September 27, 2008

கடத்தல் கூடாரத்தின் கதை

மும்பை நிழலுகம் பற்றிய ஆய்வில் சென்ற ஆண்டு ஈடுபட்டிருந்தேன். சில முக்கியக் குறிப்புகள்.

இந்தியாவில் கிரிமனல் நடவடிக்கைகளுக்கு உகந்த இடம் எது என்று பத்து கடத்தல்காரர்களிடம் மைக் நீட்டிக் கேட்டால் ஒன்பது பேர் மும்பை என்பார்கள். ஏன்?

1) மும்பையின் பொருளாதாரம் :

பிற நகரங்களோடு ஒப்பிடும்போது மும்பையின் பொருளாதாரம் போஷாக்கானது. மும்பை ஒரு முக்கிய வர்த்தக நகரம் என்பதால் பணப் புழக்கம் இங்கு அதிகம். உள்ளுர் கரன்ஸிகள் மாத்திரமல்ல, உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கரன்ஸிகளும் சர்வ சாதாரணமாக இங்கு கிடைக்கிறது. வர்த்தகம் எங்கு அதிகமோ அங்குதானே கடத்தலும் செழிப்புடன் வளரும்?

2) புவியியல் அமைப்பு :

மும்பையின் புவியியல் அமைப்பு குற்றவாளிகளுக்கு மிகவும் ஏற்றது. திரை மறைவு வேலைகள் செய்வது இங்கு சுலபம், ஒளிந்துக்கொள்வதும் சுலபம். தாராவி போன்ற அகண்டவெளியில் ஒருவர் ஒளிந்துக்கொண்டால் அவரை கண்டுபிடிப்பது இயலாத காரியம். குற்றவாளிகள் ஒளிந்துகொள்ள யாருமற்ற காடுகள்தான் தேவை என்று கிடையாது. மும்பையே போதும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதபடி மும்பையில் மட்டும் நிழலுலகத்தின் சாம்ராஜ்ஜியம் விருட்சத்தைப் போல படர்ந்துள்ளதற்கு இதுதான் காரணம்.

3) மும்பை துறைமுகம் :

மும்பை என்றில்லை, உலகெங்கிலுமுள்ள பல துறைமுகங்கள் கடத்தல்காரர்களின் சொர்கபுரியாக இன்று வரை நீடிக்கிறது. இன்று நேற்று முளைத்ததல்ல இது. துறைமுகம் எப்போது உருவானதோ அப்போது முதல் இதுதான் நிலைமை.

ஏன்?

பெரும்பயணம் மேற்கொள்ளும் கப்பல் ஊழியர்கள் எப்போதாவதுதான் தரையை வந்தடைகிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான வாழ்க்கை கடல் பயணத்திலேயே கழிந்துவிடுகிறது. கப்பலில் அவர்களுக்கு பொழுதுபோக்குகள் குறைச்சல். ஒரு வித இறுக்கமான சூழலிலேயே வாழ வேண்டிய கட்டாயம். ஆகவே கரையைத் தொடும்போதெல்லாம் அவர்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடத்தொடங்கிவிடும். இவர்கள் தேவையை உணர்ந்தே துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் மது வியாபாரம் தொடங்கப்பட்டது. இதே காரணத்துக்காகத்தான் பாலியல் தொழிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கவனிக்கவும். இவை இரண்டுமே அரசாங்கத்தின் பார்வையில் படாமல் நடத்தப்பட வேண்டிய சங்கதிகள். அப்படியானால் இவற்றை யார் எடுத்து நடத்த முடியும்? பெரிய ஆள்கள்? சரி, ஆள்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்களை காவல்துறை மோப்பம் பிடித்து உள்ளே தள்ளிவிட்டால்?

ஆக, வியாபாரம் நடத்த ஆள்கள் தேவை, காவல்துறையின் குறுக்கீடு இல்லாமல் கவனித்துக் கெள்ள ஆள்கள் தேவை. மது, மாது போன்றவற்றை தங்குத் தடையில்லாமல் 'சப்ளை' செய்யவேண்டும். மிக முக்கியமாக, இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒரு தலைமை தேவை.

இங்குதான் தாதாக்கள் நுழைகிறார்கள். கரீம் லாலா, வரதராஜ முதலியார் தொடங்கி தாவூத் இப்ராகிம் வரை அனைவரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது மது, மாது மட்டுமே தேவைப்பட்டது. இப்போது கூடுதலாக அபின், கஞ்சா, வெடிமருந்து, தங்கம், வெள்ளி என்று தேவைகள் பெருகி விட்டன. முதலில் கப்பலில் பணி புரிந்த ஊழியர்களுக்காக மட்டுமே திரை மறைவு வேலைகள் செய்யப்படவேண்டியிருந்தது. இப்போது இந்த வட்டம் விரிவடைந்துவிட்டது.

