January 20, 2009

க்யூபா 50

ஆரவாரங்கள் தொடங்கும்போதே ஃபிடல் காஸ்ட்ரோ தெளிவாக அறிவித்துவிட்டார். ஜனவரி 1, 1959 அன்று. புரட்சி வெற்றி பெற்றுவிட்டது. கொடுங்கோல் அரசாங்கத்தை நாம் வெற்றிகரமாகத் தூக்கியெறிந்துவிட்டோம். உண்மை. ஆனால், இனி தேனாறும் பாலாறும் இங்கே ஓடப்போகிறது, இனி சிரமம் என்பதே உங்கள் வாழ்வில் இருக்காது என்று என்னால் சொல்லமுடியாது. போராட்டம் இனிதான் தொம்டங்கப்போகிறது. இனி வரும் காலங்களில் அதிக சிரமங்களை நாம் சந்திக்க நேரலாம். முன்னைகாட்டிலும் தீவிரமாகப் போராடவேண்டிவரலாம். க்யூபர்களே, இந்தத் தருணத்தைக் கொண்டாடும் அதே சமயம், மாபெரும் சவால்களை எதிர்கொள்ளவும் தயாராகவே இருங்கள்.

இரு பெரும் சவால்களை க்யூபா எதிர்கொள்ளவேண்டிவந்தது. ஒன்று, க்யூபாவுக்கு உள்ளே இருந்துகொண்டு புரட்சி அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களின் சதிவேலைகள். இரண்டு, அமெரிக்கா. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆபத்தானவை. புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு விழாவை க்யூபர்கள் இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். க்யூபாவின் கடந்த ஐம்பது ஆண்டு கால சரித்திரம் முழுக்க முழுக்கப் போராட்டங்களால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. வெற்றிகளாலும்.

அதிரடியான தொடக்கம் அது. மே 1959-ம் ஆண்டு, அமெரிக்கச் சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்தார் காஸ்ட்ரோ. மிக முக்கியமாக யுனைடெட் ஃப்ரூட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் பிடுங்கப்பட்டன. 'நீங்கள் என்ன விலைகொடுத்து வாங்கினீர்களோ, அதன் அடிப்படையில் உங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க ஏற்பாடு செய்கிறேன்!' என்றார். எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் நிலத்துக்கான அசல் தொகையை செலுத்தி முறைப்படி வாங்கிக்கொண்டதில்லை. எல்லாமே அடிமாட்டு விலையில் ஏமாற்றி வாங்கப்பட்டவை. இந்தத் தொகைக்கு நஷ்டஈடு என்றால் எப்படியிருக்கும்?

நிலம் மட்டுமல்ல. அமெரிக்க எண்ணெய் நிலையங்கள், தொலைபேசி நிறுவனம், வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அமெரிக்கா அலறியது. இதுவரை ஏகபோகமாக அவர்கள் அனுபவித்துவந்த நிலத்தை காஸ்ட்ரோ திடீரென்று பறித்து கொண்டதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதுவரை தன் விருப்பத்துக்கு க்யூபர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியேறின. கிட்டத்தட்ட 850 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன.

'நிலச்சீர்திருத்ததை தொடரவேண்டாம்!' என்று க்யூபாவை எச்சரித்தது அமெரிக்கா. எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னேறிய காஸ்ட்ரோ, ஓரியண்ட் மாகாணத்திலுள்ள 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நாட்டுமையாக்கினார். அமெரிக்கர்கள் நடத்தி வந்த உல்லாச விடுதிகளிலிருந்து பாதி வருமானம் அரசாங்கத்துக்கு வந்து சேரவேண்டும் என்று உத்தரவிட்டார். தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பணம் வசூலித்து வந்த மின்சாரத்துறை சீர்செய்யப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இரண்டு லட்சம் மக்களுக்கு நிலமும் வீடுகளும் கிடைத்தன. நில வாடகை பாதியாகக் குறைக்கப்பட்டது. ஏழை விவசாயிகள் வீடுகள் கட்டிக்கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர்.

