February 23, 2009

அல்ஜீரியா தொடர்கிறது


முதல் பகுதி இங்கே.

அல்ஜீரியப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அது பற்றி எழுதியும் பேசியும் வந்த இரு பெரும் ஃபிரெஞ்சு எழுத்தாளர்கள், அல்பேர்ட் காம்யு மற்றும் ழான் பால் சார்த்தர்.

முதலில், அல்பேர்ட் காம்யு (Albert Camus). இவர் அல்ஜீரியாவில் பிறந்தவர். தத்துவம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்தியவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட்கையை மிகச் சாதுரியமாக ஒதுக்கித்தள்ளுகிறார் காம்யு. ஃபிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் எஃப்.எல்.என். இயக்கத்தை அறிவுஜீவிகள் யாரும் ஆதரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

காம்யு முன்வைக்கும் தீர்வு இதுவே. ஃபிரெஞ்சு மக்களோடு அல்ஜீரிய முஸ்லீம்கள் கைகோர்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுடன் ஒத்துப்போகவேண்டும். அதைவிட்டுவிட்டு கொடிபிடித்து போராடுவதும் கோஷம் போடுவதும் பயன் தராது. அல்ஜீரியா விடுதலைப் பெறவேண்டும் என்னும் கோஷம் உணர்ச்சிமயமானது. யதார்த்தமானது அல்ல. ஃபிரெஞ்சு ராணுவத்தின் சித்திரவதைகளை சிறிது காலம் கண்டித்துப்பேசிய காம்யு தன் இறுதி காலத்தில் அதையும்கூட நிறுத்திக்கொண்டார்.

ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre) 1929 முதல் 1931 வரை ஃபிரெஞ்சு ராணுவத்தில் கட்டாயப் பணியாற்றியவர். அரசியல் போக்குகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த சார்த்தர், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்படுகிறார். போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு வெளிப்படையாக ஆதரிக்கவும் செய்கிறார். எரிச்சலைடந்த ஃபிரெஞ்சுக்காரர்கள் சிலர் அவர் வீட்டு வாசலில் வெடிகுண்டு வைக்கிறார்கள். சார்த்தரின் சீற்றம் அதிகரிக்கிறது. ஒடுக்குமுறையை கையாளும் ஐரோப்பியரைக் கொன்றால் தவறே இல்லை என்று ஒரு புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார். தன் இறுதி காலம் வரை பல்வேறு அரசியல் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. சார்த்தர் மறுத்துவிட்டார்.

ஒரே காலகட்டம். ஒரே போர். காம்யு பிரான்ஸை ஆதரித்திருக்கிறார். சார்த்தர், அல்ஜீரியாவை. காலனியாதிக்கத்தைக் கொண்டாடும், நியாயப்படுத்தும் வழக்கம் பல முக்கிய எழுத்தாளர்களுக்கு இருந்திருக்கிறது. Evelyn Waugh எழுதிய Waugh in Abyssinia சட்டென்று நினைவுக்கு வருகிறது. இத்தாலியர்களின் ஆக்கிரமிப்பு அபிசீனியாவுக்குத் தேவை என்று காலனியாதிக்கத்தை வரவேற்று எழுதியிருப்பார் ஆசிரியர். இந்தப் புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

1) The Torture of Algiers, Adam Shatz
2) My Encounter with Sartre by Edward Said

1 comment:

Ashok said...

மிக நன்றாக அறிமுகம் செய்திரு்க்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஆப்பிரிக்கா சின்னாபின்னமான கதை அனைவருக்கும் தெரியவேண்டும். ஆப்பிரிக்கா இருண்டு போனது யாரால் என்பதை அனைவருக்கும் அம்பலப்படுத்தவேண்டும்.