அடிமட்ட ஆள்கள் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை போதை மருந்துகளை உட்கொள்ளும் ஆள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதேபோலத்தான் ஆயுதங்களின் தேவைகளும். 'இன்ன ரகம், இன்ன அளவு, இத்தனை மணிக்குள் இத்தனை வேண்டும்' என்று ஆர்டர் கொடுப்பவர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.

நிழலுலகை நம்பித்தான் இவர்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பித்தான் நிழலுலகம் பிழைத்துக்கொண்டிருக்கிறது.

4) தாதாக்கள் இல்லாமல் வர்த்தகம் இல்லை

அரசாங்கம், நிழலுலகம் இரண்டும் சரிக்கு சமானமாக மும்பையை நிர்வகித்து வருகிறது. தனித்தனி வழிகளில். இது கிட்டத்தட்ட எழுதப்படாத ஓர் ஒப்பந்தம். நட்ட நடுப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து கடைக்குக் கடை கப்பம் வாங்கிச் செல்லும் சிறு தாதாக்களை இங்கு அநாயசமாகச் சந்திக்கலாம்.

ஒரு சின்ன பிஸினஸ் தொடங்கவேண்டும் என்றாலும்கூட நிழலுலகத்தின் உதவி தேவை. உங்கள் பிசினஸ் சட்டப்பூர்வமாக நடப்பதாக இருந்தால், ஒரு தாதாவின் மிரட்டலிலிருந்து தப்பிக்க மற்றொரு தாதாவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். சட்டத்துக்குப் புறம்பான பிசினஸ் என்றால் கேட்கவே வேண்டும்.

பணம் அதிகம் புழங்கும் வர்த்தகங்களில் தாதாக்களின் பங்கு நிறையவே இருக்கும். உதாரணம் ரியல் எஸ்டேட், சினிமா.

2 comments:

ஜுர்கேன் க்ருகேர் said...

நம் நாட்டின் "financial Capital" மும்பை தானே.
அதனாலே தாதாக்கள் கிட்ட மட்டுமில்ல வேற யாரு கிட்ட கேட்டாலும் இதைதான் சொல்லுவாங்க!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முறைகேடான தொழில்கள் தனி நபர்களின் உதவியினால்தான் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டது என்றாலும், காவல்துறை, அரசுத் துறைகளின் உதவியில்லாமல் இந்த அளவுக்கு பெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்திருக்க முடியாது..

வரதராஜ முதலியாரையே காங்கிரஸ்தானே வளர்த்தது.. பால்தாக்கரேயை எதிர்க்க சரியான ஆள் இவர்தான் என்றெண்ணி அவருக்கு மறைமுகமாக ஆதரவளித்து, பாலூட்டி வளர்த்தது. அவரும் தமிழ் மக்களிடையே ஒரு தலைவராக உருப்பெற்று காங்கிரஸின் கை சின்னம் தாராவி பகுதியில் மங்காமல் பார்த்துக் கொண்டார்.

மோடி மஸ்தானை நெருக்கடி காலக்கட்டத்தில் ஒளித்து மறைத்து வைத்ததே அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்கள்தான் என்ற தகவல்களெல்லாம் இப்போதுதான் வெளியில் சிந்தி வருகின்றன. இதே மஸ்தானை வைத்துத்தான் மொரார்ஜி தேசாயின் மகன் மீதும், மருமகள் மீதும் பொய்க்குற்றாச்சாட்டு சொல்லி பெயரைக் கெடுக்க காங்கிரஸ் பகடைக்காயாக பயன்படுத்தியது.

குண்டுவெடிப்புக்கு முன்புவரையிலும் மும்பையில் இதே தாவூத் இப்ராஹிம் கட்டப் பஞ்சாயத்தும், மாமூல் வசூலித்தும்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் போலீஸாரும், ஆளும் கட்சிக்காரர்களும் சல்யூட் அடித்து வழிவிட்டுத்தான் இருந்தார்கள். இல்லாவிடில் தம்பி கல்யாணம், அண்ணன் கல்யாணத்திற்காக சினிமாக்காரர்கள் வந்து ஆடியிருப்பார்களா..? சினிமாவை மறைமுகமாக கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் இருந்தவரைப் பற்றி உள்ளூர் போலீஸாருக்குத் தெரியாதா என்ன?

அரசுகள் நினைத்தால் எதையும் தடுக்க முடியும்.. மனம் வைக்க வேண்டும். மனம் வைக்கும் முன் அதற்கான அறிவுக்கூறு அவர்களுக்கு இருக்க வேண்டும்.. இருக்கிறது என்று நினைக்கிறீர்களா..?

நல்ல, தேவையான, அறிவுப்பூர்வமான கட்டுரை மருதன் ஸார்..

நன்றிகள்..