January 1, 2009

உலகம் 2008

2008ம் ஆண்டின் சிறந்த மனிதராக பாரக் ஒபாமாவைத் தேர்வு செய்திருக்கிறது டைம். பளபளப்பையும் மினுமினுப்பையும் தொலைத்துவிட்டு இருண்டு கிடக்கிறது அமெரிக்கா. அமெரிக்கர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அடுத்து என்ன என்று தேசமே திகிலுடன் திகைத்து நிற்கும்போது ரட்சகர் போல் இறக்கைகளுடன் வந்து சேர்ந்த பராக் ஒபாமா ஒரு லட்சியப்பூர்வமான எதிர்காலத்தை உருவாக்கித்தருவதாக வாக்களித்திருக்கிறார். ஆகவே, ஒபாமாவைத் தூக்கி அட்டையில் போட்டுவிட்டது டைம். வருத்தப்பட்டு பாரம் சுமக்கப்போகும் ஒபாமாவுக்காக அத்தேசம் காத்துக்கொண்டிருக்கிறது.

மாற்றம். ஒபாமா தன் அரசியல் சித்ததாந்தமாக முன்வைத்த இந்த மந்திரச்சொல்லைதான் உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை 2008.போராட்டங்கள். ஏமாற்றங்கள். தோல்விகள். காயங்கள். ஏழை தேசம், பணக்கார தேசம் என்று பாகுபாடில்லாமல் எங்கும் பிரச்னைகள். வாழ்வா சாவா போராட்டம். வீதிக்குத் திரண்டு வந்து வாய் வலிக்கக் கோஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைக் குற்றம் சாட்டுவதே வேலையாகப் போய்விட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தவர்கள்கூட ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆம், இந்த வருடத்தை அலைகழிக்கும் பெரும்பாலான அரசியல் பிரச்னைகளின் ஆணிவேர் அமெரிக்கா.

அங்கிருந்தே தொடங்குவோம். பங்குச்சந்தையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஐந்து பெரும் நிறுவனங்களில் மூன்று (பேர் ஸ்டீன்ஸ், மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ்) முடங்கிவிட்டது. உலகின் மிக சக்திவாய்ந்த காப்பீடு நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஏ.ஐ.ஜி. தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சகாய விலையில் கிடைக்கிறதே என்று வீட்டுக்கடன் வாங்கியவர்கள் வீட்டை இழந்து, வேலையை இழந்து, கடனை மட்டும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். வங்கிகள். வட்டிக்குக் கடன் கொடுக்கும் அந்த ஊர் சேட்டு கம்பெனிகள். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இந்த மூன்று துறைகளிலும் ஏற்பட்ட ஊழல்கள், மோசடிகள், தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட மிக மோசமான பொரும்ளாதார வீழ்ச்சி இது. எப்படியும் போகப்போகிறோம் என்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை புஷ்.

பாதிப்பு அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல. ஒட்டுமொல்ல உலகத்துக்கும்தான். உலகமயமாக்கல் என்னும் மாய சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தேசமும் இந்த விநாடி வரை மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறைதான் சிறந்தது. அமெரிக்காவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுனர்கள் வாயைத் திறக்க மறுக்கிறார்கள். ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்நிலை என்றால் பிற தேசங்களுக்கு?

அமெரிக்காவில் பொருளாத வீழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே பிற தேசங்களில் தேக்கநிலை தொடங்கிவிட்டது. ஒரு நாள் அரிசி சாதம் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்? ஆகவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரிசி வாங்குகிறார்கள் பங்களாதேஷ் மக்கள். அதுவும் சாத்தியம் ஆகாவிட்டால் வாரத்துக்கு ஒரு முறை. அல்லது மாதம் இரு முறை. அரை நாள் சம்பாதித்தியம் கொடுத்தால்தான் இரண்டு கிலோ அரிசி கிடைக்கும். எனில், மற்ற செலவுகளை எப்படிச் சமாளிப்பது? ஏமன் நாட்டிலும் இதே நிலைமைதான். ஒரே வித்தியாசம் அரிசிக்குப் பதிலாக ரொட்டி.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட கோதுமையின் விலை கடந்த ஆண்டு மட்டும் 120 மடங்கு அதிகரித்திருக்கிறது. அரிசி 75 சதவீதம். கடந்த மூன்று ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை சற்றேறக்குரைய 83 மடங்கு அதிகரித்திருக்கிறது. கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது உலக வங்கி. இன்னும் 500 மில்லியன் டாலர் தேவையாம். அப்போதுதான் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரமுடியுமாம். ஓரளவுக்காவது.

