January 9, 2009

நான் வாங்கிய புத்தகங்கள்

கடந்த இரு தினங்களில், சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.

1) முதலாளியமும் அதன் பிறகும். ஜார்ஜ் தாம்ஸன் எழுதியது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.வி. ராஜதுரை. விடியல் வெளியீடு. ராஜதுரை மொழிபெயர்த்த தாம்ஸனின் மற்றொரு புத்தகத்தை (மார்க்ஸ் முதல் மா சே துங் வரை) சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பாதி படித்திருக்கிறேன். மார்க்ஸியத்தின் அடிப்படைகளை விளக்கும் ஜார்ஜ் தாம்ஸனின் முக்கிய நூல்கள் இவை. இந்த வரிசையில் இன்னொரு புத்தகமும் உண்டு. மனித சாரம். இது இன்னும் என் கண்ணில் படவில்லை.

2) விஞ்ஞான லோகாயதவாதம். ராகுல் சாங்கிருத்யாயன் எழுதியது. ராகுல்ஜியின் பெரும்பாலான நூல்கள் நியூ செஞ்சுரியில் கிடைக்கின்றன. அவசியம் வாசிக்கவேண்டிய இவரது தத்துவ நூல்கள் : இந்துத் தத்துவ இயல், பௌத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல் மற்றும் ஐரோப்பியத் தத்துவ இயல். வோல்கா முதல் கங்கை வரை புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படிக்கப்போகிறேன்.

3) மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள். நீண்ட காலமாகச் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முறை, முதல் தொகுதி கிடைத்தது. இன்னமும் கிடைக்காதவை, தொகுதி 8 மற்று்ம் 11. இரண்டுமே அச்சில் இல்லை. லெனின் நூல் திரட்டு 3,4 கிடைத்தது. கிடைக்காதவை 5 மற்றும் 6.

4) About Lenin by Progress Publishers. பழைய நூல். அளவில் பெரியது. 275 பக்கங்கள். விலை ரூ. 25. சோவியத் இலக்கியங்களில் லெனின் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள உதவும் நூல். இத்துடன் சேர்த்து, அநேகமாக, முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா வெளியீடு வெளியிட்ட அத்தனை ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களையும் வாங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

5) சில பிரசுரங்கள் மற்றும் குறுநூல்கள். கீழைக்காற்றில் இருந்து : 1) காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? 2) வரலாறு திரும்பினால் ஓலமா? டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மாணவர் மோதல் குறித்து ஓர் எதிர்வினை 3) யாருக்கு இந்த ஆயுதம்? அரிமாவளவன். செஞ்சோலைத் தாக்குதல் பற்றிய வெளியீடு 4) தமிழீழம் இறையாண்மை இந்தியப் புரட்டு. ஞாலன் சுப்பிரமணியன் என்பவர் எழுதியது. சென்னை புக்ஸ் வெளியீட்டில் சோசலிஸமும் முதலாளித்துவமும். எழுதியிருப்பவர் பி.ஆர். பரமேஸ்வரன். பழைய பிரதி.

6) சென்னை பல்கலைக்கழகம் அரங்கில் இருந்து இரண்டு நூல்கள். 1) Religious Pluralism and the World Religions by Harold G. Coward 2) Studies in Social Philosophy by Dr. S. Gopalan. பலமாகப் புரட்டினால் உதிர்ந்துவிடும் நிலையில் இருக்கின்றன இரண்டும். சென்ற வருடம் வாங்கிய ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம், பக்கம் பக்கமாக, பொடிப்பொடியாக உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கிறது.

3 comments:

Karthikeyan G said...

Thanx for introducing good books..

// மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள். //
bought 2-8 last time..The translation looks good for this series of books.

மருதன் said...

உண்மை கார்த்திகேயன். அநேக ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்கள் படிக்கக் கடினமாகவே உள்ளன. நல்ல வேளையாக, மூல நூல்களுக்கு அந்தக் கதி ஏற்படவில்லை. சிக்கல் மொழியில் இல்லை என்றாலும் கருத்துகளை கிரகித்துக்கொள்வதற்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது.

ஹரன்பிரசன்னா said...

ஏன் ஒரு நல்ல புத்தகம் கூட வாங்கவில்லை தோழர்?