க்யூபா சிறிது சிறதாக ஒரு கம்யூனிஸ்ட் நாடாக மாறிவருவதைக் கண்டு திடுக்கிட்டது அமெரிக்கா. க்யூபாவிலிருந்த அமெரிக்க தூதரகம் இழுத்து மூடப்பட்டது. அமெரிக்கத் தூதர் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டார். க்யூபாவுக்கு அமெரிக்கா கொடுத்த முதல் பதிலடி சர்க்கரை இறக்குமதியை நிறுத்திக் கொண்டதுதான். க்யூபாவிலிருந்து யாரும் சர்க்கரை வாங்கக்கூடாது என்ற கண்டிப்பான கட்டுப்பாட்டை அமெரிக்கா விதித்தது. அமெரிக்கா மட்டுமல்ல, பிற நாடுகளும் க்யூபாவிடமிருந்து சர்க்கரை கொள்முதல் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டது.

சர்க்கரையில் தொடங்கிய கட்டுப்பாடு பொருளாதாரத் தடையாக விரிவடைந்தது. க்யூபாவிலோ சர்க்கரை பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அமோக விளைச்சல். நிலம் கிடைத்த மகிழ்ச்சியில் விவசாயிகள் அனைவரும் கரும்பு விளைச்சலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அமெரிக்காவின் இந்த திடீர் சர்க்கரை கட்டுப்பாடு அவர்களை முடக்கியது. கிட்டத்தட்ட 7 லட்சம் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்படாமல் குன்றுபோல் குவிந்துக்கிடந்தது.

க்யூபாவின் இறக்குமதி முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலிருந்து ஒரு குண்டூசியைக் கூட க்யூபாவுக்கு கொண்டுபோகமுடியாது. க்யூபாவிலிருந்து ஒரு குண்டூசியைக்கூட அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யமுடியாது. இதனால் க்யூபா சந்தித்த இன்னல்கள் என்னென்ன? அன்றாட தேவைக்கான எண்ணெய் கிடைக்கவில்லை. உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த பஸ்கள் நின்றுவிட்டன. வயலில் டிராக்டர்கள் ஓடவில்லை. குழந்தைகளுக்குப் பால் இல்லை.

ஆனால், எழுத்தறிவு இயக்கம் தீயாகப் பற்றிக்கொண்டது. சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும் வகுப்பறைக்குப் படையெடுத்தனர். கடப்பாறையை வாசலுக்கு வெளியே படுக்க வைத்துவிட்டு ஓர் விவசாயி வகுப்பறைக்குள் நுழைவார். பைனாப்பிள் மரம் அறுப்பவர் கத்தியை மூடி வைத்துவிட்டு புத்தகத்தை திறந்துவைத்துக்கொள்வார். பற்களை தொலைத்த மூதாட்டிகளும் அமர்ந்திருப்பார்கள். இந்த வயதில் இதெல்லாம் எதற்கு என்று தயங்கியதில்லை. கற்பிப்பதற்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முன் வந்தனர். பிள்ளைகள் பெற்றோருக்குப் பாடம் எடுத்தனர்.

பாடிஸ்டா அரசில் க்யூபாவின் எழுத்தறிவு 23.6 சதவிகிதம். பள்ளிகள் கவனிப்பாரற்று கிடந்தன. மாணவர்கள் ஒழுங்காகப் படிக்கிறார்களா என்ற அக்கறை ஆசிரியர்களுக்கு கிடையாது. ஆசிரியர்கள் ஒழுங்காகப் பாடம் நடத்துகிறாரார்களா என்று தெரிந்து கொள்ளும் விருப்பம் அரசாங்கத்திடம் இல்லை.

புரட்சிக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஒரே ஆண்டு. எழுதப்படிக்கத் தெரியாதவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 9-ம் வகுப்பு படித்த மாணவர்களின் விழுக்காடு 98.2 சதவிகிதத்தை எட்டிப்பிடித்தது. 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். உலகிலேயே வேறெந்த நாட்டிலும் இத்தகைய விகிதாச்சாரத்தைக் காணமுடியாது. அனைத்து மட்டங்களிலும் கல்வி இலவசம். யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற அமைப்புகள் கல்வியில் க்யூபாவை முன்னுதாரணமாக நிறுத்தி உலகுக்கு பாடம் எடுத்தன. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோது கூட மாணவர்களிடமிருந்து ஒரு பிசோவைக் கூட காஸ்ட்ரோ அரசு கட்டணமாக வசூலிக்கவில்லை.