என்ன செய்யலாம் என்று உலகப் பொருளாதார மேதைகளும் சமூக விஞ்ஞானிகளும் ஒரு பக்கம் கருத்தரங்குகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், ஹைத்தி தேசத்து மக்கள் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டதாம் கண்ணே என்று குழந்தைகளிடம் பொருளாதார வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே உணவு விலை அதிகரித்துவிட்டதாம் என்று வரைபடத்தை விரித்து வைத்து கதை சொல்ல முடியாது.

களிமண்ணை எடுத்து வந்து நீர் விட்டு பிசைந்து, தட்டி தட்டி நெருப்பில் வாட்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். என் கண்ணே, இருப்பதை வைத்து திருப்தி அடைந்துகொள்வோம். இந்தா இது ஒரு புது விதமான கேக். கிட்டத்தட்ட ரொட்டி போலத்தான். மஞ்சள் வண்ண கேக் என்று இதனை நாம் அழைத்துக்கொள்வோம். எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடு. இதன் ருசி அலாதியானது. ஆரம்பத்தில் உனக்குப் பிடிக்காமல் போனாலும் போகப் போக பழகிவிடும். மட்டுமின்றி, நீ கேட்கும்போதெல்லாம் தயாரித்துத் தருகிறேன் அன்பே! ஹைத்தி குழந்தைகள் மண் கேக் சாப்பிடும் புகைப்படும் வெளிவந்து, உலகத்தை அதிரச் செய்தது.

இராக் மற்றும் ஆப்கனிஸ்தான். கட்டக்கடைசியாக இந்த இரு தேசங்களுக்கும் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று புஷ் ஆசைப்பட்டது தவறாகிவிட்டது. திட்டத்தை முன்கூட்டியே அறிவித்தால் களேபரமாகிவிடும் என்பதால் சாமர்த்தியமாக, பொய்யான டைம் டேபிள் ஒன்றை வெளியிட்டு உலகத்தின் கவனத்தை திசை திருப்ப முயன்றது வெள்ளை மாளிகை.

காதும் காதும் வைத்ததுபோல் இராக் சென்று இறங்கியிருக்கிறார். இராக் அதிபர் நூரி அல் மாலிக்கோடு போஸ் கொடுத்துக்கொண்டே தன் தொண்டையைச் செருமியபோது அந்த எகிப்திய பத்திரிகையாளர் (முந்தாஸர் அல் ஜெய்தி) இரண்டு ஷூக்களையும் கழற்றி ஒன்றன் பின் ஒன்றாக வீச, வாத்து போல தலைகுனிந்திருக்கிறார் புஷ். (எப்போதோ தலைகுனிய வேண்டியவர்). முந்தாநாள் வரை ஒருவருக்கும் அறிமுகமாகாத அந்தப் பத்திரிகையாளர் இப்போது இராக்கியர்களின் ஹீரோ. நாங்கள் செய்ய நினைத்ததை அல்லது செய்யத் தவறியதைத்தான் அவர் செய்திருக்கிறார், விடுதலை செய்யுங்கள் என்று அங்கே ஆவேசத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடமும் ரத்த வருடம்தான் இராக்குக்கு. ஜனவரி 1, 2008 அன்று இருபத்தைந்து பேர் பாக்தாத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறார்கள். தற்கொலைப்படைத் தாக்குதல். இதுவரை கொல்லப்பட்ட இராக்கியர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இன்றைய தேதி வரை பயங்கர ஆயுதம் எதுவும் அகப்படவில்லை. ஸோ வாட், திஸ் ஈஸ் இண்டெலிஜண்ஷ் ஃபெயிலியர் என்று தோள்களைக் குலுக்குகிறார் புஷ்.

