October 14, 2008

மாவோவின் மத நம்பிக்கை

மக்களிடையே உள்ள சில முரண்பாடுகளை செம்படை வீரர்கள் கண்டறிந்து வந்து மாவோவிடம் தெரிவித்தார்கள். சோஷலிச சமூகத்தை அமைக்க அவர்கள் செய்த முயற்சிகளுக்கு மக்களிடையே சில எதிர்ப்புகள். சோஷலிசத்தை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். கம்யூனிஸச் சித்தாந்தத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உருவ வழிபாடு செய்கிறார்கள். கோயில்களுக்குச் செல்கிறார்கள். இறை நூல்களைப் படிக்கிறார்கள். என்ன செய்யலாம்?

இது போன்ற ஒரு சிக்கல் வரும் என்று மாவோ முன்னரே எதிர்பார்த்திருந்தார். என்ன செய்யவேண்டும் என்று செம்படை தளபதிகளுக்குத் தெளிவாக விளக்கினார் அவர்.

இது மக்களுக்கான குடியரசு. மக்களால் அமைக்கப்பெற்ற குடியரசு. பத்திரிகை சுதந்தரம், பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, ஊர்வலம் போகும் உரிமை, ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை, மத உரிமை அனைத்தும் மக்களுக்கு உண்டு. சட்டம் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசு அமைவதற்கு முன்னால் சீனாவின் நிலைமை என்ன? உழைப்பாளி வர்க்கத்தைச் சுரண்டும் உரிமை நிலப்பிரபுக்களுக்கு உண்டு. ஆனால் என்னைச் சுரண்டாதே என்று சொல்லும் உரிமை தொழிலாளர்களுக்குக் கிடையாது. இன்று? கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்தரத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள். ஒருவரை மற்றொருவர் சுரண்டும் வழக்கம் முற்றிலுமாக களையெடுக்கப்பட்டுவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனால் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சுதந்தரத்துக்குக் கட்டுப்பாடு அவசியமா? ஆமாம். சோஷலிசம் என்பது ஒரு வரையறை. ஒரு கட்டுப்பாடு. ஒரு எல்லை. அந்த எல்லைக்கு உள்பட்டு வாழ்வதுதான் அனைவருக்கும் நல்லது. சுதந்தரத்தின் எல்லைக்கு உட்பட்டு வாழ்வது என்னும் கருத்தை மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டுவிட்டனர். எல்லையில்லா சுதந்தரம் அராஜகத்துக்குத்தான் இட்டுச்செல்லும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஒரு சாராருக்கு அது புரியவில்லை. அவர்களை என்ன செய்வது?

என்ன செய்துவிடமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நமக்குச் சரி என்று பட்டதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லாம். பொறுமையாக. மற்றபடி அவர்கள் மீது நம் நம்பிக்கைகளைத் திணிக்கக்கூடாது. நூற்றுக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கட்டும். நூற்றுக்கணக்கான கருத்துகள் முட்டி மோதட்டும்.

கம்யூனிஸம் மதத்தை நிராகரிக்கிறது. உண்மை. ஆனால், மத நம்பிக்கையை நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. சீனாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நம்மால் தடை செய்ய முடியாது. தடை செய்யவும் கூடாது. அதே சமயம், கடவுள் மறுப்புப் பிரசாரத்தை கைவிடவும் கூடாது. பொதுவுடைமைக் கருத்துகளை போதிக்கிறீர்கள் அல்லவா? சோஷலிசத்தின் அவசியத்தை வலியுறுத்துகீறர்கள் அல்லவா? அதே போல், கடவுள் எதிர்ப்புச் சிந்தனைகளும் சேர்த்தேதான் பிரசாரம் செய்யப்படவேண்டும். ஆனால், எந்த சமயத்திலும் நம் கருத்துகளை மக்கள் மீது திணிக்கக்கூடாது.

இன்று முதல் யாரும் வழிபடவேண்டாம் என்று சட்டம் இயற்றுவதன் மூலம் மதத்தை அழித்துவிடமுடியாது. மார்க்ஸியம் உன்னதமான ஒரு மானுட தத்துவம் என்று நமக்குத் தெரியும். மார்க்ஸின் சிந்தனைகளை, எங்கெல்சின் சிந்தனைகளை, லெனினின் எழுத்துகளை புத்தகங்களாக அச்சிட்டு விநியோகம் செய்கிறோம். ஆனால், நீங்கள் இன்று முதல் மார்க்ஸியவாதியாக மாறவேண்டும் என்று யாரையும் நாம் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. கூடாது.

மக்களிடையே உள்ள முரண்பாடுகளை எச்சரிக்கையுடன் அணுகவேண்டும். நம் எதிரிகளிடம் காட்டும் அணுகுமுறையை இங்கே கையாளக்கூடாது. நம்முடைய லட்சியங்களுக்கு இணங்கிப்போகுமாறு அவர்களைத் தூண்டலாம். போதனை செய்யலாம். விமர்சிக்கலாம். உட்கார வைத்து பேசி புரியவைக்கலாம். ஆனால் எந்த சமயத்திலும் அவர்களைப் பலவந்தப்படுத்தக்கூடாது.

No comments: