1948ம் ஆண்டு நேருவும் பிரிட்டிஷ் அரசரின் அலுவலகமும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களை தி ஹிந்துவில் வெளியிட்டிருக்கிறார் நட்வர் சிங். எனக்கு நேருவை மிகவும் பிடிக்கும். ஆனாலும் இப்படிப்பட்ட கடிதத்தை நேரு எழுதியிருப்பது அவருக்கு நல்லதல்ல. நட்வர் சிங்கின் வருத்தம் இது.
அது ஒரு சிபாரிசுக் கடிதம். இதுவரை அச்சில் வரவில்லையாம். சுருக்கம் இது. அன்புள்ள மன்னா, மவுண்ட்பேட்டனும் எட்வினா மவுண்ட்பேட்டனும் இதுவரை இந்தியாவுக்கு ஆற்றியிருக்கும் சேவை மகத்தானது. அவர்களை நினைத்து நாங்கள் பூரித்துப்போயிருக்கிறோம். தக்க முறையில் அவர்களுக்கு அரசர் ஏதாவது செய்யவேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். செய்வீர்களா?
மன்னரும் பதில் அனுப்பியிருக்கிறார். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், வேறு இடத்தில் இருந்து எனக்கு வேறு மாதிரியான ரிப்போர்ட் வந்திருக்கிறது. தவிரவும், மவுண்ட்பேட்டன் தம்பதியை நாங்கள் நன்கு அறிவோம். அவர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் கௌரவமே போதும் என்று நினைக்கிறேன்.
எட்வினா மவுண்ட்பேட்டன் மீது ஏற்பட்ட வசீகரத்தால் நேரு சில தவறான முடிவுகளை (இந்தக் கடிதம் உள்பட) எடுத்திருப்பதாக நட்வர் சிங் சொல்கிறார். வருந்தவும் செய்கிறார்.
நட்வர் சிங்கின் கட்டுரைக்குக் கடுமையான எதிர்வினைகள் வந்திருக்கின்றன. அதெப்படி எங்கள் நேரு மாமாவைப் பற்றி எப்படித் தவறாகச் சொல்லலாம்? அவரைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, இதை ஏன் சொல்லவேண்டும்? அதுவும் இந்த நேரத்தில்? (குழந்தைகள் தினத்தையொட்டி வெளிவந்த கட்டுரை அது).
பாடப்புத்தகங்கள் முன்வைக்கும் இந்திய சுதந்தரப் போராட்ட வரலாறை மட்டுமே வாசித்திருப்பவர்கள் இந்தக் கடிதங்களை வாசித்து அதிர்ச்சியடையலாம். நிஜ வரலாறைத் தேடவும் ஆரம்பிக்கலாம்.
2 comments:
நடந்ததை சொல்வதற்க்கு தயங்க கூடாது யாரும்.
அவர் எப்பேர்ப்பட்ட தலைவராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் எனும் போது தான் தவறுகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
அவருடைய நிறைகளை மட்டுமே சொல்லவேண்டும் குறைகளை சொல்லக் கூடாது என்றால் என்ன நியாயம் இருக்கிறது.
இவ்வாறு சொன்னால் தான் மற்றத் தலைவர்கள் தப்பு செய்ய பயப்படுவார்கள்.
யாராக இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வகுக்கப்படாத நியதி உள்ளது.
நட்வர் சிங் இவ்வளவு நாட்கள் இந்தக் கடிதம் பற்றி ஏன் எதுவும் தெரிவிக்காமல் இப்போது வெளியிடுகிறார்?
Post a Comment