பிறகு, ஆப்கனிஸ்தான். தாலிபன்களிடம் இருந்து ஆப்கனை மீட்டுவிட்டதாக 2001ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்கா. மிகச் சரியாக, அந்தக் கணத்தில் இருந்துதான் அங்கே தீவிரவாதம் புதிய வீரியத்துடன் வெடிக்க ஆரம்பித்தது. இந்த ஆண்டு தொடங்கி முதல் ஆறு மாதங்களில் மட்டும் மொத்தம் 1853 குண்டுகள் விமானம் வழியாக ஆப்கன் முழுவதும் தூவப்பட்டிருக்கின்றன. ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் 2008 வரை மொத்தம் 1445 ஆப்கன்வாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் மேலும் துருப்புகளை அனுப்பிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும் என்று மேலும் பல ராணுவத்தினரைக் குவிக்கிறது ஆப்கன் அரசு. எங்களையா அழிக்கப் பார்க்கிறீர்கள் என்று பன்மடங்கு தீவிரத்துடன் பாய்ந்து வருகிறார்கள் தாலிபன்கள். ஏராளமான இனக்குழுக்களைக் கொண்ட ஆப்கனிஸ்தானில் ஒவ்வொரு குழுவின் சார்பிலும் பல்வேறு போராளி இயக்கங்கங்கள் பெருகியிருக்கின்றன. மாட்டிக்கொண்டிருப்பவர்கள் மக்கள்தாம். மூன்று முனையில் இருந்தும் ஆபத்து. தாலிபன்களைக் கொல்கிறோம் என்று சொல்லி குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள். சந்தேகப்பட்டு தாக்க வரும் சொந்த தேசத்து ராணுவம். பிறகு, தாலிபன்கள். வேறு வழியே இல்லாமல், துப்பாக்கியுடன் வீதிகளில் இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

போதை மருந்துகள் தவிர வேறு எதுவும் உருப்படியாக அங்கே உற்பத்தியாவது கிடையாது. ஒரு ஆப்கனின் சராசரி ஆயுள்காலம் 43 வயது மட்டுமே. ஐந்து வயதைத் தொடுவதற்குள் ஐந்தில் ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. சுகாதார நிலையங்கள் கிடையாது. அதிபர் ஹமீத் கர்ஸாய் மீது கொலைமுயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தேர்தல் வரவிருக்கிறது. ஹமீதுக்கு அடுத்த முக்கியத் தலைவர் என்று இப்போதைக்கு யாரும் இல்லை.

தேவையில்லாமல் நாங்கள் மாட்டிக்கொண்டு அழிந்துகொண்டிருக்கிறோம் என்று குறைப்பட்டுக்கொள்கிறார் ஹமீத். தாலிபன், அல் காயிதா. இந்த இரு பெரும் தீவிரவாத இயக்கங்கள் செழித்துக்கொண்டிருப்பது பாகிஸ்தானில். ஆப்கனிஸ்தானில் அல்ல. நியாயப்படி பார்த்தால் அமெரிக்கா பாகிஸ்தானின் மீது தன் பார்வையையும் ராணுவத்தையும் திருப்பவேண்டும். அதைவிட்டுவிட்டு எங்கள் எல்லையில் குண்டு வீசுவது தகுமா?

ஒபாமா முன்வைக்கும் தீர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இராக்கில் இருந்து படிப்படியாக ராணுவத்தை விலக்கிக்கொள்வதாக அறிவிக்கிறார். ஆனால், இராக்கைக் காப்பாற்ற ஒரு டீம் அங்கேயே தங்கியிருக்குமாம். தவிரவும், விலக்கிக்கொள்ளப்படும் துருப்புகள் ஆப்கனிஸ்தானில் குவிக்கப்படும் என்று சொல்கிறார். அடுத்த ஆண்டும் இதே போல் ஆப்கனிஸ்தான் மீது குண்டுகள் தூவிக்கொண்டிருந்தால், ஆப்கனிஸ்தான் உலக வரைபடத்தில் தங்கியிருக்காது.

