January 9, 2009

இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு

இதுதான் புத்தகத்தின் தலைப்பு. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த வருடம் நான் எழுதிய புத்தகம்.



இந்தப் புத்தகம் உருவான விதம் குறித்து தனி பதிவு ஒன்று எழுத திட்டம். இப்போதைக்கு, புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி.

பிரிவினை நடந்து அறுபது ஆண்டுகள் கழிந்ததையடுத்து பிபிசி சிலரைப் பேட்டியெடுத்தது.

நார்விச்சில் குடியேறியிருக்கும் ரவி ஷர்மாவின் அனுபவம் இது. எனக்கு அப்போது ஏழு வயது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் லாகூரைவிட்டு கிளம்ப மனமே இல்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அம்மா நினைத்திருந்தார். பிறகு, அவருக்குத் தெரிந்த இரண்டு பேர் (இந்துக்கள்) சில முஸ்லீம்களால் கொல்லப்பட்ட செய்தி கிடைத்திருக்கிறது. அவர்கள் யாரிடம் வேலை பார்த்தார்களோ அவர்களாலேயே கொல்லப்பட்டிருந்தார்கள். அப்போது முடிவெடுத்திருக்கிறார்கள். சரி இதுதான் கடைசி சமிக்ஞை, கிளம்பிவிடலாம். டில்லிக்குக் கிளம்பிவிட்டோம். அமைதியாக டெல்லியை வந்தடைந்த இறுதி ரயில் எங்களுடையதுதான். எங்களுக்குப் பிறகு கிளம்பியவர்களில் பலரும் பாதி வழியிலேயே கொல்லப்பட்டு விட்டார்களாம்.

இன்னும் சிலரின் ஏக்கங்கள் இவை.

’இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது போரிட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால், இரு தேசங்களும் இன்னமும் வளமாக இருந்திருக்கும்.’

’மதம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், இரு தேசங்களும் பிரிந்திருக்காது. ’

’பிரிவினை நடக்காமலே இருந்திருக்கக்கூடாதா என்று தினம் தினம் வருந்திக்கொண்டிருக்கிறேன். இந்த இரு தேசங்களிடம் இருந்தும் உலகம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். இதுபோல் இனியொரு முறை நடக்கக்கூடாது.’

0

பெண்கள் சிலரைச் சந்தித்திருக்கிறார்கள். சுதந்தரம் கிடைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மூதாட்டி ஒருவர் நடுங்கும் விரல்களால் தன் மார்பைத் திறந்து காட்டியிருக்கிறார். இரு குழிகள் இருந்தன அங்கே.

உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டபோது சில பெண்கள் விழித்திருக்கிறார்கள்.

என்ன அனுபவம்? எதைச் சொல்ல? அழுகை வெடித்துகிளம்புகிறது. மீண்டும் மீண்டும் எங்களைத் துன்பப்படுத்தாதீர்கள். தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள். எங்கள் கதைகளை யாரும் கேட்கவேண்டாம். யாரும் படிக்கவேண்டாம்.

2 comments:

Anonymous said...

Good intro. Look fwd to readng the buk

Anonymous said...

உடனே வாங்கி படிக்கவேண்டும் என்னும் ஆவலை தூண்டுகிறது. வாழ்ததுகள் தோழர். நிறைய எழுதுங்கள்.