

1) கேள்வி : நீங்கள் புஷ்ஷைப் பிசாசு என்று பகிரங்கமாகத் திட்டியது அநாகரிகமான செயல் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள்?

சாவேஸ் : அப்படியா சொல்கிறீர்கள்? பிசாசு என்று பேசுவது அநாகரிகமானது என்றால் பிற நாடுகளின் மீது குண்டு வீசுவதை எப்படிச் சொல்வீர்கள்? ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதை என்னவென்று சொல்வீர்கள்? மற்றொரு நாட்டை ஆக்கிரமிப்பது எந்த மாதிரியான செயல்? சொந்த மக்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒருவரை என்னவென்று அழைப்பது?

பேரழிவை உண்டாக்கம் ஆயுதங்களைப் பயன்படுத்தி பிறரைக் கொல்வது பிசாசின் செயல். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஃபலூஜாவில் (இராக்) பறவைகள் குவியல் குவியலாக மரித்திருக்கின்றன. கரப்பான் பூச்சிகள் செத்துப் போயிருக்கின்றன. ஓர் உயிரினம் கூட பாக்கியில்லாமல் அத்தனையும் அழிந்து போயிருக்கின்றன. இதையெல்லாம் என்னவென்று சொல்வது? ஒரு பிசாசைத் தவிர வேறு ஏதாவது இப்படிச் செய்யுமா?

புஷ் என்னை எத்தனையோ பெயர்களைச் சொல்லி திட்டியிருப்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், சில பெயர்களை நினைவுப் படுத்துகிறேன். சர்வாதிகாரி, கொடுங்கோலன், போதை மருந்து கடத்தல்காரன். போதுமா? இப்படியெல்லாம் என்னை அழைக்கும் புஷ் எப்படிப்பட்ட நபர் என்று நான் சொல்லத்தானே வேண்டும்?

2) கேள்வி : உங்கள் நாட்டை சேர்ந்த யாராவது உங்களைப் பிசாசு என்று திட்டினால் சும்மா விடுவீர்களா?

சாவேஸ் : நீங்கள் வெனிசுலா வந்து பார்க்கவேண்டும். பிசாசு என்று நான் திட்டியதற்கே இத்தனை உணர்ச்சிவசப்படுகீறீர்களே, அங்கே வந்து பாருங்கள். வெனிசுலா டிவி நிகழ்ச்சி எதையாவது பாருங்கள். என்னை கண்டபடி திட்டுவார்கள். (சிரிக்கிறார்).

3) கேள்வி : எதற்கெடுத்தாலும் ஏன் புஷ்ஷை குறை சொல்கிறீர்கள்?

சாவேஸ் : மூன்று வேளை உணவு முழுவதுமாகக் கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் இன்னும் கிடைத்துவிடவில்லை. எத்தனையோ ஏழைகள் வசிக்க இடமில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இத்தனை இருக்க, 500 பில்லியன் டாலரை ஆயுதங்கள் வாங்க புஷ் செலவிடுகிறார். அவரை குறை சொல்லாமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்? இந்தப் பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்கா மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் உள்ள அத்தனை ஏழைகளும் மறுவாழ்வு பெற முடியும்.

4) கேள்வி : உங்கள் ஆட்சியைக் கவிழ்க்க ஜார்ஜ் புஷ் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறீர்களா?

சாவேஸ் : அதுதான் உண்மை. நூறு சதவிகிதம் உண்மை. ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்து பணம் பெற்றதாகப் பலர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவர்களை நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் அமெரிக்கா சதி வேலை செய்வதை எங்களால் அனுமதிக்கவே முடியாது. இதே போல் அமெரிக்காவுக்கு போய் அமெரிக்கர்களுக்கு இதுபோல் பணம் கொடுத்து புஷ்ஷின் ஆட்சியைக் கவிழ்க்கச் சொன்னால் அவர் என்ன செய்வார்?

5) கேள்வி : உங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல்களில் கூட அமெரிக்கா தலையிடுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இது உண்மையா?

சாவேஸ் : இன்று நேற்று முளைத்ததல்ல இந்த தலையீடு. சுமார் 200 ஆண்டுகளாக அவர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்கள். எங்களுக்கு எதிராக யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களிடம் ஆயுதங்கள் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்கச் சொன்னார்கள்.

6) கேள்வி : அமெரிக்க அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சாவேஸ் : அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் கதை முடிந்துவிட்டது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அமெரிக்காவின் தாக்கம் பிற நாடுகளிலிருந்தும் மறைந்துவிடும். அமெரிக்கக் கழுகைக் குழித் தோண்டிப் புதைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.