இராக், ஆப்கனிஸ்தானுக்கு அடுத்தபடியாக, அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாடு, பாகிஸ்தான். சென்ற ஆண்டு முடிவில் (டிசம்பர் 27, 2007) பெனாசீர் புட்டோ கொல்லப்பட்டதையடுத்து குழப்பத்துடனும் பீதியுடனும் ஆரம்பித்தது பாகிஸ்தானின் புது வருடம். முஷரஃப் பதவி விலகினார். பெனாசீரின் கணவர் ஆஸிஃப் அலி ஜர்தாரி புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜர்தாரியை, பத்து பர்செண்ட் என்றுதான் அழைப்பார்கள். தொட்டதற்கெல்லாம் கமிஷன் கேட்பாராம். இப்போது அதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஆயிரத்தெட்டு பிரச்னைகள் அங்கே. 2008 செப்டம்பர் 20 அன்று ஹோட்டல் மாரியட் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் முதல் பெரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல். ஆயிரம் கிலோ வெடி மருந்துகளைக் கொண்டு தாக்கினார்கள். அதே ஹோட்டலில் நடத்தப்பட்ட மூன்றாவது அட்டாக் அது.

சமீபத்தில், மும்பை பற்றிஎரிந்தபோதும் சரி, லஷ்கர்தான் காரணம் என்று இந்தியா விரலைக் காட்டியபின்பும் சரி, ஜர்தாரியால் மேலதிகம் எதுவும் செய்ய இயலவில்லை. நாங்களும் உங்களைப் போலவே தாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார். அடுத்து இந்தியாவின் எந்த மூலையில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் இந்தியா படையெடுத்துவரும் என்று ஜர்தாரிக்குத் தெரியும். லஷ்கரை ஒழிக்கிறோம் என்று அமெரிக்கா முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு, பயந்து பயந்து, தயங்கி தயங்கி நடவடிக்கை என்னும் பெயரில் என்னத்தையோ செய்துகொண்டிருக்கிறார்.

நெல்சன் மண்டேலா தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது (ஜுன் 27, 2008) ஒரு விநோதமான பரிசு அவருக்கு வந்து சேர்ந்தது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரவாதிகள் என்னும் பட்டியலில் இருந்து அமெரிக்கா அவர் பெயரையும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பெயரையும் அழித்திருக்கிறது. இத்தனை காலம் உங்கள் பெயரை பட்டியலில் வைத்திருந்ததற்கு வெட்கப்படுகிறோம் என்று அறிவித்தது அமெரிக்கா. 46664. சிறையில் இருந்தபோது மண்டேலாவின் அடையாளம் இந்த எண். இன்று தென் ஆப்பிரிக்காவை உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்னை எய்ட்ஸ். மண்டேலாவின் சிறை எண் 46664 இப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தின் குறியீடாக மாறியிருக்கிறது.

ஆங் சான் சூ கீயும் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். (ஜுன் 19, 2008) ஆனால் பூட்டிய கதவுக்குள். ஹேப்பி பர்த்டே பாடல் இல்லை. ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஒரு ஓரத்தில் எரிந்துகொண்டிருந்தது. மின்சாரம் இல்லை. கடந்து போன நர்கீஸ் சூறாவளியில் வீட்டின் மேற்கூரை காணாமல் போய்விட்டது. சூ கீயை விடுவிக்க மியான்மர் அரசாங்கத்துக்கு இன்னமும் மனம் வரவில்லை.

