March 2, 2009

புதிய பகுதி : அரசியலின் கதை : ஒன்று

தலைப்பை முடிவு செய்துவிட்டேன். பொருளடக்கமும் கிட்டத்தட்ட தயார். கிரேக்கம், ரோம சாம்ராஜ்ஜியம், தாமஸ் ஹோப்ஸ், ரூஸோ, வால்டேர், ஃபிரெஞ்சுப் புரட்சி, காரல் மார்க்ஸ், சோவியத் யூனியன், லெனின், மாவோ, என்று ஆரம்பித்து அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை நிகழ்த்திய வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சித்தாந்தங்கள். ஜனநாயகம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? கம்யூனிஸம்? சர்வாதிகாரம்? ஃபாசிஸம்? வடிவம் கிடைத்தது.வேகமாக எழுதவும் ஆரம்பித்துவிட்டேன்.

தொடரை வெளியிட அம்ருதா ஒப்புக்கொண்டது. மாத இதழ். மாதம் ஒர் அத்தியாயம் எழுதினால் போதும். முடித்துவிடலாம் என்னும் நம்பிக்கையுடன் முதல் அத்தியாயத்தை அனுப்பினேன். இரண்டு, மூன்று, நான்கு. பிரச்னை எதுவும் இல்லை. அம்ருதா சிவப்பு நிறத்துக்கு மாறிவருகிறது, அபாயம் என்று சிலர் கடிதம் எழுதினார்கள். இந்திய தத்துவ மரபை ஏன் கொண்டுவரவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதினால் ஓர் அறிமுக ஆவணமாக உருவாகும் என்று சிலர் நம்பிக்கை அளித்தனர். ஐந்தாவது அத்தியாயத்தை எழுதி முடிப்பதில் காலதாமதம் ஆகிவிட்டது. அனுப்பவேண்டிய தினம் கடந்து, ஒரு வாரம் கழித்தே அனுப்பினேன். எப்படியோ இதழில் கொண்டுவந்துவிட்டார்கள்.

இனி தாமதம் கூடாது. ஆறாவது அத்தியாயத்துக்கான குறிப்புகளை உடனுக்குடன் எடுத்து வைத்தேன். எழுதவும் ஆரம்பித்தேன். இன்று, நாளை, மறுநாள் என்று ஒரு மாதம் இழுத்துவிட்டது. சரி, அடுத்த மாதம் இரண்டு அத்தியாயங்கள் எழுதி முன்கூட்டியே அனுப்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த மாதமும் முடியவில்லை. இரு புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். தாமஸ் ஹோப்ஸின் Leviathan. ரூஸோவின் Confessions. இடையில், நான் எழுதிய மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு கிழக்கில் வெளிவந்தது. திருமணம் செய்துகொண்டேன். ஏழாவது அத்தியாயம் மட்டும் உருபெறவில்லை.

இதுவரை எழுதிய பாகங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். மீண்டும் தொடங்கவேண்டும். தொடங்குவேன்.


அரசியலின் கதை

1. நுழைவாயில்

அரசியல் என்னும் சொல்லை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று கவனித்திருக்கிறீர்களா? ’அந்த ஆபிஸ்ல பாலிடிக்ஸ் ஜாஸ்தி. நிம்மதியா வேலை செய்ய முடியாது. ’ ’ஐயோ அவன்கூட சேரவேகூடாது. அவன் நிறைய பாலிடிக்ஸ் செய்யறவன்.’
அரசியல் என்றால் தந்திரம். வஞ்சகம். நம்பிக்கை துரோகம். மிருகத்தனம். பாலிடிக்ஸ் செய்பவர் பச்சோந்தியுடன் ஒப்பிடப்படவேண்டியவர். அல்லது குள்ள நரியுடன். அல்லது பாம்புடன். ஆகவே, நண்பர்களே பாலிடிக்ஸ் செய்பவர்களிடம் இருந்து விலகி விடுங்கள். அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள்.

அவர்கள் அறிந்த அரசியல்வாதிகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ஆரம்பம் தொட்டு இன்று வரை. எல்லாவற்றிலும் ஒரு போலித்தனம். நடந்து வருவதில். புன்னகை செய்வதில். கைகூப்பி வணக்கம் செலுத்துவதில். அன்புள்ள வாக்காளப் பெருமக்களே என்று பிரியம் பொங்க அழைத்து வோட்டு கேட்பதில். ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று பட்டியல் வாசிப்பதில். அறிக்கைகள் வெளியிடுவதில். எல்லாமே, எல்லாமே போலியானவை.

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவேதான் நிஜ வாழ்க்கையில் யார் பிசகினாலும், யார் ஏமாற்றினாலும், யார் அயோக்கியத்தனம் செய்தாலும் அவரை ஓர் அரசியல்வாதியோடு ஒப்பிடுகிறார்கள்.

அவர்கள் பெற்ற அரசியல் ஞானம் இதுதான். அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளை நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. மூர்க்கமும் முரட்டுத்தனமும் கொண்டவர்களால் மட்டுமே இதில் பங்குபெறமுடியும். மென்மனம் கொண்டவர்களுக்கு அரசியல் லாயக்கில்லை. மீறி கால் பதித்தாலும் அரசியல் இவர்களைச் சும்மாவிடாது. நன்றாகப் படித்து, மாநிலத்தில் முதலாவதாக வந்து ஓர் அரசியல்வாதியாகப் போகிறேன், நான் வாழும் சமூகத்தை மாற்றியமைக்கப்போகிறேன் என்று எந்த மாணவராவது சொல்லி கேட்டிருக்கிறீர்களா? டாக்டர் ஆகலாம். சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்து காசு பார்க்கலாம். பிசினஸ் நடத்தலாம். பொட்டிக்கடைகூட போதுமானதுதான். அரசியல்?

ஐயா, அரசியலுக்கு இணையான லாபகரமான மற்றொரு தொழில் இன்னொன்று இல்லை. உண்மைதான். ஆனால் அதற்காக உயிரைப் பணயம் வைக்க முடியுமா? வேண்டாம் சாமி. அரசியலும் வேண்டாம். அதனால் கிடைக்கும் ஆதாயமும் வேண்டாம். நான் அந்த ஜாதியில்லை. எனக்கு அரசியல் வேண்டாம்.

இவர்கள் முதல் வகையினர்.

இரண்டாவது வகையினர் அரசியலை சாக்கடையாகப் பார்க்கிறார்கள். புத்தரும் காந்தியும் அவதரித்த புண்ணிய தேசம் இது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நமது தியாகிகள் நடத்திய போராட்டங்களுக்கு ஈடுஇணை உண்டா? அப்பப்பா, இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. சும்மாவா வந்தது சுதந்தரம்? உயிரைவிட்டு வாங்கிக்கொடுத்தார்கள் ஐயா. என்ன பயன்? இன்றைய அரசியல்வாதிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் லஞ்சம். ரௌடித்தனம். வெட்டு, குத்து, கொலை. ஈனத்தனமான காரியங்கள் என்னென்ன இருக்கிறதோ அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். மனிதத்தன்மையற்ற செயல்களையும்தான். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பின்னால் ஒரு அடியாள் கூட்டம். அல்லது ஒவ்வொரு அடியாள் கூட்டத்திலிருந்தும் ஒரு அரசியல்வாதி. ச்சே!

சிறிது காலத்துக்கு முன்புகூட தேசம் நன்றாகத்தான் இருந்தது. கக்கன், காமராஜர் போன்ற புண்ணியவான்கள் ஆத்மசுத்தியுடன் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அது அரசியல். இன்று அது போல் ஒருவரை உங்களால் சொல்லமுடியுமா? ஏன் முடியவில்லை? யார் யாரோ வருகிறார்கள். என்னென்னவோ செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். அட இவர் நல்லவர் ஆயிற்றே என்று நினைத்துதான் வோட்டு போடுகிறோம். பிறகு என்ன ஆனது? நான் ஆசையாசையாகத் தேர்ந்தெடுக்கும் தலைவர் என்னை ஏமாற்றிவிடுகிறார். என்னை மட்டுமல்ல என் சமூகத்தையும்.

போதும் நாய்வால் கதை. இனி யாரையும் நம்புவதாக இல்லை. அரசியல் ஒரு சாக்கடை. சுத்தம் செய்யப்போகிறோம் என்று சொல்லி காலை உள்ளே விடுபவர்களை அந்தச் சாக்கடை இழுத்துக்கொண்டுவிடுகிறது. முதலில் முகம் சுளித்தவர்களுக்கு அந்த வாடை நாளடைவில் பழகிப்போய்விடுகிறது. ஒரு மெடிக்கல் சீட்டுக்கு எவ்வளவு தருவாய்? ஒரு கையெழுத்துப் போட்டால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்? பெட்டி கொண்டுவருபவர்கள் மட்டும் உள்ளே வரவும்.

ஊழல் வழக்குகளில் சிக்காத அரசியல்வாதி என்று ஒருவரையாவது சொல்லமுடிகிறதா? இதுவாவது பரவாயில்லை. சிலர் மீது போதைக் கடத்தல் குற்றச்சாட்டு. கொலை குற்றச்சாட்டு. பாலியல் வன்முறை குற்றச்சாட்டு. சாட்சியங்கள் இருந்திருக்கிறார்கள். ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் யாராலும் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.

அதிகாரம் இருக்கும் போது யாருக்கு, எதற்கு அஞ்சவேண்டும் சொல்லுங்கள். எல்லோரையும்விட சட்டம் மேலானது என்பதெல்லாம் வெறும் ஹம்பக்தான். தெருமுனை மீட்டிங்கில் மைக்செட் போட்டு பேசலாம். எழுதிவைத்து பரவசப்படலாம். ஆனால் நிஜத்தில் அரசியல்வாதிகளை சட்டம் நெருங்குவதில்லை. ஒரு கும்பிடு போட்டுவிட்டு வளைந்துபோய்விடுகிறது. ஆகவே நண்பர்களே நானும் விலகிக்கொள்கிறேன்.

மூன்றாவதாக ஒரு பிரிவினர் உண்டு. பாலிடிக்ஸ்? வொய் ஷுட் ஐ கேர்? யார் ஆட்சிக்கு வந்தால் எனக்கு என்ன? யார் ஊழல் செய்தால் எனக்கு என்ன? யார் யாரை வெட்டினால் எனக்கு என்ன? பிஜேபியாக இருந்தால் என்ன காங்கிரஸாக இருந்தால் என்ன? திமுக வந்தால் என்ன அஇஅதிமுக வந்தால் என்ன? நமக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள். இந்தா வைத்துக்கொள் என்று யாராவது நமக்கு அள்ளித்தரப் போகிறார்களா? என் கஷ்டத்தை சுமக்கப்போகிறார்களா? என் வீட்டுச் செலவை ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா? எனக்கு நல்ல வேலை வாங்கித்தரப்போகிறார்களா? எதுவுமே இல்லை. என் மீது ஆர்வம் கொள்ளாத அரசியல் மீது நான் ஏன் ஆர்வம் கொள்ளவேண்டும்?

(தொடரும்)

10 comments:

butterfly Surya said...

பத்ரி & கோ. சரக்கு எல்லாமே அருமை, அற்புதம்.

Good Stuffன்னு சொன்னேன். கோவிக்காதீர்கள்.

தொடருங்கள்.

உலக சினிமா பற்றிய எனது வலை பாருங்கள்.

நிறை / குறை கூறுங்கள்.

KARTHIK said...

// திருமணம் செய்துகொண்டேன்.//

வாழ்துக்கள் மருதன்.

hariharan said...

வாழ்த்துக்கள்,

உங்கள் புதிய தொடர் நிச்சயமாக மக்களுக்கு அரசியல் அறிவைத்தரும் என நம்புகிறேன்.

இன்றைக்கு அரசியலை பெரும்பாலான் மக்கள் வெறுப்பதற்கு காரணம் ஊழல்,வன்முறை தான்.ஆனால் நாம் விலகியிருந்து கொண்டால் நாம் ஒரு சுயநலவாதி தான் ஏனென்றால் ஒவ்வொரு விசயத்தையும் அரசியல் தான் தீர்மானிக்கிறது. அரசியலில் இன்று vacuum என்று சொல்லப்படுகிற வெற்றிடம் காணப்படுகிறது/ அல்லது உண்டாக்கப்படுகிறது. சில நேரங்களில் மட்டும் அரசியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, தமிழகத்தில் இலங்கை தமிழர் விவகாரம் இன்று முக்கியமாக எல்லோரும் விவாதிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஆதரவாளர்கள் என்ற வட்டத்திலேயே மக்கள் இருந்துகொள்கிறார்கள் அல்லது அரசியல் இயக்கங்கள் மக்களை வாக்குவங்கிளாக மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள். அதனால் தான் இன்று அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கமும் பணக்காரர்களின் ஆதிக்கமும் காணப்ப்டுகிறது.
வாக்குகளை மட்டுமே நாம் அளிக்கிறோம் ஆனால் அரசின் கொள்கைகள் மிகச்சிலரின் லாபங்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.

இது மாறவேண்டுமானால் மக்களிடம் அரசியல் அறிவு பெருகவேண்டும். அதற்கு உங்கள் கட்டுரைகள் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்.

மருதன் said...

நன்றி வண்ணத்துபூச்சியார். தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்துங்கள்.

மருதன் said...

நன்றி ஹரிகரன். இந்தத் தொடரை ஆரம்பிக்கும்போது எனக்கு இருந்த சிந்தனையும் இதுவேதான். வேடிக்கை பார்க்கும் கூட்டமாக இல்லாமல், வளைந்துகொடுக்கும் கூட்டமாக அல்லாமல், அரசியலை புரிந்துகொள்பவர்களாக, விவாதிப்பவர்களாக, விமரிசனம் செய்பவர்களாக, மாற்றத்தைக் கொண்டுவருபவர்களாக மக்கள் மாறவேண்டும். சிறு அளவிலேனும் இந்தத் தொடர் அதற்கு உதவினால் நான் மகிழ்வேன்.

butterfly Surya said...

பகுதி இரண்டுல போட்டாச்சு..

நன்றி.

Anonymous said...

Read almost all your books. I am sure this serial will be good. Keep up this good work. None of these politicians know what politics means. They just take advantage of people and exploit them

Anonymous said...

வாழ்த்துக்கள் மருதன்

Anonymous said...

சூப்பர்ர்ர்

Anonymous said...

you can even scan and post amurudha pages here