January 12, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் :5

நடைபாதையில் நின்றுவிட்டேன். இருபது, முப்பது, ஐம்பது, நூறு என்று பிரித்து லேபிள் ஒட்டி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பக்க அளவு என்பதையும் தாண்டி, வேறு ஏதோ இலக்கணம் இதில் இருக்கவேண்டும். ஓரிடத்தில் தமிழ் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. பார்க்க ஆரம்பித்தேன். நிறைய எடுங்க தம்பி, டிஸ்கவுண்ட் தரேன் என்றார் கடைக்காரர். மதுரையில் இருந்து வந்திருக்கிறாராம். கட்டுப்படியாகிறதா என்று கேட்டேன். ஆகிறதாம். தங்கிக்கொள்ள இங்கே தெரிந்தவர் இருக்கிறார். போய், வர பேருந்து கட்டணம். காலையில் வந்துவிடுவேன். வெயில் வந்தால் தலைக்குமேலே பாலிதீன் கூரை. பொழுது சாய்ந்தால், எமர்ஜென்சி விளக்கு. கட்டுப்படியாகாவிட்டால், ராந்தல்.

ஐந்து புத்தகங்கள் எடுத்தேன். மகாத்மா புலே தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (பல்கலைப் பதிப்பகம்), தத்துவம் என்னும் ஆயுதம், அமில்கர் கப்ரால் (விடியல்), ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், ஆனந்த் டெல்டும்ப்டெ, தமிழில்: எஸ்.வி. ராஜதுரை (விடியல்-புத்தா), வால்ட்டர் பெஞ்சமின்: நிலைமறுக்கும் வாழ்வு, மாம்மே ப்ராடர்சன் (விடியல்), ஆணாதிக்கமும் பெண்ணியமும், பி. இரயாகரன் (கீழைக்காற்று). மொத்தமாக 240 என்றார்.

எதை பைரேட் செய்யவேண்டும் என்று யார் முடிவு செய்கிறார்கள்? விலையை யார் நிர்ணயிக்கிறார்கள்? எதன் அடிப்படையில்? மார்ஜின் என்ன? லாபம் எவ்வாறு, யார் யாருக்கெல்லாம் பங்கிடப்படுகிறது? சொல்லி வைத்தது போல் அத்தனை நடைபாதை கடைகளிலும் ஒரே மாதிரியான புத்தகங்கள் கிடைப்பது எப்படி? Orhan Pamuk-க்கு நோபல் கிடைத்த மறுவாரமே அவரது அத்தனை நூல்களும் நடைபாதைக்கு வந்துவிட்டன. இந்திய புத்தகக்கடைகளில் விற்கப்பட்ட ஹாரி பாட்டர்களைவிட நடைபாதைகளில் விற்கப்பட்டவை அதிகம் என்று நம்புகிறேன்.

அஸ்வகோஷ் எழுதிய சொர்க்கம் எங்கே இருக்கிறது? (மங்கை பதிப்பகம்) இருபது ரூபாய்க்குக் கிடைத்தது. இராசேந்திர சோழனின் புனைப்பெயர் அஸ்வகோஷ். மார்க்ஸிய சிந்தனையாளர். இவரது பல புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகள் புத்தகம் பற்றி பேசினார். அலுவலகத்தில் நேரில் வந்து சந்திப்பதாகச் சொன்னார். என்னுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்தேன். சரியாக இருக்கிறதா பாருங்கள் என்று எண்களை மீண்டும் சொன்னார். தமிழில். ஒரு வாக்கியம் அவரிடம் முழுவதுமாகத் தமிழில் பேசமுடியவில்லை. எண்களைத் தமிழில் சொல்வதற்குக்கூட பயிற்சி தேவைப்படுகிறது. அவமானம்.

அரங்கத்தில் கூட்டம் இல்லை. திரை வளாகத்தில் ஒரு தமிழ் குறும்படம் ஓடிக்கொண்டிருந்தது. வந்து பாருங்கள் என்று அழைத்தார் தோழர் நா.வே. அருள். இரண்டு நிமிடங்கள் நின்றபடி பார்த்தேன். தொடக்கத்தில் இருந்து பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டேன்.

புதிய போராளி என்னும் இதழ் கீழைக்காற்றில் கிடைத்தது. மார்க்சிய லெனினிய மாவோவிய அரசியல் ஏடு. நேபாளம், தமிழ் ஈழம், வெனிசுவேலா என்று அட்டையில் எழுதப்பட்டிருந்தது. ஓமனூர் வட்டம், சேலம் மாவட்டத்தில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. நக்ஸல்பாரிகளின் அரசியல் பிரசார இதழ். தொடர்ந்து கிடைத்தால் தொடர்ந்து வாங்குவேன்.

1 comment:

Anonymous said...

Very good analysis and review.