ஆகஸ்ட் மாதம் பீய்ஜிங்கில் நடந்த கோலாகல ஒலிம்பிக்ஸை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டது திபெத். சீன ஏகாதிபத்தியம் ஒழிக என்னும் பதாகையைத் தாங்கிப் பிடித்தபடி பௌத்த லாமாக்கள் தெருக்களில் இறங்கினார்கள். அமைதிப் போராட்டம் உதவாது என்று முடிவு செய்த திபெத்திய இளைஞர்கள் ஆவேசத்துடன் கோஷம் போட ஆரம்பித்தார்கள். சீனர்கள் எங்கள் இனத்தை அழிக்கிறார்கள். எங்கள் மதத்தை, மொழியை, கலாசாரத்தை, உரிமைகளை நசுக்குகிறார்கள். உலக மக்களே, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளை புறக்கணியுங்கள். சீனாவை கண்டியுங்கள். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள். போராட்டங்கள் அடக்கப்பட்டன. இது அநியாயம் என்று எகிறி குதித்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக சீனாவோடு கைகோர்த்துக்கொண்டன.

இனி என்னால் முடியாது என்று சரண்டர் ஆனார் தலாய் லாமா. திபெத் கோரிக்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. சீன தலைவர் ஹூ ஜிண்டாவ் கம்யூனிஸத்தைச் சுருட்டி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு, கதவுகளை அகலமாகத் திறந்துவிட்டிருக்கிறார். ஆசியாவின் வலிமையான சக்தியாக சீனா இந்த ஆண்டு உருவெடுத்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துவைக்க எகிப்து ஜூன் மாதம் முன் வந்தது. பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2005ம் ஆண்டு அதிகாரபூர்வமாக காஸாவில் இருந்து படைகளை விலக்கிக்கொண்டது இஸ்ரேல். அதாவது பெயரளவுக்கு. ஆனால், அது வெறும் கண்துடைப்புதான் என்கிறது பாலஸ்தீனப் போராளி இயக்கம் (இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் தீவிரவாத இயக்கம்) ஹமாஸ். காஸா முனையில் இஸ்ரேலிய துருப்புகள் நிரம்பியிருக்கின்றன. இங்கள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் அகதிகள் முகாம்களில் வசிக்கிறார்கள். ஐ.நா. சாப்பாடு பொட்டலம் போட்டுக்கொண்டிருக்கிறது.

ரஷ்யாவில், அதிபர் புடினின் பாப்புலாரிட்டி அதிகரித்திருக்கிறது. எண்ணெய் விலை ஏற்றம் ரஷ்யாவை செழிப்படைய செய்திருக்கிறது. இந்த வருடம், ஸ்டாலினின் கல்லறையில் நிறைய மலர் வளையங்கள் வைக்கப்பட்டன. ஆசானே உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிக்கவும் என்று பல கடிதங்கள்.

க்யூபாவில் ரால் காஸ்ட்ரோ அமைதியாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். ஃபிடல் அவ்வப்போது கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். ஒபாமாவை வாழ்த்தினார். கூடவே, கண்டித்தார். இலங்கையில் போர் முடிந்தபாடில்லை. எல்.டி.டி.ஈ.யின் பலம் இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துவிட்டதாக சிங்கள ராணுவம் பெருமிதத்துடன் அறிவித்தது. விடுதலைப் புலிகள் இதை மறுத்துள்ளனர்.

அமெரிக்கா உள்பட, உலகின் பல பகுதிகளில் கம்யூனிச அலை அடித்துக்கொண்டிருக்கிறது. சும்மா சும்மா திட்டவேண்டாம் மார்க்ஸ் பொருளாதாரத்தைப் பற்றி என்னதான் சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியிருக்கின்றன. இந்தியாவில், சத்திய சோதனை அதிக பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

(ஆனந்த விகடனி்ல் வெளிவந்த என் கட்டுரை)

2 comments:

சுல்தான் said...

மிக அருமையாக 2008ஐ அலசி இருக்கின்றீர்கள். நான் படித்த 2008 அலசல்களில் இதுவே சிறந்ததாகத் தெரிகிறது.

Anonymous said...

Excellent review on 2008.


Hariharan
Doha