கல்விப் புரட்சி நடந்து கொண்டிருந்த அதே சமயம் மருத்துவப் புரட்சியும் தொடங்கிவிட்டது. காளான்கள் போல மருத்துவமனைகள் முளைத்தன. குழந்தை ஒரு தாயின் வயிற்றில் உருவாகும்போதே அதன் உடல்நலனை காக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அடிப்படை மருந்துகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் மருத்துவத்துறை நான்குகால் பாய்ச்சலில் முன்னேறியது. புரட்சிக்கு முன்னர் க்யூபர்களின் சராசரி ஆயுட்காலம் 55 ஆண்டுகள். இது பின்னர் 75 ஆண்டுகளாக உயர்ந்தது.

மருந்துகள் கிடைக்காதபோது க்யூபர்கள் துவண்டுவிடவில்லை. 'நமக்குத் தேவையான மருந்துகளை நாமே உருவாக்குவோம்!' என்றார் காஸ்ட்ரோ. புதிய நோய்களைத் தடுக்க புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை காஸ்ட்ரோ, கண்களில் விழுந்த தூசி. தூசியை அகற்றினால்தான் நிம்மதியாக இருக்கமுடியும். அதற்காக எதை வேண்டுமனாலும் செய்யத் தயாராகவே இருந்தது அமெரிக்கா. பிள்ளைப் பேறில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு 2.2 பேர். பத்தாயிரத்தில் 7.2 குழந்தைகள் பிறக்கும்போது இறக்கின்றன. உலகிலேயே குறைந்த அளவு இதுதான். உலகில் எங்கெல்லாம் இயற்கைச் சீற்றங்களும், போர்களும் பேரழிவுகளும் நேர்கின்றனவோ, அங்கெல்லாம் க்யூப மருத்துவர்களும், ஆசிரியர்களும் பணி செய்கிறார்கள். க்யூப அரசு தொழில் நுட்ப ஆதரவு அளிக்கிறது.

புதுவகைப் பயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அபாரமான தேர்ச்சியை சந்தித்திருக்கிறார்கள். திசு வளர்ப்பு மூலம் புதிய விதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரசாயன பூச்சிக்கொல்லிகளை ஒதுக்கிவைத்துவிட்டு இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தத் தொடங்கினர்.

எது தேவையோ அதை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார்கள், வெற்றிபெற்றார்கள். எது அத்தியாவசியமோ அது குறித்து மட்டுமே ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன, நடத்தப்படுகின்றன. அமெரிக்காவையும் ரஷ்யாவையும் பார்த்து விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்வதில்லை. விமானங்களையோ, கணிப்பொறிகளையோ உருவாக்க அமெரிக்காவோடு போட்டி போடுவதில்லை. ஜப்பானோடு போட்டி போட்டுக்கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளையும் கார்களையும் உருவாக்க முயன்றதில்லை.

என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்னும் தெளிவான இலக்குடன் முன்னேறிக்கொண்டிருக்கிறது க்யூபா. போராட்டம் முடியவில்லை. சவால்கள் ஓயவில்லை.

(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

4 comments:

ஆதித்தன் said...

அருமையான கட்டுரை! மக்கள் பட்டினியால் தவித்துக்கொண்டிருக்கும் போது, நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது, கல்வியறிவின்மையால் ஒளியிழந்து கொண்டிருக்கும் போது, விண்வெளியை ஆராய்வதற்காக கோடிகளை அள்ளி இறைக்கும் அரசாங்கங்கள் கியூபாவை பார்த்து தலை குனிய வேண்டும்.

வஜ்ரா said...

க்யூபாவின் 50 ஆண்டுகால புரட்சியைப் பாராட்டி சீராட்டி பல நல்லவிஷயங்களைக் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடிப்பிடித்துப் போட்டுள்ளீர்கள். அதே போல் க்யூபாவில் எங்கும் வியாபித்திருக்கும் பல தீமைகளை, முக்கியமாக 50 ஆண்டுகால சர்வாதிகார கம்யூனிஸ்டு ஆட்சியால் விழைந்த தீமைகளைப் பற்றி எழுதுவீர்களா ?

இந்திய அரசு ராக்கெட் விடுவது பற்றி இந்தியாவில் இருந்து கொண்டு உங்கள் கருத்தை தைரியமாகச் சொல்லும் நீங்கள், க்யூபாவில் க்யூபா அரசு செய்யும் தவறை அந்த நாட்டிலேயே அமர்ந்து கொண்டு, தைரியமாக ஒரு க்யூபா நாட்டு tabloid பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதி வெளியிட முடியுமா ?

Boston Bala said...

என்னுடைய முந்தைய பதிவு: காஸ்ட்ரோ கவுண்ட்-அப் « Snap Judgment

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்