January 11, 2009

நான் எடிட் செய்த புத்தகம் 3 : ஜார்ஜ் வாஷிங்டன்

பாலு சத்யா எழுதிய ஜார்ஜ் வாஷிங்டன் நூலில் இருந்து சில பகுதிகள்.



ஒன்றுபட்ட அமெரிக்கா. பதிமூன்று மாகாணங்களும் இணைந்த, ஒருமித்த ஒரு தேசம். எவ்வளவு பெரிய கனவு!

வாஷிங்டன் இந்தக் கருத்தை பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த விஷயத்தை அமெரிக்க சுதந்தரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கெல்லாம் கடிதம் மூலமாக அவ்வப்போது தெரிவித்துக்கொண்டும் இருந்தார். அமெரிக்க காங்கிரஸுக்கு நிறைய அதிகாரம் கொடுத்து, ஒன்றுபட்ட ஒரு அமெரிக்காவை உருவாக்குவது அவருடைய பெரிய லட்சியமாக இருந்தது.

பல மாகாணங்கள் இந்தக் கருத்தை ஏற்று, புது அமெரிக்காவை உருவாக முன்வந்தன. அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார்கள். அமெரிக்க காங்கிரஸுக்கு அதிகாரம் கொடுத்து, முறையாகப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தார்கள். ஆனால் பிரச்னைதான் அதிகமானதே தவிர, சரியான தீர்வு கிடைக்கவில்லை.

1783-ல் அமெரிக்கா சுதந்தரம் பெற்றுவிட்டாலும் 1789-ல் தான் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் வேறு யாரும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவில்லையா? இருந்தார்கள். ஆனால், அவர்கள் சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்கள். அதுதான் அமெரிக்கா.

0

ரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நவீன அமெரிக்கா உருவாகக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். புதிய அரசியலமைப்பு சட்டங்களைக் கொண்ட அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக வாஷிங்டன்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.

‘வாஷிங்டன் தான் ஜனாதிபதியாக வேண்டும்’ என்ற குரல் நாடு முழுக்க வலுத்துக்கொண்டே போனது. வாஷிங்டனுடன் போரில் பங்கெடுத்திருந்த கர்னல் லீ விரிவாக வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘எந்தக் காரணத்தைச் சொல்லியும் நீங்கள் ஜனாதிபதியாகிற வாய்ப்பை மறுத்துவிடாதீர்கள். குறிப்பாக, உங்களுடைய தனிப்பட்ட பண்ணை வாழ்க்கைக்காக. நாடு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.’

1789, ஏப்ரல் 14. அமெரிக்க காங்கிரஸ், வாஷிங்டன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான ஆணையை அவருக்கும் அனுப்பியது. அந்த அழைப்பை வாஷிங்டன் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அது அமெரிக்க காங்கிரஸின் அழைப்பல்ல, அமெரிக்க மக்களின் அழைப்பு.

0

தெளிவான, எளிமையான அறிமுகம். பாலு சத்யா முன்னதாக, மார்ட்டின் லூதர் கிங், ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். அமெரிக்க தலைவர்கள் வரிசையில் இது மூன்றாவது நூல்.

No comments: