February 25, 2009

அமெரிக்காவின் அடுத்த போர்


தொட்டில் பழக்கம். மீண்டும் போரைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இராக்குக்குப் பிறகும். பொருளாதாரச் சீரழிவுக்குப் பிறகும். இரு எதிரிகள். அல் காயிதா மற்றும் தாலிபன். இரு தேசங்கள். பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான். ஒரே கல்லில் அடித்து வீழ்த்திவிடலாம் என்கிறார்கள் ராணுவ ஆலோசகர்கள். தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போர். புஷ் சென்ற அதே திசை. புஷ் கையாண்ட அதே கொள்கை. புஷ் காட்டிய அதே தீவிரம்.

இப்போது தொடங்கினால் சரியாக இருக்கும். இதைவிட்டால் இன்னொரு சந்தர்பம் அமையாது. அடித்து ஆடுவோம். ஜெயித்துவிடலாம். பராக் ஒபாவுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அபாயம், ஆபத்து, எச்சரிக்கை என்று சிவப்பு மையில் கொட்டைக் கொட்டையாக எழுதி பக்கம் பக்கமாக ரிப்போர்ட்டுகளை அள்ளி கொண்டு வந்து அவர் மேஜையில் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். மிஸ்டர் பிரஸிடெண்ட், இன்னொரு போரா என்று மிரள வேண்டாம். அநாவசிய தயக்கம் வேண்டாம். மக்கள் ஒருபோதும் போரை வெறுப்பதில்லை. தோல்வியைத்தான் வெறுக்கிறார்கள். நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர். ஆல் தி பெஸ்ட்.

அல் காயிதா வறண்டுவிட்டது, அவர்களால் பெரும் திட்டங்களை இனி தீட்டமுடியாது என்று சற்று முன்னால்தான் அறிவித்திருந்தார் ஒபாமா. தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டார். காரணம், ஒபாமா எதிர்பார்த்ததைப் போல் அல்லாமல் அல் காயிதா விழித்துக்கொண்டுவிட்டது. பாகிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் இருந்து அதற்கான சமிக்ஞைகள் கிடைத்துவிட்டன. ஏற்கெனவே தாலிபன்கள் பரவியிருக்கும் பிரதேசம். இரு அபாயங்கள் ஒரே இடத்தில் கைகோர்த்துக்கொள்வது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. உலகத்துக்கும். இதைத் தடுக்கவேண்டும். ஆப்கனிஸ்தான் மீது கவனம் செலுத்தினால் போதும் என்று நினைத்திருந்தோம். பாகிஸ்தானும் சேர்ந்துவிட்டது. இது எதிர்பாராத திருப்பம்.

அல் காயிதா அலுவலகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட வீடியோ மிரட்டல் அமெரிக்காவை நிமிர்த்தி உட்கார வைத்திருக்கிறது. இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டேப்பில் பேசியிருப்பவர் அல் ஜவஹிரிக்கு அடுத்த நிலையில் இருக்கும் முஸ்தபா அபு யாசித். பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்தை இந்தியா விட்டொழிக்கவேண்டும். பாகிஸ்தான் மீது குண்டு அல்ல குண்டின் நிழல் விழுந்தாலும் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஜர்தாரி ஒழிக்கப்படவேண்டியவர் என்பதில் சந்தேகம் இல்லை. பாகிஸ்தான் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை ஆட்சியில் இருந்து தூக்கியெறியவேண்டியது அவசியம். அது தனி கதை. இந்தியா இதில் தலையிடக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.

இந்தியாவை எச்சரித்ததற்கு அமெரிக்கா ஏன் எரிச்சல் கொள்ளவேண்டும்? காரணம் இந்த முஸ்தபா அபு யாசித் அல் காயிதாவின் ஆப்கன் பிரிவுத் தலைவர். இவர் பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறார் என்றால் அவர் படைப்பிரிவும் அங்கேதான் இருக்கிறது என்று பொருள். ஆப்கனிஸ்தானைத் தாலிபன்களிடமும் பாகிஸ்தானை அல் காயிதாவிடமும் பிய்த்துக்கொடுத்துவிட்டால் அமெரிக்காவின் கதி என்னவாகும்? இரு குழுக்களுக்குமே அமெரிக்கா எதிரி என்னும்போது, எப்படி இதை அனுமதிப்பது? இன்னொரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் அமெரிக்கா இல்லை. ஒபாமாவின் ஆலோசகர்கள் பதற்றம் கொள்வதற்கு இதுவே காரணம்.

முறைப்படி போரைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு சர்வே செய்துபார்த்துவிட முடிவெடுத்திருக்கிறது அமெரிக்கா. இப்போதைய திட்டம் இதுதான். அமெரிக்காவின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிச்சர்ட் ஹால்புரூக் ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் இரு தேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆராயவேண்டும். வரும் வழியில், இந்தியாவுக்கு ஒரு பயணம். அவர்கள் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இது நடந்துவிட்டால், தெளிவான ஒரு சித்திரம் கிடைத்துவிடும். நல்ல நாளாகப் பார்த்து ஆள்களைக் கொண்டுபோய் இறக்கி வேலையை ஆரம்பித்துவிடவேண்டியதுதான்.

பிரிட்டனும் தன் பங்குக்கு ஒரு தூதரை தயார் செய்துவிட்டது. ஷெரார்ட் கூப்பர் கோல்ஸ். ஆப்கனிஸ்தானுக்கான தூதர். அமெரிக்கத் தூதரோடு இவர் இணைந்து செயல்படுவார். பொருளாதார வீழ்ச்சியில் கூடியவிரைவில் அமெரிக்காவைத் தொட்டிவிடும் நிலையில் இருக்கிறது பிரிட்டன். ஏற்கெனவே நொடித்துப் போயிருக்கிறோம் ஐயா, தயவு செய்து எங்கள் மீது குண்டு போடாதீர்கள் என்று பொதுக்கோரிக்கை வைக்கலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சென்ற வாரம் வரை 1.97 மில்லியன். இன்னும் மூன்று மாதங்களில் 2 மில்லியன் ஆகிவிடும். ஆனாலும் போர் என்று வந்துவிட்டால் அமெரிக்காவுக்குத் தோள் கொடுத்தாகவேண்டும். அமெரிக்காவின் எதிரி பிரிட்டனின் எதிரியும்தானே?

கிட்டத்தட்ட கூட்டணி தயார். அமெரிக்கா, பிரிட்டன். ஆதரவுக்கு இந்தியா. போருக்கான அவசியத்தையும் பாகிஸ்தானிடம் எடுத்துச் சொல்லியாகிவிட்டது. வேறு வழி தெரியவில்லை நண்பரே. நாங்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் மக்களும்கூட இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். தலைக்கு மேலே போய்விட்டது. அல் காயிதாவையும் தாலிபன்களையும் உங்களால் சமாளிக்கமுடியாது. சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும், அனுதாபமும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. தயாராக இருங்கள். எந்நேரமும் ஆரம்பிக்கலாம்.

பாகிஸ்தானில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துவிட்டது. எல்லைப்பிரதேசத்தைத் தாக்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவும் நேடோவும் வாரம் இருமுறை குண்டு தூவிக்கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள் அல்ல, ஆப்கன் பழங்குடிகள்தான் பெருமளவில் இறந்துகொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானியர்களும். ஆப்கனில் தொடர்ந்துகொண்டிருக்கும் யுத்தமே பாகிஸ்தானை அலைகழித்துக்கொண்டிருக்கிறது எனும்போது பாகிஸ்தானை நேரடியாகத் தாக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும்? ஆப்கனிஸ்தான் மக்களுக்கும் இதே கவலைதான். தற்சமயம் 32,000 வீரர்கள் ஆப்கன் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கூடுதலாக 30,000 பேரை அனுப்பப்போவதாகச் சொல்லியிருக்கிறார் ஒபாமா. ராணுவத்தில் பலம் இரட்டிப்பாகும்போது இழப்பின் பலமும் இரட்டிப்பாகப்போகிறது. என்ன செய்வது?

போர் நிச்சயம் என்று அமெரிக்கா முடிவெடுத்துவிட்டால், ஐந்து விளைவுகளை உலகம் எதிர்பார்க்கலாம். முதல் அடி அமெரிக்காவுக்கு. தேசத்தைத் தூக்கி நிறுத்தும் பணி தொய்வடையும். அமெரிக்கர்களின் பணமும் பொருளும் கவனமும் உழைப்பும் மற்றுமொரு வேரழிவுக்குச் செலவிடப்படும். ஏற்கெனவே பள்ளத்தில் இருக்கும் அமெரிக்கா பாதாளத்துக்குப் பாயும்.

