இருளர்கள் புத்தகத்தை எடிட் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் நான் படித்த புத்தகம், ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய மந்திரமும் சடங்குகளும். (சமபந்தி உணவு முறை பற்றி இவர் எழுதியிருந்த மற்றொரு புத்தகத்தை முன்னர் வாசித்திருக்கிறேன்). புராதனச் சடங்குகள் பற்றியும், மந்திர வைத்தியம் பற்றியும் பண்டைய இனக்குழுக்களின் விசித்திரமான நம்பிக்கை முறைகள் பற்றியும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
சமயம் என்பது என்ன? ஒரு விருப்பத்தை நிறைவேற்ற, வேண்டுதலையும் வழிபாட்டையும் அடிப்டையாகக் கொண்டது சமயம். மந்திரம்? பாவனைச் செயல்களையும் (Mimetic acts) கட்டளையிடுதலையும் அடிப்படையாகக் கொண்டது மந்திரம். மந்திரம் சமயத்துடன் இணையும்போது, சடங்குகள் உருவாகின்றன. இந்தச் சடங்குகளை, மந்திரச் சமயச் சடங்குகள் (Magico-religious rites) என்று மானுடவியலாளர் அழைக்கிறார்கள். புராதனச் சமுதாயத்தில் நிலவிய கூட்டு வாழ்க்கையின் எச்சமாகவும் இந்த மந்திரச் சடங்குகளில் சில அமைந்துள்ளன.
ஆவிகள் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது. குழந்தை தரையில் விழுந்துவிட்டால், இரு இரு இந்தத் தரையை அடித்துவிடுகிறேன் அழாதே என்று சமாதானம் செய்கிறோம் அல்லவா? இந்தப் பழக்கத்தை இனக்குழுக்களிடம் இருந்தே நாம் பெற்றிருக்கிறோம். தரையில் மறைந்திருக்கும் தீய ஆவியே குழந்தையைத் தள்ளிவிட்டிருக்கவேண்டும். தரையை அடிப்பதன் மூலம் தள்ளிவிட்ட ஆவியை துரத்திவிடலாம் என்பது அவர்களது நம்பிக்கை. விரைவாக பாய்ந்து செல்லும் ஆறு அத்தனை அசுத்தங்களையும் அடித்துச்சென்றுவிடுவதைக் கண்ட இனக்குழு மக்கள், இது போன்ற ஆறுகளில் குளித்தால் நாம் செய்த பாவமும் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று நம்பியிருக்கிறார்கள். புனித ஆறு இவ்வாறு தோன்றியது.
இருளர்களுக்கு வருகிறேன். இருளர்களைப் பற்றி நாம் ஏன் வாசிக்கவேண்டும்? ஏனென்றால் இவர்களை அறிந்துகொள்வதன் மூலம் நாம் நம் வேர்களை அறிந்துகொள்கிறோம். நம் வேர்கள் என்றால் மனித குலத்தின் வேர்கள். பழங்குடி இனங்களின் வாழ்க்கை முறையில், நம்பிக்கையில், வழிபாடு முறையில், சடங்குகளில், பல நுட்பமான கூறுகள் ஒளிந்துள்ளன.
நான் மிகவும் ரசித்து எடிட் செய்த நூல் இது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ஒவ்வொரு வரியும் ஒரு புதிய செய்தியைச் சொல்கிறது. விரிவான ஆய்வுகளை உள்ளடக்கிய நூல் என்றாலும், பொதுவான ஆய்வாளர்கள் பயன்படுத்தும் கொட்டாவி மொழி இதில் இல்லை. புத்தகப் பிரதிகளை மட்டும் நம்பியிராமல், இருளர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, பேசி, தகவல்கள் திரட்டி, சரி பார்த்து, ஒப்பிட்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் குணசேகரன்.
ஆஸ்திரேலிய பழங்குடி இனங்கள் பற்றி Bruce Chatwin எழுதிய The Songlines புத்தகம் நினைவுக்கு வருகிறது. Peter Matthiessen எழுதிய Snow Leopard புத்தகமும். இந்தப் புத்தகத்தை என்னிடம் இருந்து வாங்கிச் சென்ற தோழி, இன்னமும் அதைத் திருப்பித் தரவில்லை.
அட, இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. மந்திரமும் சடங்குகளும் புத்தகத்தை குணசேகரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டுமே!
2 comments:
hello marudhan, i am interested to read this book. thanks for introducting a new book. is this book available in book fair? can i meet you there?
dhandapani.r : புத்தகக் கண்காட்சியில் இருளர்கள் நிச்சயம் கிடைக்கும். படித்துவிட்டுச் சொல்லுங்கள். என்னையும் சந்திக்கலாம். அரங்கத்தில் ஒரு வேளை முடியாவிட்டால், அலுவலகத்திலும் சந்திக்கலாம்.
Post a Comment