7) கேள்வி : தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் புஷ் இராக்கை ஆக்கிரமிக்க விரும்பினார் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

சாவேஸ் : கிடையாது. இது புஷ்ஷின் தனிப்பட்ட காரணம் கிடையாது. பயங்கர ஆயுதங்களைத் தேடித்தான் இராக்குக்குள் நுழைந்தோம் என்று புஷ் கூறியதும் பொய்தான். அமெரிக்காவின் தற்போதைய தேவை எண்ணெய். எண்ணெய்க்காகத்தான் புஷ் இராக்கை ஆக்கிரமித்திருக்கிறார். அதே காரணங்களுக்காகத்தான் வெனிசுலாவையும் அவர் தொடர்ந்து குறி வைத்துக்கொண்டிருக்கிறார்.

8) கேள்வி : நீங்கள் அமெரிக்க எதிர்ப்பாளரா?

சாவேஸ் : நான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளை நான் தீவிரமாக எதிர்க்கிறேன். இனியும் எதிர்ப்பேன்.

9) கேள்வி : உங்களுடைய தேர்தல் வாசகத்தைப் பார்த்தோம். ’நீங்கள் சாவேஸுக்கு எதிராக இருந்தால், மக்களுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.’ இப்படிச் சொல்வது கூட பயமுறுத்துவது போலத்தானே?

சாவேஸ் : இந்த வாக்கியத்தை வைத்து நாங்கள் யாரையும் பயமுறுத்தவில்லையே! என்னென்ன முன்னேற்றங்களைக் கொண்டு வந்தோம் என்பதன் அடிப்படையில் மட்டும்தான் நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறோம். எனக்கு ஓட்டு போடாவிட்டால் கொன்று விடுவேன் என்று சொல்வதில்லை. எங்களுடைய எண்ணத்தை மக்களிடம் திணிக்கும் அநாகரீகத்தை செய்யமாட்டோம்.

10) கேள்வி : உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வெனிசுலாவிலுள்ள எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி உங்களை ஒரு ஹீரோவாக மாற்றிக்கொள்ள நீங்கள் முயற்சிக்கிறீர்கள். எல்லோருடைய கவனத்தையும் உங்கள் மீது திருப்புகிறீர்கள். உண்மையா?

சாவேஸ் : இயேசு நாதர் ஒரு முறை சொன்னதை எனக்கு நானே நினைவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ’அவர்களை மன்னித்துவிடுங்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.’ யாரோ சொல்லிக்கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் என்னிடம் வந்து கேட்காதீர்கள். நீங்களாகவே யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்.

11) கேள்வி : அமெரிக்காவையும் புஷ்ஷையும் இத்தனை தீவிரமாக விமர்சிக்கும் உங்களை அமெரிக்கர்கள் எப்படி விமர்சிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

சாவேஸ் : அமெரிக்கர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதைவிட அமெரிக்கர்களின் எதிர்காலத்தைப் பற்றி நான் படும் கவலைதான் அதிகம். அமெரிக்காவுக்கு உள்ளேதான் அந்தப் பிசாசு இருக்கிறது.

12) கேள்வி : புஷ்ஷை மட்டும் எதிர்க்கிறீர்களா அல்லது ஒட்டுமொத்த அமெரிக்கர்களையுமா?

சாவேஸ் : அமெரிக்கர்களை நான் ஏன் எதிர்க்கவேண்டும்? ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். அமெரிக்கர்கள் மீது எனக்கு எந்த விதமான வெறுப்பும் கிடையாது.

13) கேள்வி : அமெரிக்கா வெனிசுலாவை ஆக்கிரமிக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறீர்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

சாவேஸ் : நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. வெனிசுலாவை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும் திட்டம் அமெரிக்காவுக்கு உண்டு. எத்தனை ஜெட் விமானங்கள் வேவு பார்ப்பதற்காக எங்கள் வானத்தில் பறந்து செல்கின்றன என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உண்டு. அமெரிக்காவிலேயே எனக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வெள்ளை மாளிகையிலேயே என்னுடைய ஆள்கள் இருக்கிறார்கள். இது புஷ்
க்குத் தெரியாது.

14) கேள்வி : நீங்கள் ஒரு மார்க்சியவாதியா?