ஆப்கனிஸ்தான் நாசமாகும். தாலிபன்கள் ஒரு பக்கமும் அமெரிக்கர்கள் இன்னொரு பக்கமும் மாறி மாறி ஆப்கனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். முழுநீளப் போர் ஆரம்பமானால், சருகுகள்கூட மிஞ்சியிருக்காது. மூன்றாவது விளைவு பாகிஸ்தானின் அழிவு. போராட்டங்களும் கிளர்ச்சிகளும் இப்போதே தொடங்கிவிட்டன. இராக்கில் இருந்து வெளியேறப்போகிறோம் என்னும் ஒபாமாவின் அறிவிப்பால் கிடைத்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரும் அழிந்துபோகும். ஒபாமா மட்டுமல்ல யார் வந்தாலும் அமெரிக்காவுக்கு மாற்றம் சாத்தியமல்ல என்பது நிரூபணமாகும்.

தீவிரவாதம் இன்னும் அதிகமாகும். சுண்டைக்காய் தேசமான இராக்கில் மாட்டிக்கொண்டு இன்று வரை அமெரிக்கா விழிபிதுங்கிக்கொண்டிருப்பது ஏன்? அமெரிக்காவைவிட இராக்கின் படைபலம் பெரிதா? ஆப்கனிஸ்தான்? கஞ்சா செடிகளும் குகைகளும் கொண்ட ஒரு பாழடைந்த தேசத்தை இன்றுவரை அமெரிக்காவால் வெல்லமுடியாமல் இருப்பது ஏன்? காரணம், அமெரிக்காவுடன் மோதிக்கொண்டிருப்பது இராக் ராணுவமும் ஆப்கன் ராணுவமும் அல்ல. இராக்கியர்களும் ஆப்கனிஸ்தான் மக்களும்தான். ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்வது சுலபம். மக்களை வெல்வது கடினம்.

அந்த வகையில், ஆப்கனிஸ்தானையோ பாகிஸ்தானையோ அமெரிக்காவால் எதிர்கொள்ளமுடியாது. மாறாக, தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் அப்பகுதி மக்கள் மூலமாகக் கிடைத்துவரும் ஆதரவு மேலும் பலமடையும். அமெரிக்கத் தீவிரவாதத்தோடு ஒப்பிடும்போது உள்ளூர் தாதாக்கள் எவ்வளவோ மேல். இதைத் தவிர்க்கமுடியாது. அறுபதாயிரம் அல்ல ஆறு லட்சம் பேர் வந்தாலும் ஆப்கனையும் பாகிஸ்தானையும் வெல்ல முடியாது.

கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அமெரிக்கா அலறுவது போல் உண்மையில் ஆப்கன் பாக் எல்லை அத்தனை பயங்கரமானதா? இங்கிருந்துகொண்டுதான் அல் காயிதா பயிற்சி எடுத்துக்கொள்கிறதா? இங்கிருந்துகொண்டுதான் திட்டமிடுகிறதா? தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இந்தப் பிரதேசம் மட்டும்தானா? நினைவிருக்கட்டும். செப்டம்பர் 11 தாக்குதல் திட்டம் பெருமளவில் உருவானது பாகிஸ்தானிலோ, ஆப்கனிஸ்தானிலோ அல்ல. ஜெர்மனியில். ஃப்ளோரிடாவில். போரைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னால், இல்லாத இடத்தில் எதையோ தேடி எதையெதையோ பெற்றுக்கொண்ட புஷ்ஷின் கதையை ஒபாமா ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

4 comments:

சரவணகுமரன் said...

கொடுமைங்க...

நன்றாக அலசி உள்ளீர்கள்...

Anonymous said...

I think they won't wage war now. They have lot to worry about. Also if they wage war, they are not going to sell anything like, arms etc. So, I think they will wait until this year end at least.

Kalaiyarasan said...

ஒபாமா நிர்வாகம் இரண்டாவது ஆப்கான் போரை தொடங்குவதற்கு வழக்கம் போல தாலிபானோ, அல்கைதாவோ காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெற்காசிய பிராந்தியத்தை அவர்கள் விருப்பம் போல மறுசீரமைப்பது ஒரு நோக்கமாக இருக்கலாம். ஒபாமா காஷ்மீர் தீர்ப்பது பற்றி கூறியதையும் கவனத்திற்கு எடுக்க வேண்டும். போர் ஆரம்பித்தால் அதனால் பாகிஸ்தான் மட்டுமல்ல, இந்தியாவும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

மருதன் said...

// தெற்காசிய பிராந்தியத்தை அவர்கள் விருப்பம் போல மறுசீரமைப்பது ஒரு நோக்கமாக இருக்கலாம். //

நோக்கம் இதுதான் கலையரசன். ஆனால், அல் காயிதாவுக்கு எதிரான போ்ர், தாலிபன்களுக்கு எதிரான போர் என்னும் போர்வையில் இந்தப் போரை அமெரிக்கா தொடங்கக்கூடும். வழக்கம் போல!