சாவேஸ் : நான் ஒரு மார்க்சியவாதி அல்ல. மார்க்ஸை நான் ஆழமாக வாசித்தது கிடையாது. நான் ஒரு பொலிவரியவாதி. மார்க்ஸை வாசிக்க நான் விரும்புகிறேன்.

15) கேள்வி : நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக மாறி வருகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அது சரியா?

சாவேஸ் : நீண்ட காலமாக சிலர் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். வெனிசுலாவுக்கு வாருங்கள். எங்கள் தெருக்களில் நடந்துச் செல்லுங்கள். எங்கள் மக்களிடம் பேசுங்கள். எங்கள் டிவியைப் பாருங்கள். செய்தித்தாள்களை வாசியுங்கள். பிறகு, உங்களுக்கே உண்மை தெரிந்துவிடும்.

புஷ்தான் மெய்யான சர்வாதிகாரி. என்ன ஏது என்று விசாரிக்காமல் ஒருவரை சிறையில் தள்ளும் வல்லமை கொண்டவர் புஷ். எல்லோருடைய டெலிபோனையும் அமெரிக்காவில் ஒட்டுக்கேட்கிறார்கள். லைப்ரரியிலிருந்து மக்கள் என்னென்ன புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கிறார்கள் என்று வேவு பார்க்கிறார்கள். ’இராக்கை விட்டு வெளியேறு!’ என்று டி-ஷர்ட்டில் எழுதி வைத்திருப்பவர்களை சிறையில் தள்ளிய நாடு அமெரிக்கா.

16) கேள்வி : எண்ணெய் விஷயத்துக்கு வருவோம். அமெரிக்க நிறுவனங்கள் வரி செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறீர்களாமே! வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளமாட்டோம் என்று சொல்லியிருக்கிறீர்களாமே!

சாவேஸ் : அவர்கள் வெளியேறவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அவர்களுக்கு நாங்கள் தேவை. எங்களுக்கு அவர்கள் தேவை. ஆனால் வரி செலுத்துவது பொதுவான ஒரு வழக்கம் அல்லவா? அதைக்கூட செய்ய மாட்டேன் என்று சொன்னால் எப்படி? வரி செலுத்தவில்லை. ராயல்டி செலுத்தவில்லை. என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன செய்திருக்கிறார்கள் போன்ற விவரங்களைச் சொல்வதில்லை. ஒப்பந்தத்தில் இருப்பதைக் காட்டிலும் நிறைய நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள். தவிரவும், வெனிசுலாவின் சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது இதைத்தான். இனி ஒழுங்காக சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள்.

17) கேள்வி : எண்ணெய் என்னும் ஒரு சமாசாரம் மட்டும் இல்லையென்றால், வெனிசுலா என்ன ஆகியிருக்கும்?

சாவேஸ் : ஒன்றும் ஆகியிருக்காது. நன்றாகவே இருக்கும். எண்ணெய் எங்கள் ஆதார சக்தி. இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அதற்காக, எண்ணெயை நம்பி மட்டுமே நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துவிடவேண்டாம். வெனிசுலாவை ஒரு விவசாய நாடாக மாற்ற நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். மின்சார உற்பத்திக்காவும், ரயில் பாதைகள் அமைப்பதற்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துகொண்டிருக்கிறோம். எண்ணெய் ஒரு சொட்டுக்கூட இல்லாமல் போகும் ஒரு நாள் வரலாம். ஆனால் இப்போதைக்கு அல்ல. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகே. அது வரை எங்களுக்கு எண்ணெய் தட்டுப்பாடு வராது.

18) கேள்வி : உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?

சாவேஸ் : உண்டு. என்னைப் பொறுத்தவரை இயேசு நாதர்தான் உலகின் முதல் சோஷலிசவாதி. தனது கொள்கைகளுக்காக அவர் உயிர் நீத்தார். சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. மதவாதிகள் இயேசு நாதரைப் பார்க்கும் பார்வை வேறு. நான் அவரைப் பார்க்கும் பார்வை வேறு. அவர் ஓர் அற்புத கடவுள் என்பதை விட, அவர் ஒரு கலகக்காரர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

ஆதாரம் :

1. Chavez interviewed on US TV show By Tavis Smiley 04 October 2006
2. Hugo Chavez By Greg Palast July 2006 Issue
3. Venezuelan President On Rocky Relations with Washington, Koppel, Sept. 16, 2005
4. The Sound and Fury & Time magazine interviews Chavez By Tim Padgett, Time.com, 04 October 2006.